ஓரு சிலிண்டரின் விலை ரூ.700. ஒரு மனிதனின் ஒரு நாளைய சராசரி தேவை மூன்று சிலிண்டர்கள், அதாவது ரூ.2,100. ஓராண்டுக்கான தேவை ரூ.7,66,500. ஒரு மனிதனின் சராசரி ஆயுள்காலம் 65 ஆண்டுகள் எனக் கொண்டால், ஆகும் மொத்த செலவு எவ்வளவு தெரியுமா? ரூபாய் ஐந்து கோடி. அம்மாடியோவ்! இந்தக் கணக்கு தற்கால நிலவரப்படிதான். எதிர்காலத்தில் இன்னும் உயரலாம். இது என்ன சமையல் எரிவாயுவின் விலையா அல்லது பெட்ரோலின் விலையா என்கிறீர்களா? இல்லை, நாம் உயிர் வாழ்வதற்காகச் சுவாசிக்கும் பிராணவாயு எனப்படும் உயிர்வளியான ஆக்சிஜனின் விலைதான் அது! நம்ப முடிகிறதா?
நம்மில் யாராவது எப்போதாவது இதைப் பற்றி யோசித்திருப்போமா? மெகா சீரியல்களிலும் பணத் தேடலிலும் ஆயுளைக் கரைக்கும் நமக்கு இதற்கு ஏது நேரம்? உயிர்வலியை உணராதவரை நம்மில் யாரும் "உயிர்வளி' பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆமாம், இதெல்லாம் எந்தக் காலத்தில் வரப் போகிறது என்கிறீர்களா? இதோ வந்துவிட்டது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்புவரை நம்மில் யாராவது தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை பற்றி யோசித்திருப்போமா? ஆனால், இன்றைய நிலை என்ன? எங்கும் தண்ணீர் விற்பனை மயம்!
அதேபோல்தான், இன்று சுவாசக் காற்றும் விற்பனைக்கு வந்துவிட்டது. "ஆக்சிஜன் பார்லர்' என்ற பெயரில் மேல்தட்டு மக்களால் மட்டும் விலை கொடுத்து சுவாசிக்கும் "உயிர்வளி நிலையங்கள்' நாளை அதிகமாக வரலாம். ஏன் அனைவரின் அன்றாட அத்தியாவசியத் தேவை
யாகலாம். சந்திர மண்டலம் செல்பவரைப் போன்றோ, கடலில் முத்துக் குளிப்பவரைப் போலவோ அல்லது பனிச் சிகரம் ஏறுபவரைப் போலவோ அனைவரும் முதுகில் ஆக்சிஜன் சிலிண்டரைக் கட்டிக்கொண்டு அலையும் காலம் வெகு தொலைவில் இல்லை.
நம் பூமிப் பந்தைச் சுற்றியமைந்த இயற்கையின் கொடையான வளி மண்டலத்தில் சுமார் 50 கி.மீ. உயரம் வரைப் பரந்துள்ள பல அடுக்கு வாயுக் கவசத்தில் நாம் உயிர்வாழத் தேவையான ஆக்சிஜனின் அளவு வெறும் 21 சதவீதம்தான்! 79 சதவீதம் நைட்ரஜனும், 0.01 சதவீதம் நீராவியும் மீதமுள்ள சிறியளவில் ஹைட்ரஜன், ஹீலியம், ஆர்கான், நியான், மீத்தேன், கார்பன்-டை-ஆக்சைடு போன்ற வாயுக்கள் உள்ளன. இயற்கையே மனிதனைவிட தாவரங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளது. அதனால்தான் அவற்றிற்குத் தேவையான நைட்ரஜன் வாயுவை வாரி வழங்கியுள்ளது. மரங்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால், அவை மற்ற உயிர்களுக்கு தேவையானதைக் கொடுக்கும் என இயற்கைக்குத் தெரிந்த ரகசியம் நமக்குத் தெரியவில்லை. ஆண்டாண்டு காலமாக கோடிக்கணக்கான மனிதர்களும் கோடானு கோடி உயிரினங்களும் காற்றில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு வேண்டாத கரியமில வாயுவை வெளியேற்றியும் கூட ஆக்சிஜனின் அளவு குறையாமல் அப்படியே இருப்பதன் ரகசியம் மரங்கள்தான். ஆம், அவைதான் மனிதனுக்கு வேண்டாத வாயுக்களை எடுத்துக்கொண்டு தேவையான ஆக்சிஜனை வழங்கி வருகின்றன!
நாம் உயிர் வாழப் பயன்படுவது மட்டுமல்லாமல் பூமியைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட உயரத்தில் மெல்லிய படலம் போல் அமைந்து சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்களையும், அதிகப்படியான வெப்பத்தையும் மற்ற காஸ்மிக் கதிர்களையும் தடுத்து நிறுத்தி அவை நேரடியாக நம்மைத் தாக்குவதிலிருந்து நம்மைக் காப்பாற்றுவதும் அதே உயிர்வளியான ஆக்சிஜன்தான். ஆம், ஆக்சிஜன் ஈரணு மூலக்கூறுகளாக இருக்கும்வரை பிராணவாயு. அதுவே மூவணு மூலக்கூறுகளாக மாறும்போது "ஓசோன்' எனப்படுகிறது. அதையும் சும்மா விட்டுவைத்தோமா நாம்? இன்றைய விஞ்ஞானிகளின், இயற்கை ஆர்வலர்களின் பெருங்கவலையே "ஓசோன் ஓட்டை'யைப் பற்றித்தான். இந்த ஓசோன் ஓட்டையால் கடல் மட்டம் உயர்தல் உள்பட பல்வேறு அபாயகரமான விளைவுகளை உலகம் எதிர்கொள்ள வேண்டிவரும்.
