Tuesday, October 6, 2015

பழைய ஆண்ட்ராய்டு செல்போனை விற்கப் போகிறீர்களா? கவனியுங்கள்! - கோபிகிருஷ்ணா.

  • புகைப்படங்கள்
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அதி நவீன ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசிகள் சந்தையை ஆக்கிரமித்துள்ளன.
பழையன கழிதலும், புதியன புகுதலும் போகிப் பண்டிகைக்கு மட்டுமல்ல, எங்களது போனுக்கும்தான் என்று ஓராண்டுக்கு ஒரு முறை செல்லிடப்பேசிகளை மாற்றும் இளம் தலைமுறையினரும் அதிகரித்து வருகின்றனர்.
அதேநேரத்தில், மற்றொருபுறம் பழைய செல்லிடப்பேசிகளை விற்பனை செய்யும் நடைமுறைகளும் முன்பை விட அதிகரித்துள்ளன.
ஆனால், அவ்வாறு விற்கப்படும் பழைய ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசிகளில் உள்ள நமது தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை நாம் முறையாக அழிக்கிறோமா? என்பது சந்தேகம்தான்.
அப்படி அழித்தாலும், அந்தத் தகவல்களை எளிதாகப் பிறர் மீட்டெடுக்க முடியும். உங்களுடைய செல்லிடப்பேசியில் பதிவான தகவல்கள் பிறரால் கையாளப்படாமல் இருக்க மூன்று வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் உங்கள் தகவல்களை எந்த வகையிலும் திருட முடியாது.

முதல் நிலை
உங்களது செல்லிடப்பேசியின் செட்டிங்ஸ் பகுதிக்குள் "செக்யூரிட்டி' என்ற தெரிவை (Option) தேர்வு செய்ய வேண்டும். அதில் Encrypt Phone'   என்ற தெரிவை அழுத்தி எளிமையான பாஸ்வேர்ட் (உதாரணம்-0000 அல்லது 1234) ஒன்றைக் கொடுத்தால், உங்கள் தகவல்கள் அழியத் தொடங்கும்.
தகவல்களை அழிக்க குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். அந்தச் சமயத்தில் சில முறை செல்லிடப்பேசி Restart ஆக வாய்ப்புள்ளது. எனவே அந்த நடைமுறை முழுமையடையும் வரை உங்களது செல்லிடப்பேசி பேட்டரியின் சார்ஜ் போதிய அளவில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
செல்லிடப்பேசியில் உள்ள தொலைபேசி எண்களையும், குறுஞ்செய்திகளையும் Backup செய்ய விரும்பினால், 'Encrypt Phone' முறையைப் பயன்படுத்துவதற்கு முன்பு, உங்களது மின்னஞ்சல் முகவரியுடன் அந்தத் தகவல்களை Sync செய்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், அந்தத் தகவல்கள் செல்லிடப்பேசியிலிருந்து அழிக்கப்பட்டாலும், உங்களது மின்னஞ்சல் முகவரியில் பத்திரமாக இருக்கும்.

இரண்டாம் நிலை

செட்டிங்ஸ் பகுதியில் உள்ள Backup & Restart தெரிவைத் தேர்வு செய்து Factory Reset கொடுக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் செல்லிடப்பேசியில் பதிவாகியுள்ள உங்களுடைய சுய விவரங்கள் உள்பட அனைத்துத் தகவல்களும் அழிக்கப்படும்.

மூன்றாம் நிலை

அதற்கு அடுத்து, உங்கள் செல்லிடப்பேசியில் உள்ள Es[ Internal memory ] முழுவதையும் நிரப்பும் வகையில் முக்கியத்துவம் இல்லாத பாடல்கள், வீடியோக்கள், படங்கள் ஆகியவற்றைச் சேமிக்க வேண்டும்.
அதன் பிறகு மீண்டும் Factory Reset  கொடுத்து செல்லிடப்பேசியில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும். ஒருவேளை செல்லிடப்பேசியை வாங்குபவர், உங்களது தகவல்களை மீட்டெடுக்க முயன்றாலும் கூட, போலியாக நீங்கள் சேமித்து அழித்த பயனற்ற படங்கள், பாடல்கள் மட்டுமே அவருக்குக் கிடைக்கும். உங்களது தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் உங்களிடம் மட்டுமே இருக்கும்.
ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசிகளை விற்கும்போது இந்த மூன்றையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி :-தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.