Sunday, October 18, 2015

சீனப்பட்டாசைத் தடுக்கவேண்டியது யார்?


அடுத்த மாதம் 10–ந் தேதி தீப ஒளித்திருநாளாம் தீபாவளி வருகிறது. எவ்வளவு போனஸ் வரும்?, அதற்கு என்னென்ன செலவுகள் இருக்கும்? என்று மனதில் உள்ள கால்குலேட்டர்களை வைத்து கணக்கிடும் வேலைகள் இப்போதே குடும்ப தலைவர்களுக்கு தொடங்கிவிட்டது. இல்லத்தரசிகளுக்கோ இந்த ஆண்டு தீபாவளிக்கு என்னென்ன பலகாரங்கள் செய்யலாம்? என்பது தொடங்கி துணிமணிகள் உள்பட பல யோசனைகள் நிழலாடும். ஆனால், எது இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பட்டாசு என்றால் தனி மகிழ்ச்சிதான். பட்டாசு இல்லாமல் தீபாவளி இல்லை.

தீபாவளி நெருங்கும் இந்த வேளையில், சென்னை முதன்மை சுங்க ஆணையர் வெளியிட்டுள்ள ஒரு விளம்பரம், ஒரு அபாய எச்சரிக்கையை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. ‘‘வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள பட்டாசுகள் தொடர்பாக ஓர் எச்சரிக்கை’’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த விளம்பரத்தில், ‘‘இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், பட்டாசுகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி கிடையாது. ஏனென்றால், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் பொட்டாசியம் குளோரைடு என்னும் வேதிப்பொருள் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த வேதிப்பொருள் எளிதில் தீப்பிடிக்கக்கூடியது மட்டுமன்றி, திடீரென்று வெடிக்கக்கூடியதாகும். மேலும், இவ்வகைப் பட்டாசுகள் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவதோடு, சுகாதாரக்கேடுகளையும் விளைவிக்கும். பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு நலன் கருதி, மேற்கூறிய வெளிநாட்டு பட்டாசுகளை யாராவது கையிருப்பில் வைத்திருந்தாலோ, அல்லது விற்பனை செய்தாலோ, அதன் விவரங்களை உடனே தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’’ என்று கூறப்பட்டு இருந்தது. சீனாவில் இருந்துதான் சட்டவிரோதமாக இந்த பட்டாசு இறக்குமதி செய்யப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதை சொல்வதற்கு ஏன் தயக்கம்?

சீனாவில் உற்பத்தி செய்து கள்ளத்தனமாக கொண்டுவரப்படும் பட்டாசுகள் பொட்டாசியம் குளோரைடு கொண்டும், தமிழ்நாட்டில் சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசு அலுமினியம் நைட்ரேட்டாலும் உற்பத்தி செய்யப்படுகிறது. பொட்டாசியம் குளோரைடால் தயாரிக்கப்படும் பட்டாசுகள் அதிக குளிர் பிரதேசத்துக்குத்தான் பொருத்தமானது. இந்தியா போன்ற வெப்பமான பிரதேசங்களில் எளிதில் தீப்பிடிக்கக்கூடியது. திடீர் விபத்துக்களை உருவாக்கி ஆனந்த தீபாவளியை கண்ணீர் தீபாவளியாக்கிவிடும். பொட்டாசியம் குளோரைடைவிட, அலுமினியம் நைட்ரேட் விலை இருமடங்குக்கு மேல் அதிகம், அதுமட்டுமல்லாமல், அலுமினியம் நைட்ரேட் பயன்படுத்தப்படும் அளவில் 10–ல் ஒரு பங்கு பொட்டாசியம் குளோரைடை பயன்படுத்தினால் போதும். இதுபோல பல காரணங்களால்தான் ஆபத்து மிகுந்த சீன பட்டாசின் விலை மிகக்குறைவாக இருக்கிறது. ஆனால் குறைந்த விலை என்பதால் ஆபத்தை விலை கொடுத்து வாங்கமுடியுமா? சீனபட்டாசு இறக்குமதி செய்ய அனுமதி இல்லை. அப்படியும் இந்தியாவுக்குள் நுழைகிறது, தாராளமாக கிடைக்கிறது என்றால் அதைத்தடுக்கவேண்டிய அதிகாரிகள் ஏன் செய்யவில்லை? என்று மத்திய–மாநில அரசுகள் கேட்கவேண்டும்.

இந்த பட்டாசுகள் சீனாவில் இருந்து திருட்டுத்தனமாகத்தான் கொண்டுவரப்படுகின்றன, மும்பையில் இருந்தும், தூத்துக்குடி துறைமுகம் மூலமாகவும் கண்டெய்னர்களில் கொண்டுவரப்படுகின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழக சட்டசபையில் அமைச்சரே சொல்லியிருக்கிறார். எனவே, சுங்கத்துறை பொதுமக்களுக்கு சொல்வதுபோல, எப்படி வந்தது? என்று அந்த துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவேண்டும். மேலும், சீன பட்டாசை விற்பனை செய்யமுடியாத சூழ்நிலையை உருவாக்கிவிட்டால் சரக்குகள் தேங்கிப்போய்விடும், இனி வியாபாரிகள் யாரும் வாங்கவும்மாட்டார்கள். அதை தீவிரமாக செய்யவேண்டும்.

நன்றி :-தினத்தந்தி

0 comments:

Post a Comment

Kindly post a comment.