Tuesday, October 27, 2015

பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன்...சிக்கினான் தாவூத் இப்ராகிமின் 'மாஜி' கூட்டாளி


ஜகார்தா:கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த, நிழல் உலக தாதா சோட்டா ராஜன், 55, இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டான். அவனை, இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மும்பையைச் சேர்ந்த சோட்டா ராஜனின் இயற்பெயர், ராஜேந்திர சதாசிவ நிகல்ஜி. ஆள் கடத்தல், ஆயுதக் கடத்தல், கொலை, கொள்ளை, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு, தாதாவாக வலம் வந்தான். 

சர்வதேச போலீசார்இந்தியாவில் இவன் மீது, 20க்கும் அதிகமான கொலை வழக்குகள் உள்ளன. வழக்குகளில் சிக்காமல் இருப்பதற்காக தலைமறைவானான்.
மும்பையின் மற்றொரு பிரபல நிழல் உலக தாதாவாக விளங்கியவனும், தற்போது, பாகிஸ்தானில் வசித்து வருபவனுமான தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டளிகளில் ஒருவனாக இருந்தவன், இந்த சோட்டா ராஜன். 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீசார், 1995ல், சோட்டா ராஜனை, 'தேடப்படும் குற்றவாளி' என அறிவித்தனர். 

இந்நிலையில், சோட்டா ராஜன், வேறு பெயரில் ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதாக, இந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் 
கிடைத்தது. இது தொடர்பாக அவர்கள், ஒரு மாதமாக, ஆஸ்திரேலிய போலீசாருடன், ரகசியமாக தகவல்களை பரிமாறி வந்தனர். சிட்னியில் பதுங்கியிருந்த சோட்டா ராஜனின் நடவடிக்கைகளை, கான்பெராவில் உள்ள இன்டர்போல் அதிகாரிகளும், ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் சோட்டா ராஜன், சிட்னியில் இருந்து இந்தோனேஷியாவின் சுற்றுலா தலமான பாலிக்கு, விமானத்தில் நேற்று சென்றான். மோகன் குமார் என்ற பெயரில், போலி பாஸ்போர்ட் மூலம் அவன் பயணம் செய்வதை, இந்தோனேஷிய போலீசாருக்கு, கான்பெரா இன்டர்போல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பாலியின் டென்பசர் விமான நிலையத்தில் வந்திறங்கிய சோட்டா ராஜனை, இந்தோனேஷிய போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ரகசிய இடத்தில் அவனை அடைத்து வைத்து, விசாரித்து வருகின்றனர். திடுக்கிடும் தகவல்முதற்கட்ட விசாரணை யில், சோட்டா ராஜன், கடந்த ஏழு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசித்து வந்ததாக, இந்தோனேஷிய போலீசார் 
தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, 'சோட்டா ராஜன், ஒரு வாரத்திற்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவான்' என, இந்தோனேஷிய போலீசார் தெரிவித்துள்ளனர். 

பின்னணி என்ன?

சோட்டா ராஜனின் இயற்பெயர், ராஜேந்திர சதாசிவ நிகல்ஜி. மும்பையில், ஏழ்மையான மராத்தி குடும்பத்தில் பிறந்தவன். கடந்த, 1980களில், சினிமா டிக்கெட்டை, 'பிளாக்கில்' விற்றான்; ராஜன் நாயர் என்பவரிடம் சேர்ந்து, சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டான். ராஜன் நாயருக்கு, 'படா' ராஜன் என்றும், இவனுக்கு, 'சோட்டா' ராஜன் எனவும் பெயர் வந்தது. எதிரிகளால் படா ராஜன் கொல்லப்பட, சோட்டா ராஜன், அந்த கும்பலின் தலைவனானான். 
அப்போது, தாவூத் இப்ராகிம், அருண் காவ்லியுடன் இணைந்து, போதைப்பொருள் கடத்தலிலும் சோட்டா ராஜன் ஈடுபட்டான். அருண் காவ்லியின் மூத்த அண்ணன் பாபா காவ்லி, கடத்தலின் போது கொல்லப்பட்டான்.

இந்த வழக்கில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, சோட்டா ராஜன், துபாய் நாட்டிற்கு தப்பிச் சென்றான். இந்தியாவில், சோட்டா ராஜன் மீது, 20 கொலை வழக்குகள் உள்ளன. இவனுக்கு, சுஜாதா நிகல்ஜி என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். 


ரியல் எஸ்டேட் அதிபர்கள் கிலி

சோட்டா ராஜனுக்கு, மும்பை ரியல் எஸ்டேட் அதிபர்களுடன் நெருங்கிய தொடர்புள்ளது. மும்பையின் ஏராளமான கட்டுமான திட்டங்களில், சோட்டா ராஜன் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால் அவன், போலீஸ் விசாரணையில் தங்களை காட்டிக் கொடுத்து விடுவானோ என, அவனுக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் அதிபர்கள் பீதியில் உள்ளனர். 


எதிரியானது எப்படி? 

ஆரம்ப காலத்தில் சோட்டா ராஜனும், தாவூத் இப்ராகிமும் ஒற்றுமையாகத் தான் இருந்தனர். 1992ல், தாவூத்தின் கையாளான சுபாஷ் தாக்கூர் என்பவன், சோட்டா ராஜனின் ஆட்களில் மூன்று பேரை கொன்றான். 

தாவூத் இப்ராகிம் மேற்பார்வையில் நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள், சோட்டா ராஜனுக்கு பிடிக்கவில்லை. மக்கள் விரும்பும் தாதாவாக மட்டுமே இருக்க விரும்பினான். ஆனால் தாவூத், மக்களுக்கு எதிரான தாதாவாக உருவானான். இதனால், தாவூத்தின் எதிரியாக சோட்டா ராஜன் உருவெடுத்தான். இந்த இரு கும்பலுக்கும் இடையே நடந்த சண்டையில், ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.


சோட்டா ராஜனை பிடிக்க, இந்திய அரசு நீண்ட காலமாக முயற்சித்து வந்தது. இந்த முயற்சிக்கு, மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. அவனை கைது செய்த 
இந்தோனேஷிய அரசுக்கு நன்றி. சோட்டா ராஜன், இந்தியாவிற்கு கொண்டு வரப்படுவான். அடுத்ததாக, மும்பை தொடர் குண்டுவெடிப்பிற்கு காரணமான நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் கைது செய்யப் படுவானா என்பதை தற்போது கூற முடியாது. ராஜ்நாத் சிங்மத்திய உள்துறை அமைச்சர் - பா.ஜ., 

நன்றி :- தினமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.