Saturday, April 4, 2015

கொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்) வித்யாசாகர்

Image result for கொம்பன்

கொம்பன்தான்; மண்ணுக்காகவும் மண்ணின் நீதிக்காகவும் எவன்லாம் போராடுறானோ அவன்லாம் கொம்பன்தான். பெத்தவளுக்கு பிள்ளையாவும் கட்டினவளுக்கு புருஷனாவும் இருப்பதுக்கும் மேல ஒரு படியேறி பொண்ணைப் பெத்தவராச்சேன்னு அவர் காலைத் தொட்டு வணங்கும் மனசு கொம்பன் மனசு தான். தப்பு யார் பண்ணலை? எல்லோர் கிட்டயும் தான் தப்பு நடக்குது; ஆனா அது தவறுன்னு புரிஞ்சதும் அதை ஏற்று மன்னிச்சிக்கன்னு போய் மன்னிப்புக் கேட்கிற குணம் கொம்பனின் குணம் தான். கோயிலுக்கு மனசு சுத்தமாப் போகணுமே யொழிய சாதி புத்தியாப் போகக் கூடாதுன்னு நினைக்கிற சீர்திருத்த அறிவு கொம்பனுக்கான அறிவு தான்., பெண்களை இழிவு படுத்துறது தவறு’ பெண்களை வெறும் போக பொருளாப் பார்ப்பது பிறப்பிற்கு இழுக்குன்னு உணர்றது உத்தமம் தான், பெண்களை பெருசா மதிச்சா அவர்கள் பெருசா நடக்கும் பண்புல ஒரு பரம்பரையே நாளைக்கு புரண்டுபடுக்கும்னு நம்பும் நம்பிக்கையான ஆணை ஒரு கொம்பனா பார்ப்பதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை.

நிறைய இடங்கள் சுவாரசியம் கூட்டியும், நிறைய வசனங்கள் ஆமென்று தலையாட்டவைக்கவும், நிறைய காட்சிகள் நம் ஊரை மனிதர்களை உறவுகளை நினைவு படுத்தவும் செய்கிறது. அந்த ராஜ்கிரண் சாமியாடி ஓடிவருகையில் காட்டும் ஆக்ரோசம் நடிப்பின் உச்சம் மட்டுமல்ல கலையம்சதின் நிதர்சன சாட்சியாகத் திகழ்கிறது. அவரை ஒரு அப்பாவாகவே உள்வாங்கிக் கொண்டது அவரின் திறன் என்றாலும் அவரை இத்தனை நேர்த்தியாக இடம்பார்த்துப் பொருத்திய பெருமை இயக்குனரையும் சாரும்.

“இந்தா மோதிரம் மாட்டிக்கோ.. இந்தா பட்டுவேட்டி கட்டிக்கோ.. இனி மாமனார்ங்க இல்லை’ பெண்ணைக் கட்டின மருமகனுங்கதான் இப்படி மாமனார்களுக்கு வாங்கித் தருணமாம்; அப்படின்னு நான் சொல்லலைப்பா உங்க மாப்பிள்ளைச் சொன்னாருப்பா” என்று கண்ணடிக்கும் பழனியும் பழனியின் அப்பாவும் அசத்தல்.

கதாநாயகி பழனி வந்துப் போகுமிடங்கள் மிக நேர்த்தி. அப்பாவிற்காக வெறுமனே பறிந்துப் பேசாமல் பாசத்தின் வெளிப்பாடாக மட்டுமே அவர் வரும் காட்சிகள் மனசுக்குள் சற்று கூடுதலாகவே கைதட்டவைக்கிறது. அடிதடி காட்சிகள், குத்து, கொலை என்று கொஞ்சம் ரத்தத்தால் மிரட்டி இருந்தாலும் அதற்கான நியாயத்தை எடுத்துக்கொண்டு வந்துவிடும் காட்சியிடம் முகம் சுழிப்பு வரவில்லை; மாறாக இவ்வளவு அழகாக ஒவ்வொரு காட்சியையும் நினைவில் இட்டுச் சென்றதில் இயக்குனர் கொஞ்சம் காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம் தான்..

கொம்பனின் அத்தனை அசைவுகளும் அழகு. மாமனார் என்பதைக் கூட உணராது தாண்டும் மூர்கமான கோபத்தின் யதார்த்தத்தைக் கூட கார்த்தி அச்சுபிசகாமல் நடித்துள்ளார். உடம்பின் வளைவு, பேச்சின் நளினம், உணர்வில் சுழிக்கும் முகம், சிரிப்பில் மலரும் பார்வையின் அழகு என காட்சிதோறும் மிளிர்கிறார் தம்பி கார்த்தி. நிறையக் காட்சிகளில் சிவக்குமார் எட்டிப் பார்க்காமலில்லை என்றாலும், அதையும் தாண்டிய மிகப்பெரிய நடிப்புத்திறன் அவரிடம் உண்டென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

குறிப்பாக, பெண்ணைப் பெற்ற அப்பா நெற்றி மாதிரி கணவன் என்பவன் அதில் வைக்கும் சின்ன பொட்டு மாதிரி, சின்னதா இருந்தாலும் பொட்டு அழகு எனும் வசனங்கள் சமகாலத்தின் உறவுகளின் மீதான மதிப்பீடுகளை முன்வைப்பதாகவும் அதேநேரம், ஒரு பெண்ணைக் கட்டித்தந்த அத்தனை அப்பாக்களும் மருமகன்களுக்கு மாமா மட்டுமல்ல இன்னொரு அப்பாவிற்கு நிகர்தான் எனும் வசனமுமெல்லாம் உறவில் இன்னும் கொஞ்சம் நெருக்கத்தை ஏற்படுத்தி வாழ்வை அழகுபடுத்துவதாக இருந்தது.

