Monday, November 10, 2014

மூளைக்கார வேலைக்காரனாகுங்கள் !


ரொம்பவும் கஷ்டப் படக்கூடாது, ஆனால் நான் என்னுடைய அந்தஸ்து மற்றும் பொருளாதார இலக்குகளை அடைந்தே தீரவேண்டும் என்று நினைக்கின்ற டைப் ஆளா நீங்கள்? அப்படியானால், உங்களுக்காகவே எழுதப்பட்டதுதான் ஜாக் கோலிஸ் (Jack Collis) மற்றும் மைக்கேல் லெபோஃப் (Michael Leboeuf) என்ற இருவரால் எழுதப்பட்ட ‘வொர்க் ஸ்மார்ட்டர் நாட் ஹார்டர்’ (Work Smarter Not Harder) என்னும் இந்த புத்தகம்.

குறைந்த செலவில் நிறைந்த பலன்! குறைவான வேலை கை நிறைய சம்பளம்! குறைந்த பட்ச ப்ரிபரேஷன் அதிக பட்ச மார்க் என்பதுதானே நாம் நம் வாழ்வில் எதிர்பார்த்து விருப்பத்துடன் காத்திருக்கும் வாழ்க்கை முறை. அப்படி என்ன புதியதாக இருக்கப்போகின்றது இந்தப் புத்தகத்தில் என்கின்றீர்களா?. எதிர்பார்ப்புகள் எப்படி வேண்டுமென்றாலும் இருந்துவிட்டு போகட்டும். நிஜத்தில் நடப்பது என்ன? பிழிந்து காயப்போட்டு விடுகின்றார்களே அலுவலகத்தில்!.

வாழ்க்கையில் சூப்பராய் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவரிடமே இருக்கின்றது. ஆனாலும், நாம் ஏன் ஸ்மார்ட்டாக செயல்படுவதில்லை? கஷ்டப்பட்டு மலையைப் புரட்டிப்போட்டதைப் போன்ற வேலையையே செய்கின்றோமே தவிர, செய்யும் வேலையை இன்னமும் ஸ்மார்ட்டாய், வேகமாய், குறைந்த எனர்ஜி செலவில் செய்யவேண்டும் என ஏன் நாம் யோசிப்பது இல்லை என்ற கேள்விக்கான பதிலை திட்டவட்டமாகச் சொல்கின்றனர் ஆசிரியர்கள்.

முக்கியமாக இந்த விதமான முயற்சிகள் உடனடி பலன்களைத் தருவதில்லை. அதனால் யாருக்கும் சுலபத்தில் இதில் ஈடுபாடு வருவதில்லை. சின்னப் பிள்ளையாய் இருக்கும் போதிலிருந்து கஷ்டப்பட்டால் முன்னுக்கு வரலாம் என்று சொல்லித்தருகின்றார்களே தவிர ஸ்மார்ட்டாய் வேலை பார்த்தால் வானமே எல்லை என்று ஒருவருமே சொல்லித்தருவதில்லை. மூன்றாவதாக நாம் என்னவாகவேண்டும் என்ற கேள்விக்கே சரியான பதில் தெரியாமல் இருத்தல் போன்றவற்றை பிரதான காரணங்களாகச் சொல்கின்றனர் ஆசிரியர்கள்.

சரி எப்படி கடின உழைப்பிலிருந்து ஸ்மார்ட் உழைப்பு என்ற ஸ்டைலுக்கு மாறுவது என்று கேட்கின்றீர்களா? அதற்கான சூப்பர் விடைகளை புத்தகத்தில் தந்துள்ளனர் ஆசிரியர்கள். நாம் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் நம்முடைய செயல்முறை என்பது சரிதானா என அவ்வப்போது சரிபார்த்து கொள்ள வேண்டும், அப்படிச் செய்யும் போதுதான் நம்முடைய பாதை சரிதானா என்பது நமக்குத் தெரியும். அவ்வப்போது இப்படி செய்யப்படும் செக்கிங்கே நம்மை ஸ்மார்ட்டான பாதைக்கு அழைத்துச்செல்லும்.

