Tuesday, October 13, 2015

"கோர் பேங்கிங்' வசதிக்கான பணிகள்: வேலூர் அஞ்சல் கோட்டத்தில் 100% நிறைவு !



வேலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் ஒருங்கிணைந்த வங்கிச் சேவை "கோர் பேங்கிங்' (Core Banking Solution) வசதிக்கு மாற்றும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இது நாட்டிலேயே முதல் முறை என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

அனைத்து அஞ்சலகங்களிலும் "கோர் பேங்கிங்' வசதியை ஏற்படுத்த "எங்கேயும், எப்போதும்' எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக, ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2013-ஆம் ஆண்டில் டிசம்பர் 16-இல் நாட்டிலேயே முதல் முறையாக சென்னை கிரீம்ஸ் சாலை அஞ்சல் நிலையம் "கோர் பேங்கிங்' வசதிக்கு மாற்றப்பட்டது. இவ்வாறாக மாற்றப்பட்டுள்ள தமிழகத்தில் 1,000-க்கும் மேற்பட்ட அஞ்சலகங்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு பணப் பரிமாற்றம், பணம் எடுத்தல் உள்ளிட்ட பல வசதிகளை வாடிக்கையாளர்கள் எளிதாகப் பெற முடியும்.

இது குறித்து அஞ்சல் துறையின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில், அண்ணா சாலை, அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை வடக்கு, தெற்கு உள்ளிட்ட 12 கோட்டங்கள் உள்ளன.

345 அஞ்சலங்களில்..: இவற்றின் கீழுள்ள 572 அஞ்சலகங்களில், நிகழாண்டு அக்டோபர் 5 வரை 345 அஞ்சலகங்கள் "கோர் பேங்கிங்' வசதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 227 அஞ்சலகங்களிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வேலூர் அஞ்சல் கோட்டம் முதல்முறை: நாட்டிலேயே முதலாவதாக, வேலூர் கோட்டத்துக்குட்பட்ட 152 அஞ்சலகங்களும் "கோர் பேங்கிக்' வசதியைப் பெற்றுள்ளன.
 இந்தக் கோட்டத்தில் கடைசியாக, அரியூர் துணை அஞ்சலகம், செப்டம்பர் 28-ஆம் தேதியன்று இந்த வசதிக்கு மாறியது.

இதனால், நாட்டில் உள்ள அனைத்து கோட்டங்களில், வேலூர் அஞ்சல் கோட்டம் தனிச் சிறப்பைப் பெற்றுள்ளது. மற்ற கோட்டங்களிலும் விரைவில் பணிகள் நிறைவு பெறும். இதன் பின்னர் தமிழகத்தில் எங்கிருந்தும் அனைத்து விவரங்களையும் எளிதில் பெற முடியும் என்றனர். 

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.