விஞ்ஞான வளர்ச்சி தேவைதான் என்றாலும் அது இயற்கையின் கட்டமைப்பைச் சீர்குலைக்காது இருக்க வேண்டும். பெருகி வரும் வாகனங்கள் வெளியிடும் அதிகப்படியான கார்பனை}டை}ஆக்சைடு, கார்பன்}மோனேக்சைடு ஆகிய வாயுக்கள் ஒருபுறம், தொழிற்சாலைகளின் கழிவுகள் மறுபுறம், வீட்டு உபயோக மின்பொருள்கள் உமிழும் கழிவுகள் இன்னொருபுறமென வளிமண்டலத்தைச் சீர்குலைக்கின்றன. இதில் "ரெஃபிரிஜ்ரேட்டர்' என்னும் குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் குளோரோ புளோரோ கார்பன் என்னும் நச்சு வாயுவும், மேலே கண்ட கார்பன்}மோனேக்சைடும்தான் ஓசோனின் மிகப்பெரும் எதிரிகள்.
எரிபொருள்களுக்குப் பதிலாக சூரிய ஒளி, காற்று, தண்ணீர் என்று மாற்று சக்திகளைப் பயன்படுத்துதல், ஆலைக் கழிவுகளைச் சுத்திகரித்து முறைப்படுத்துதல், காடுகளை அழிக்காதிருத்தல், மரங்களை நட்டு வளர்த்தல் போன்ற செயல்களால் மட்டுமே நாம் நம் உயிர்வளியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
எல்லா மரங்களுமே காற்றைச் சுத்தப்படுத்துகின்றன. ஓர் அரச மரம் அதிகப்படியான ஆக்சிஜனை வெளியேற்றி அதனைச் சுற்றி சுமார் 0.5 கி.மீ. பரப்பு வரை வளிமண்டலத்தைச் சுத்தப்படுத்துகிறது. நம் முன்னோர்கள் பிள்ளைப் பேறு இல்லாத பெண்களை அரச மரம் சுற்றச் சொன்னதன் நோக்கம், சுத்தமான ஆக்சிஜன் அவர்களுக்குக் கிடைக்கட்டும் என்ற நோக்கில்தான். ஏனென்றால், அன்றைய பெண்கள் வீட்டில் விறகடுப்பிலும் கரியடுப்பிலும் சமைக்கும்போது, உயிர்வளிக்குப் பதில் புகையைத்தான் அதிகம் சுவாசித்தனர்.
அதனால், போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் அவர்களது உடலில் இயல்பாக, முறையாக நடைபெற வேண்டிய வளர்சிதை மாற்றங்களும், ஹார்மோன் சுரப்பிகளும் பாதிக்கப்பட்டதே கருவுறாமல் போனதற்குக் காரணமாக அமைந்தது. எல்லாப் பெண்களாலும் அரச மரம் தேடிச் செல்வது கடினம் என்பதனால்தான் வீட்டின் பின் முற்றத்து வாசலில் துளசிச் செடியை வளர்த்து அதனைச் சுற்றி வரச் செய்தார்கள். ஏனென்றால், மரங்களில் அரச மரம் போலவே செடிகளில் துளசியும் அதிகளவில் உயிர்வளியை உற்பத்தி செய்யக் கூடியது.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் சமீப காலமாக சிதைவுற்று வருகிறது. காரணம், அதைச்சுற்றி அமைந்த ஆலைக் கழிவுகள் மற்றும் பிற கழிவு
களிலிருந்தும் வெளியேறும் நச்சு வாயுக்களான சல்பர்டை}ஆக்சைடு, கரியமில வாயு, மீத்தேன் போன்றவை பெருமளவில் வாயு மண்டலத்தைச் சீர்குலைத்துவிட்டதுதான். இதனைத் தடுக்க தாஜ்மஹாலைச் சுற்றிலும் லட்சக்கணக்கில் துளசிச் செடிகள் வளர்ப்பது என்று முடிவு செய்திருக்கிறார்கள். அவற்றால் வெளியிடப்படும் ஆக்சிஜன் வாயு ஒரு பாதுகாப்புக் கவசம் போல் அமைத்து மற்ற நச்சு வாயுக்களின் பாதிப்பிலிருந்து தாஜ்மஹாலைக் காப்பாற்றும் என்பதால்தான்.
எனவே கூடிய மட்டும் தாவரங்களை வளர்ப்போம்; உயிர்வளி உற்பத்தியில் தன்னிறைவு பெறுவோம்.
டி. புதுராஜா, சென்னை., கருத்துக்களம், தினமணி
0 comments:
Post a Comment
Kindly post a comment.