சரியான பாதையில் செல்லாதபோது, நாம் கஷ்டப்பட்டு செய்யும் செயல்கள் அனைத்தும் முழுப்பயனையும் தராததாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்கின்றனர் ஆசிரியர்கள். நாளை முதல் என்னுடைய செயல்பாட்டை மாற்றிவிடுகின்றேன் என இறங்கிவிடாதீர்கள். அதற்கு வாய்ப்பே இல்லை. நமது செயல்களையும், பழக்கங்களையும் ஒரே நேரத்தில் ஒரே மூச்சில் அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாக, ஒன்றன்பின் ஒன்றாக மாற்றி, அதன்மூலமாகவே வெற்றி பெற முயலவேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

காலம் பொன் போன்றது

நேரமே பணம் என்கின்றார் பெஞ்சமின் பிராங்ளின். பணத்தைப் போலவே நேரமும் அளவிடக்கூடியதாக இருந்தாலும் அதை நம்மோடு எடுத்துச்செல்ல முடியாத தாகவல்லவா இருக்கின்றது என்கிறார் அவர். பணத்தைப்போலவே நேரத்துக்கும் அதற்கான குணங்களும், மதிப்பும் இருகின்றது. நம்மிடம் உள்ள பணத்தை வேஸ்ட் பண்ணும்போது, நாம் பணத்தை மட்டும்தான் இழக்கிறோம், ஆனால் நேரத்தை வேஸ்ட் பண்ணும்போது, நமது வாழ்க்கையின் ஒரு பகுதியையே இழக்கிறோம். சம்பாதிக்கும் பணத்தை வெட்டியாய் செலவு செய்பவர்களைப் போலவே கையிலிருக்கும் நேரத்தையும் வீணாக செலவு செய்பவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

பணத்தை எப்படி சேமித்து முதலீடு செய்கின்றீர்களோ அதேபோல் நேரத்தையும் சேமித்து முதலீடு செய்யும் டெக்னிக்கை இந்தப் புத்தகம் சொல்லித்தருகின்றது. இது ஏதோ புதியதாய் கண்டுபிடிக்கப்பட்ட முறையென்று நினைக்க வேண்டாம், நாம் இதை வெவ்வேறு காலகட்டங்களில் பயன்படுத்தியே வந்திருக்கிறோம். உதாரணமாக, நமது ரெகுலர் வேலைக்கு நடுவே, சின்னதாக ஒரு பார்ட் டைம் ஜாப்போ அல்லது சிறிய அளவிலான பிசினஸோ செய்து, அதன்மூலம் எதிர்காலத்தில் ஒரு பைக்கையோ அல்லது ஸ்மார்ட் போனையோ வாங்கி விடுகிறோம் அல்லவா? அதேதான்.

உங்கள் இலக்கு என்ன?

இயற்கையாகவே, நமக்கு ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொள்ளும் ஆற்றல் உள்ளது. அப்படி எந்த இலக்கும் இல்லாமலிருந்தால், நமது வாழ்க்கை நோக்கமற்றதாக மாறிவிடுகிறது. “வாழ்க்கை ரொம்பவே போரடிக்கிறது” என்ற டயலாக்கை கேட்காதவர்கள் இருக்க முடியாது. அன்றாடம் எங்கோ யாரோ இதை சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள். பிரச்சினை, சேலஞ்ச், டார்கெட், கொள்கை எதுவுமே இல்லை என்றால் போரடிக்காதா பின்னே, என கிண்டல் செய்கின்றனர் ஆசிரியர்கள்.

