Monday, November 10, 2014

தமிழகத்துக்கு நீர் ஆதாரமான பகுதியில் கேரளம் புதிய அணை

அணை கட்டுவதற்கு தூண்கள் அமைப்பதற்காக 15 அடி ஆழம், 20 அடி அகலத்தில் தோண்டப்பட்டுள்ள பள்ளம்.
கோயில்கடவு என்ற இடத்தில் அமராவதி ஆற்றை நோக்கி பாயும் பாம்பாறு.
பல ஏக்கர் விவசாயம் பாதிக்கும் | 300 கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் | தமிழக விவசாயிகள் எதிர்ப்பு
 
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். 

அமராவதி ஆற்றின் மூலம் செயல்பட்டுவரும் 26 கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

 அணையின் பாசனத்தை நம்பியுள்ள சுமார் 20 ஆயிரம் விவசாயிகள் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு உற்பத்திசெய்துதரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள முதல்வர் அடிக்கல்
 
கேரள மாநிலத்திலிருந்து வரும் பாம்பாறு, கொடைக்கானல் பகுதியிலிருந்து வரும் தேனாறு, வால்பாறை, மஞ்சம்பட்டி வழியாக வரும் சின்னாறு ஆகிய 3 நதிகள்தான் அமராவதி அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளன. அதில் பாம்பாற்றின் பங்குதான் அதிகம். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை கேரள முதல்வர் உம்மன் சாண்டி, காணொலி மூலம் பட்டிசேரி அணை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அவர் தொடங்கிவைத்துள்ள இத்திட்டம் தமிழக விவசாயிகளிடையே மீண்டும் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நதியின் ரிஷிமூலம் 
 
உடுமலைப்பேட்டையிலிருந்து சுமார் 24 கி.மீ. தூரம் சின்னாறு வனத்துறை செக்போஸ்ட். இங்கு தமிழகத்தின் எல்லைப்பகுதி முடிந்து கேரள எல்லைப்பகுதி தொடங்குகிறது. அங்கிருந்து 20 கி.மீ. தூரம் மறையூர். அதிலிருந்து சுமார் 13 கி.மீ. காந்தலூர். இங்கேயிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆனைமுடி சிகரம். 

கேரளத்தின் மூணாற்றின் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆனைமுடிச் சிகரத்தில் உருவாகிவரும் காட்டாறுகளும் அருவிகளும் கலந்து, வாகுப்பாறை, சட்டமூணாறு, காப்பி ஸ்டோர், பள்ளநாடு, நாச்சி வயல், கோவில்கடவு, மறையூர் வழியாக பாம்பாறு என்று பெயர் பெற்று தமிழகத்தில் அமராவதி ஆறாக வந்து காவிரியில் கலக்கிறது. 

மறையூரில் இருந்து சுமார் 18 கி.மீ., தூரத்தில் உள்ள காந்தலூர் ஊராட்சியில், காந்தலூர் மற்றும் குகநாதபுரம் ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன. அதில் சுமார் 15 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். குகநாதபுரத்தை அடுத்துள்ளது பட்டிசேரி கிராமம். அங்கு சுமார் 100 குடும்பங்கள் உள்ளன. அங்குதான் 1937-ல் ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. மூன்று புறமும் மலைகளால் சூழப்பட்ட பகுதிகளிலிருந்து சிறிய ஓடைகள் வழியாக வரும் நீர்தான் இந்த நீர்தேக்கத்துக்கு வருகின்றன. அதன்பின் இந்த தடுப்பணை நிறைந்து மேற்கு நோக்கி பாய்ந்து கோவில் கடவு பகுதியில் ஓடிவரும் பாம்பாற்றில் கலக்கிறது. 

இதுகுறித்து கேரளத்தில் உள்ள காந்தலூர் ஊராட்சி தலைவர் எஸ்.மாதவன் கூறியதாவது: 

1937-ல் பட்டிசேரி தடுப்பணை கட்டப்பட்டது. முன்பு அதிக அளவில் மழை இருந்தது. அதனால் சுமார் 500 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்தது. பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டப்படுவதாக கூறுவது முற்றிலும் தவறு. பட்டிசேரி அணையின் நீர் ஆதாரம் தனியானது. பட்டிசேரி அணை நிரம்பினால் அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் மீண்டும் கோவில் கடவு வழியே பாம்பாற்றில்தான் கலக்கிறது. இப்பகுதியில் வசிக்கும் 90 சதவீதத்துக்கும் அதிகமான தமிழர்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக மட்டுமே இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிலர் இதை அரசியலாக்குகின்றனர் என்றார். 

