Monday, September 28, 2015

மதவாதமும் வாழ்வியலும் --பிரம்மா





பார்த்தும் பார்க்காமல் போனோருக்கு இடையில், நேரம் வகுத்து கருத்துகளை பகிர்ந்தவர்களுக்கு நன்றி. விமர்சனங்கள் மட்டுமே படைப்பின் அங்கீகாரம் என்பதை ஆழமாக நம்புகிறேன்.

விமர்சனங்களுக்கு விளக்கங்கள் கொடுக்காமல் இருக்கும் பக்குவத்திற்கு வர இன்னும் சில நாள் பிடிக்கும் என்பதால், இக்கட்டுரை விரிகிறது.
பாவல் மற்றும் சக்திவேல் உட்பட சிலரது கருத்துகள் சிந்தனைக்குரியவை.

விபூதி இடுதலும், மாட்டுக்கு திலகமிடுவதும், ஆரத்தி எடுப்பதும் மதக்குறியீடுகள் என்பதே அல்ல. அது ஒரு வாழ்வியல் மட்டுமே. அப்படியே அவை ஒரு அகங்கார மதத்தின் அடையாளங்களாக சிலருக்குத் தோன்றும் என்பதற்காக வாழ்வியல் ஒட்டிய படைப்புகளை நான் கொடுக்கத் தயங்க மாட்டேன்.  

தமிழகத்தைப் பொறுத்தவரை சமயச் சடங்குகளுக்கும் வாழ்வியலுக்கும் மிகுந்த தொடர்பு இருக்கிறது. நெல்லையில் இசுலாமிய பெண்கள் இன்றும் அம்மன் கோவிலில் புற்றுமண்ணை நெற்றியில் இட்டுக்கொள்கிறார்கள், அதே ஊரின் இந்துக்கள் தர்க்காவில் மந்திரித்துக் கொள்வார்கள். பயபக்தி நிறைந்த என் இந்து நண்பர் ஒருவரின் மேசையில் முழுமுதல் தெய்வமாய் வேளாங்கன்னி நின்று கொண்டிருப்பாள்.

இவை அனைத்தும் அடிப்படையில் மக்களின் நம்பிக்கையும், வாழ்வியலும் மட்டும் தான். மதவாதம் அல்ல.

மனித கண்டுபிடிப்புகளிலேயே மிகவும் கடினமானது மதங்கள். 

இந்தியாவைப் பொறுத்தவரை மதங்கள் இல்லாத வாழ்வியலைக் கற்பனை செய்வது, அதனினும் கடினம்.  மதச் சடங்குளும், வாழ்வியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து தான் இருக்கிறது. அவற்றை ஒதுக்கிவிட்டு என் படைப்புகள் இருக்காது. அதே சமயத்தில் ஒரே படைப்பில் அனைத்து மதங்களையும் 

 பல படைப்புகளுக்குப் பிறகே என்னுடைய பாணி(pattern), சாய்வு (Alignment)  என்ன என்று யூகிக்க முடியும் என்று நினைக்கிறேன்.
  
தனது விமர்சனத்தில் வெறும் கிறிஸ்துவர்களையும் முஸ்லிம்களையும் மட்டும் சுட்டிக்காட்டும் பாவல் ஏன் பௌதிகர்களையும், அதே காரைக்குடியில் கடைகள் வைத்திருக்கும் சமணர்களையும், சில நாத்திகர்களையும் விட்டுவிட்டார் என்று நான் கேள்வி கேட்டால், அது குறும்புக்கேள்வி தான்.

மாட்டைத் தின்பவர்களைப் பற்றி மட்டும் குறிப்பிடுகிறாரே! ஏன் பன்றி தின்பவர்களும், எலி தின்பவர்களும், உங்கள் கண்ணுக்குத் தெரிய வில்லையா என்று நான் கேள்வி எழுப்பினால், விமர்சனத்தின் சாரம்சத்தை புரியாமல் குறை புகுத்தும் நோக்கமாக மட்டும் தான் இருக்க முடியும்.