மனதை வலுப்படுத்துங்கள்

நாம் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறோமோ, அதைவிட நாம் சிறந்தவர் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். “சாதிக்க முடியும்” என்ற விதையை முதலில் மனதுக்குள் விதைத்துக்கொள்ளவேண்டும். என்னால் முடியாது, எனக்கு வலிமை கிடையாது, எனக்கு தெளிவாக சிந்திக்க தெரியாது, நான் ஒரு சோம்பேறி, போன்ற எண்ணங்களை குழிதோண்டிப் புதைக்க வேண்டியது அவசியம். சுய நம்பிக்கையே வெற்றிக்கான முதல் ரகசியம். அந்த நம்பிக்கையை முழுக்க முழுக்க நாமே ஏற்படுத்திக்கொள்ளவேண்டும், மாறாக அடுத்தவர்களின் தலையீடு இந்த நம்பிக்கையை தீர்மானிக்கக்கூடாது. ஆயிரம் அட்வைஸ்களை கேட்டாலும், இறுதி முடிவு நம்முடையதாக இருக்க வேண்டும். இந்த நம்பிக்கையே நம்முடைய தேவையற்ற பயம், கோபம் போன்றவற்றை வென்று சாதிக்க உதவுகின்றது.

நேரத்தை சேமியுங்கள்

“நீங்க எப்பொழுது வேண்டுமானாலும் என்னை போனில் காண்டாக்ட் பண்ணலாம்”அல்லது “என் அலுவலக கதவுகள் உங்களுக்காக எப்பொழுதும் திறந்திருக்கும்” போன்ற டயலாக்குகள், நமது நேரத்தை கொன்று தின்னும் எமன்களாகும். இவற்றை தவிர, முழுக்க முழுக்க வெறும் சடங்கிற்காக நடத்தப்படும் அலுவலக மீட்டிங், தொடர்ச்சியான விசிட்டர்ஸ், தேவையற்ற போன் கால்கள் ஆகியவையும் நமது நேரத்தை பெரும்பான்மையாக காலிசெய்யும் அம்சங்களாகும். இவைகளைத் தவிர்க்கும்போது, நம்மால் அதிகப்படியான நேரத்தை சேமித்து, மேலும் திறம்பட செயல்பட்டு நமது இலக்குகளை எளிதாக அடையமுடிகிறது. இதற்கான சின்ன சின்ன வழிமுறைகளையும், அதன்மூலம் இந்த நடைமுறைச் செயல்பாடுகளிலிருந்து நேரத்தை சேமிப்பதற்கான பல ஐடியாக்களையும் தெளிவாக தந்திருக்கின்றனர் புத்தகத்தின் ஆசிரியர்கள்.

சேர்ந்து செயல்படுங்கள்

பொதுவாக ஒருவருக்கு எதிராகவோ அல்லது தனியாகவோ ஒரு செயலை செய்வதைவிட, அவர்களுடன் சேர்ந்து அந்த வேலையை செய்வது மிகவும் எளிது. நமது உதவியாளர்களுடனோ அல்லது சக பணியாளர்களுடனோ இணைந்து செயல்படும்போது, அதன் பலன் மட்டுமின்றி நமது நேரமும் இரட்டிப்பாகிறது. இந்த குழு ரீதியான செயல்பாட்டில் கம்யூனிகேஷனின் (தகவல் பரிமாற்றம்) முக்கியத்துவத்தை அக்குவேறு ஆணிவேறாக அலசுகின்றது இந்தப் புத்தகம்.

ஸ்மார்ட்டாய் வேலை பார்ப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுதலின் அவசியம், டெடிகேஷனின் முக்கியத்துவம், ஒழிக்கப்படவேண்டிய பழக்கமான தள்ளிப்போடும் குணம், ஒழித்தேயாகவேண்டிய ரெட்டேப்பிசம், குறிப்பிட்ட கால இடைவெளியில் வேலை மாறியேயாக வேண்டியதன் அவசியம் என பல்வேறு விஷயங்களையும் ஆசிரியர்கள் ஸ்மார்ட் செயல்பாட்டுக்கான அத்தியாவசியத் தேவைகள் என விளக்கமாகச் சொல்லியுள்ளனர் இந்தப் புத்தகத்தில். தெளிவான இலக்குகளை நிர்ணயித்து, தேவையற்ற செயல்களுக்கான நேரத்தை மீதப்படுத்தி, அதன்மூலம் நமது செயல்பாட்டின் எஃபெக்டிவ்னெஸை அதிகப்படுத்தி நம்முடைய இலக்குகளை அடைய நிச்சயம் இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் உதவும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை எனலாம்.

p.krishnakumar@jsb.ac.in


நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.