இதுகுறித்து கேரள மாநிலம், தேவிகுளம் சட்டபேரவை உறுப்பினர் ராஜேந்திரனிடம் பேசியபோது, பட்டிசேரி கிராமத்துக்கு அருகே உள்ள பாம்பாற்றில் பல ஆண்டுகளாக இருக்கும் நீர்தேக்கத்தை ஆழப்படுத்தியும், அங்குள்ள பழுதடைந்த மதகுகளை மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ரூ.26 கோடி மதிப்பில் சுமார் 5 கி.மீ. சுற்றளவுக்கு அணை கட்டப்பட்டு, அதில் சுற்றுலா வளர்ச்சிக்காக படகு சவாரி விடப்பட உள்ளது. இந்த அணையால் கேரள மாநிலத்தில் சுமார் 500 ஏக்கர் நிலங்கள் மட்டுமே பாசன வசதி பெறும். மின்சாரம் தயாரிக்கும் எண்ணம் இல்லை. குடிநீர் தேவைக்கு போக மீதமுள்ள தண்ணீர் அதன் தற்போதைய வழித்தடத்திலேயேதான் செல்லும். 

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி பாம்பாற்றில் இருந்து கேரளாவுக்கு 3 டி.எம்.சி தண்ணீர் எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளது. தற்போது கட்டப்படும் தடுப்பணையில் 0.3 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தேக்கிவைக்க முடியும். அதனால் அமராவதி அணைக்கு வரும் தண்ணீருக்கு எந்த பாதிப்பும் வராது என்றார். 

அணை கட்டுவது சட்டவிரோதம்
 
இதுகுறித்து மதிமுக திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பனிடம் பேசியபோது, 1958-ல் அமராவதி அணை கட்டப்பட்டது. அதற்கு முன்பு 100 ஆண்டுகளுக்கு மேலாக பாம்பாற்றின் மூலம் பாரம்பரியமாக அமராவதி ஆற்றுக்கு தண்ணீர் கிடைக்கிறது. அமராவதி ஆறு காவிரி ஆற்றின் கிளை நதியாகும். அதனால் காவிரி ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் கேரள அரசு பாம்பாற்றில் அணை கட்டுவது சட்டவிரோதமானது. 

1924 மற்றும் 1974-ம் ஆண்டுகளில் போடப்பட்ட காவிரி ஒப்பந்த அடிப்படையில் காவிரியின் கிளை நதிகளில் ஒன்றான அமராவதிக்கு வரும் தண்ணீரை தடுக்கவும், அதில் அணை கட்டவும் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காவிரி தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. 

தற்போது கேரள அரசு, அணையை கட்டி மின் உற்பத்தி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மத்திய அரசின் சுற்றுச் சூழல், மின்சார வாரியம், வனத்துறை, காவிரி நடுவர் மன்றம் என யாரிடமும் எவ்வித அனுமதியும் இல்லாமல் அப்பட்டமாக விதிகளை மீறி செயல்படுகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். 

இதைக் கண்டிக்கும் வகையில் வரும் 15-ம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், அமராவதி அணையில் தொடங்கி, கல்லாபுரம், குமரலிங்கம், மடத்துக்குளம், சோழமாதேவி, கணியூர், காரத்தொழுவு, தாராபுரம் என அமராவதி பாசனத்துக்குட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று வாகனப் பிரசாரத்தில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினையை அரசியலாக்கி விளையாடி வரும் கேரள அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தவுள்ளோம் என்றார். 

இதுகுறித்து அமராவதி அணை பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் குழந்தைசாமி கூறியதாவது: பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தருமன் தலைமையில் புதன்கிழமை பாம்பாறு பகுதிக்கு சென்று ஆய்வு செய்யப்பட்டது. அங்கு ஏற்கெனவே உள்ள தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கவும், அதன் மூலம் அதிக கொள்ளளவு தண்ணீரை தேக்கி வைக்கவும் கேரளம் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு பிறகுதான் எதையும் உறுதியாக சொல்ல முடியும் என்றார். 

 
நன்றி :- தி இந்து பட்டிச்சேரி தடுப்பணையின் தற்போதைய தோற்றம்

0 comments:

Post a Comment

Kindly post a comment.