ஆங்கிலம் பேசுவோர்கள் தமிழை அவமதிப்பதாகவோ, பேன்ட் சட்டை அணிந்து விடுவதாலேயே அவர்கள் லுங்கி கட்டுவோருக்கு எதிரானவர்கள் என்னும் சித்தரிப்போ, சௌகரியமான குற்றச்சாட்டு!   

விளம்பரத்தில் காட்டப்பட்டுள்ள கோவிலும், அரண்மனையும், தர்க்காவும் (கவனித்தீர்களா என்று தெரியவில்லை) கலைநயம் மிக்க கட்டிடங்கள் மட்டுமே. தேவாலயத்தை காட்டியே தீர வேண்டும் என்கிற அரசியல் கட்டாயங்களுக்குள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை.

மாடு தின்பவர்களின் பிள்ளைகள், வரலாற்றின் ஆதியில் மாடு தின்றவர்களின் பிள்ளைகள், வேன் முன்னே ஓடி வந்தவரின் பிள்ளைகள், வேனை ஒட்டி வந்ததவரின் பிள்ளைகள், இவர்கள் அனைவரும் எங்கு படிப்பார்கள், தாத்தா ஏன் சட்டை போடாதவராக இருக்கிறார்?, பாட்டி ஏன் பட்டை போட்டு இருக்கிறார்? அம்மா ஏன் சோறு ஊட்ட வேண்டும்? அப்பா ஊட்டக்கூடாதா? என்ற உட்கூறுகளை ஆராய்ந்து கொண்டிருக்க இது சுயகருத்து பிரதிபலிக்கும் படம் இல்லை. எடுத்துக்கொள்ளப்பட்ட அந்தப் பணி அதை ஓட்டியதும் இல்லை.

பட்டுப்புடவை விளம்பரத்தில், புடவை எடுத்துக்கொடுக்கும் கடைக்காரரின் மனைவி, பாவம், என்ன புடவை உடுத்துவார் என்கிற கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல?

காவியும், பச்சையும், எனக்கு அற்ப நிறங்கள் மட்டுமே. அதன் பின்புல விமர்சனங்கள் அவரவர் பார்வையில் விரிபவை. அதை அலட்சியம் செய்வதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை.

இவற்றை எல்லாம் தாண்டி இந்துத்துவக் கொள்கைகளைப் பிரகடனப் படுத்துவதற்காகவே இவ்விளம்பரம் எடுக்கப்பட்டதாக புரிந்தால் என் புன்னகை மட்டுமே பதில்!

இவ்வகையில், சக்திவேல் முதலிட்ட சிலரின் கருத்து ‘கல்வி வியாபாரிக்கு ஏன் விளம்பரம் செய்கிறாய்?’. என் மண்டையில் அறைந்த ஆணித்தரமான கேள்வி.

இயக்குனர் ஆகியே தீர வேண்டிய சூழ்நிலையில், இது போன்ற ‘கார்ப்பரேட்’ கம்பனிகளுக்கு, என்னைப் போன்றோர் மறைமுகமாகவும் நேர்முகவாகவும் படங்கள் செய்ய வேண்டியதாகிவிடுகிறது. சிலர், விமர்சனங்களை வரவேற்று முகபுத்தகத்தில் போடுவோம். சிலர், காசை மட்டும் வாங்கிக் கொண்டு படத்தை பதுக்குவோம்.  
விரைவில் திருந்துவோம்!

என்னை ஆழமாக சுயபரிசோதனை செய்து கொள்ளத் தூண்டிய அன்புத் தம்பிகளுக்கு நன்றி!!

Bramma Nathan's profile photo


Posted by பிரம்மா at 8:23 PM No comments: 

0 comments:

Post a Comment

Kindly post a comment.