Wednesday, November 5, 2014

அண்ணாநகரில் மருத்துவர் வீட்டில் துப்பாக்கியை காட்டி கொள்ளை : வேலைக்கார பெண்ணுக்கு தொடர்பு

அண்ணாநகரில் கொள்ளை நடந்த வீட்டின் முகப்புத் தோற்றம்.

சென்னை அண்ணாநகரில் மருத்துவர் வீட்டில் பெண்களை துப்பாக்கி முனையில் மிரட்டி 75 பவுன் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக, வீட்டில் வேலை செய்து வந்த வேலைக்காரப் பெண்ணை பிடித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
அண்ணாநகர் கியூ பிளாக் 15-ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஆர்.ஆனந்தன் (55). மருத்துவர். இவர், அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர், செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பி வந்தார்.
அப்போது, வீட்டில் அவரது மனைவி, நெருங்கிய உறவினரான மூதாட்டி, வேலைக்காரி மீனா என்ற ஹசீராபேகம் ஆகியோர் கட்டப்பட்டுக் கிடந்தனர். வீட்டில் இருந்த 75 பவுன் நகைகள், ரூ.3.50 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர், உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். மேலும், சம்பவ இடத்துக்கு இணை ஆணையர் சண்முகவேல், அண்ணாநகர் துணை ஆணையர் மனோகரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் வீட்டு வேலைக்காரி மீனா முன்னுக்குபின் முரணாக பதில் கூறினாராம்.
உடனே போலீஸார் அவரைத் தனியாக அழைத்துச் சென்று, தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் மீனாவுக்கும், அந்த கொள்ளைச் சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், அவரிடமிருந்து பல அதிர்ச்சித் தகவல்கள் போலீஸாருக்குக் கிடைத்தன. அதன் விவரம்:
சம்பவம் நடைபெறும்போது, ஆனந்தன் வீட்டில் அவரது மனைவியும், உறவுக்கார மூதாட்டி, வேலைக்காரி மீனா ஆகியோர் இருந்தனராம். மாலை 4.50 மணியளவில் இரு மர்ம நபர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் துப்பாக்கியால் மிரட்டி இருவரும் அணிந்திருந்த தங்க நகைகளைப் பறித்தனர். பின்னர், அவர்கள் மூதாட்டியையும், வேலைக்காரியையும் கட்டிப்போட்டனர். ஆனந்தன் மனைவியை மட்டும் துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்று பீரோவில் இருந்த தங்க நகைகள், ரூ.3.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளையடித்தனர்.
பின்னர், ஆனந்தன் மனைவியையும் அந்த மர்ம நபர்கள் கட்டிப்போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இச் சம்பவத்தில் மொத்தம் 75 பவுன் நகைகளும், ரூ.3.50 லட்சம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக போலீஸார் கூறினர். மேலும், கொள்ளையர்கள் ஹிந்தியிலும், பெங்காலியிலும் பேசியதாகவும் தெரிகிறது.
வீட்டில் ஆனந்தன் மனைவியும், மூதாட்டியும் தனியாக இருப்பதைத் தெரிந்த கொண்டே அந்த நபர்கள் அங்கு வந்திருப்பதும், அவர்கள் இருவரும் தனியாக இருப்பதை வேலைக்காரி மீனா கொள்ளையர்களுக்குத் தெரிவித்திருப்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. மீனாவைப் பற்றி ஆனந்தனிடம் போலீஸார் கேட்டதில், அவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்றும், தனக்கு தெரிந்தவர் மூலம் அண்மையில்தான் வேலைக்குச் சேர்ந்தார் என்றும் கூறினாராம். கடுமையான விசாரணைக்குப் பின்னர், தனக்கும், கொள்ளை சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதாக மீனா ஒப்புக் கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, போலீஸார், கொள்ளையர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர்கள் அரும்பாக்கத்தில் ஒரு தனியார் தங்கும் விடுதியில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இரண்டு நாள்களுக்குள் கொள்ளையர்களைக் கைது செய்து விடுவோம் என காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
http://www.dinamani.com/latest_news

0 comments:

Post a Comment

Kindly post a comment.