“ஐயோ சம்மந்தி வீடா மனுசன் போவானா அங்க” எனும் வாழ்வைச் சொரியும் வசவு வசனங்களையெல்லாம் உடைத்துக்கொண்டு “இருண்ணே நானும் வரேன்னு” கொம்பனின் அம்மா அவனுடைய மனைவி மாமனாரோடு கொம்பனின் அடாவடியை எதிர்த்துக்கொண்டுப் போவது கதையம்சத்தின் உயர்வு. இப்படி அங்கங்கே படம்தோறும் அவர் அண்ணே அண்ணேன்னு ராஜ்கிரனோடு பாசத்தில் குழைய குழைய வளையவருவதெல்லாம் “நமது தற்கால உறவுகளின் தனி நியாயங்களை மாற்றி; பொது சமூகத்தின் சமதர்ம நியாயத்துள் கொண்டுச்சென்றுப் பார்த்தவரின் பார்வையாகவே திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.


கோவைசரளா ஒரு செதுக்கப்பட்ட அம்மா பாத்திரம். இன்னொரு ஆச்சிக்கு இப்படத்தின் பாத்திரம் முதற்புள்ளி என்பதை கொம்பன் வரலாற்றின் நினைவுள் தனது பெயரையும் தக்கவைத்துக்கொள்கிறது. அதுபோல ஐயா தம்பி ராமையாவின் ஒரேபோன்ற சில உணர்வுமருத்த நடிப்பை வசனத்தைப் போன்று ஏதுமில்லாமல் புதுப்பொலிவுடன் அழகாக நடிப்பின் வெளிப்பாடாகவே இப்படத்தில் வந்துப் போகிறார்.

“எனக்கு கல்யாணம் ஆகலைன்னு கூட சொல்லுக்கா ஆனா எனக்குப் புள்ளை இல்லைன்னு மட்டும் சொல்லிடாதேக்கா என்று அவர் உருகுவதும், கார்த்தி வீட்டினுள் நுழைய “தோ இவன் தாக்கா ஏம்புள்ளைன்னு கொம்பனைக் காட்டுவதும் நெகிழ வைக்கிறது. அதுபோல, சமூக அக்கறை என்பது யாரோ ஒருத்தரைச் சார்ந்தது மட்டுமல்ல, ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கதாநாயகன், வீரன், திறமைசாலி இருக்கிறான் அவனை வெளிக்கொண்டு வா என்று சிரிப்பின் ஊடே யதார்த்தமாகச் சொன்னவிதமும் நிறையப்பேருக்கு புரிந்திருக்கும். கருணாஸ் கூட கொஞ்சம் இப்படத்தின் மூலம் ஒரு நல்ல பாத்திர நடிகராக நினைவில் நிற்கிறார்.

மெல்ல வளஞ்சது ஆகாயம்., அப்பப்பா பச்சைவிட்டுப் போச்சே., அடி பிச்சுப்பூ உன்னைப் பார்த்தப்போ பேச வார்த்தை வல்லே.. போன்ற இனியப் பாடல்களும், பாட்டுக்கு ஏற்ற ஆட்டமும், அதற்கு ஏற்றாற்போன்ற காட்சியமைப்புமென ரசிகர்களை எழுந்துப் போகாமல் பாட்டிலும்கூட இருக்கையில் அமரவைத்தது சிறப்பு தான்.

கணவன் மனைவி, அம்மா பிள்ளை, அப்பா மகள் எனும் உறவுகளெல்லாம் மனிதராகப் பிறந்ததன் பயன். பொக்கிஷ நினைவு என்பது குடும்பத்துள் வாழும் மனிதர்களின் கூடிய சிநேகமும் மன்னிப்பும் ஏற்பும் விட்டுகொடுப்பும் பெருந்தன்மையும் தானில்லையா? அதனால் தான் இந்தக் கொம்பன் மனதில் சிம்மாசனம் தேடுகிறான்.

லட்சுமி மேனன் எங்கோ சேரநாட்டில் பிறந்தவள் என்றாலும் தமிழரின் ஆதிசொந்தம் என்பதை ரத்தத்தில் கொண்டுள்ளாற்போல் அத்தனை அசாத்திய அசைவு பேச்சு நடிப்பென பளிச்சென மனசுக்குள் தமிழச்சியாய் சிரிக்கிறார்.

ஒரு சிறந்த திரைப்படம் என்பது வேறென்ன; நல்ல நடிகர்கள், நல்ல கலைஞர்கள், சரியான ஆளுமை, அதற்கேற்ற திட்டம், எல்லோரின் ஒத்துழைப்பு என்பதுதானென்றால்; இந்தக் கொம்பன் அந்த வட்டத்தில் வெற்றியடைவான்.

சிலருக்கு அடிதடி காட்சிப்படம் என்பதாலும், கூடும் குறையும் யதார்த்தம் மீறிய சில எடுத்துக்காட்டத்தக்கக் காட்சிகளாலும் படம் மறுப்பு உணர்வை ஏற்படுத்தலாம், ஆனால் உறவுகளின் மனிதர்களின் யதார்த்தத்தை, உயர்ந்த குணத்தை, பாசம் பொங்கும் அழகு முகங்களை சிறந்த காமிராக் கண்களுள் கொண்டுவந்துக் காட்டியதன்மூலம் இந்த கொம்பன் வெற்றியடைவான். வாழ்த்துக்கள்!!

வித்யாசாகர் vidhyasagar1976@gmail.com2 comments:

  1. கொம்பன் திரை விமர்சனம் சூப்பர் ... விமர்சனம் செய்வதில் நீர் கொம்பன் தான் !!!

    ReplyDelete

Kindly post a comment.