Tuesday, October 27, 2015

திருமூலரின் அறிவியல் சிந்தனை! - -முனைவர் மலையமான்



திருமூலரின் பாடல்களில் அறிவியல் கருத்துகள் பல உள்ளன. அவற்றுள் ஒன்றிரண்டைக் காண்போம். மனித உயிர், கருவில் தோன்றுகிறது. இதற்குக் குரோமோசோம்கள் காரணம் என்று இன்றைய அறிவியல் ஆய்வு கண்டுபிடித்துள்ளது. இந்தக் குரோமோசோம்கள் ஆணின் விந்திலும் உள்ளது; பெண்ணிடமும் உள்ளது. இவற்றில் ஒன்று இணையும்போது கரு தோன்றுகிறது. இந்த அறிவியல் நுட்பத்தைத் திருமூலர் உணர்ந்திருந்தார். அவர் குரோமோசோம்

என்ற சொல்லைக் கூறவில்லை. ஆனால், அவற்றின் செயற்பாட்டை குறிப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.



""திருவின் கருக்குழி தேடிப்புகுந்த

துருவம் இரண்டாக ஓடி விழுந்ததே'' (154)



மனித உள்ளமும் உடலும் நெருங்கிய தொடர்பு உடையவை. உள்ளம் சோர்ந்தால் உடல் வாடும். மனநலமே உடல் நலத்திற்கு அடிப்படை. மனநலம் இன்று மருத்துவத்தின் ஒரு கூறாக உள்ளது. "உள்ளம் உடைமை' என்று திருவள்ளுவரும் கூறியுள்ளார். இந்த நுட்பத்தைத் திருமூலர் மறைமுகமாக - உருவக நிலையில் உரைத்தார். ""உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்'' என்று இரண்டுக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பாகக் கூறினார்.

உடல் நலமாக இருக்க வேண்டும். இதற்குச் சத்துணவும் உடற்பயிற்சியும் அடிப்படையாக இருக்கின்றன. உடல் நலமாக இருப்பதற்கு உயிர்ச்சத்து எனப்படும் விட்டமின்கள் தேவை. பால், கீரைகள் முதலிய ஊட்டம் தரும் உணவுப் பொருள்கள் தேவை. சிலர் இந்த உண்மையை உணர்வதில்லை. முறைப்படி தம் உடம்பைக் கவனித்து ஓம்புவதில்லை. அதன் விளைவாக அவர்களின் உடல்நலம் கெடுகிறது. பிணிகள் பற்றுகின்றன. அவர்களின் வாழ்நாளும் குறுகி விடுகிறது. இந்த உண்மையைத் திருமூலர் கூறியுள்ளார். ""உடம்பார் அழியின் உயிரார் அழிவார்'' (204) என்ற பாடலில் சுட்டியுள்ளார்.

உடற்கூற்றியல் அண்மைக் காலத்திற்கு உரியது. இது மருத்துவத் துறையின் சிறந்த அறிவியல் பகுதி. திருமூலர் காலத்தில் இத்துறை இல்லை. ஆனால், திருமூலர் உடற்கூற்று அறிவியல் துறையை அறிந்திருக்கிறார். மனிதனின் இதயம் உடலின் இடப்பக்கத்தில் இருக்கிறது என்றும், அது பாதிப்புக்கு உள்ளாகும், அதனால் மரணமும் நேரும் என்ற விளைவையும் அவர் தெளிந்திருந்தார். அதனால், அன்றே இப்படிப் பாடியுள்ளார்.



""அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்

மடக்கொடி யாரொடும் மந்தணம் கொண்டார்

இடப்பக்கம் இறைநொந்தது என்றார்

கிடக்கப்படுத்தார் கிடங்தொழிந்தாரே'' (5: 6)



மாரடைப்பு எதிர்பாரா நிலையில் திடீரென்று வரும் என்ற கருத்தும் இப்பாட்டில் உள்ளது.

ஆழிப்பேரலையைப் பற்றித் திருமூலர் பாடியுள்ளார்.



""அலைகடல் ஊடறுத்து அண்டத்து வானோர்

தலைவன் எனும்பெயர் தான்தலை மேற்கொண்டு

உலகார் அழற்கண்டு உள்விழாது ஓடி

அலைவாயில் விழாமல் அஞ்சல் என்றானே'' (5: 2)



என்பது திருமூலர் வாய்மொழி. இவ்வாறு திருமூலரின் பாடல்களில் அறிவியல் உண்மைகள் மறைமுகமாகவே எடுத்துரைக்கப்பட்டுள்ளன.



-முனைவர் மலையமான்

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.