Wednesday, November 12, 2014

காவிரி ஆற்றின் குறுக்கே 2 அணை கட்ட கர்நாடகம் முடிவு: 48 டிஎம்சி நீரை தேக்க திட்டம்



காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாத் என்ற இடத்தில் புதிதாக 2 அணைகள் கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 48 டிஎம்சி நீரை தேக்க முடியும் என அந்த மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
மைசூரு, பழைய மைசூரு ஆகிய நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றின் குறுக்கே 2 அணைகள் கட்ட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக அரசு முடிவெடுத்தது. இந்த குடிநீர் திட்டத்துக்கான அனைத்து பணிகளும் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன‌.

புதிய அணைகளை கட்டுவதற்கு மேகதாத் என்ற இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு பலகட்ட ஆய்வுகளை நீர்வளத்துறை அதிகாரிகள் முடித்துள்ளனர். இந்த குடிநீர் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மீறுவதாகவும் கூறிவருகிறது. இதனை சட்டப்படி எதிர்கொள்வது என முடிவெடுத்திருக்கிறோம்.

எஸ்.நாரிமன் ஒப்புதல்

தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு குறித்து கர்நாடக அரசு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியது. இதுதொடர்பாக நான் டெல்லிக்கு சென்று காவிரி வழக்கில் கர்நாடகத்துக்காக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் எஸ்.நாரிமனை சந்தித்துப் பேசினேன்.

அப்போது அவர்,'மேகதாத் குடிநீர் திட்டம் சட்டத்துக்கும்,காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கும் புறம்பானது அல்ல. இத்திட்டத்தை எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு தடுக்க முடியாது. எனவே கர்நாடக அரசு புதிய அணைகளை கட்டலாம்'என ஒப்புதல் அளித்தார். அதனைத் தொடர்ந்து மேகதாத் குடிநீர் திட்டத்துக்கான இறுதி பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம்.

2 புதிய அணைகள்

சட்டநிபுணர்கள் மற்றும் கர்நாடக அமைச்சரவையின் ஒப்புதலோடு காவிரியில் பல இடங்களில் அணை கட்டுவதற்கான பணிகளை நேரில் ஆய்வு செய்தேன். மேகதாத் என்ற இடத்தில் 22 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதில் 2 இடங்களை இறுதி செய்ய திட்டமிட்டுள்ளோம்.அந்த இடங்களில் புதிதாக 2 அணைகள் கட்ட முடிவு செய்திருக்கிறோம். இதன் மூலம் 48 டிஎம்சி நீரை தேக்க முடியும்.

இந்த மேகதாத் குடிநீர் திட்டத்தின் மூலம் மைசூரு, பழைய மைசூரு நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளின் நீண்டகால குடிநீர் தேவை நிறைவேறும். இது தொடர்பாக இறுதிக்கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு அணைகள் கட்டுவதற்கு உலகளாவிய ஒப்பந்தங்கள் கோரப்படும். இவ்வாறு பாட்டீல் கூறினார்.

சட்டப்படி எதிர்கொள்வோம்

மேக‌தாத் குடிநீர் திட்டத்துக்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவ‌து தொடர்பாக எம்.பி.பாட்டீலிடம்,'தி இந்து'சார்பாக கேட்டபோது, ''காவிரியில் புதிதாக 2 அணைகள் கட்டுவது கர்நாடகத்தின் உரிமை. இதில் தமிழ்நாடு தலையிட முடியாது. மேகதாத் குடிநீர் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மீறுகிறது என கூறுவது தவறானது.

இந்த திட்டத்துக்கும் தமிழகத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை வழக்கம் போல வழங்குவோம். இது எங்களுடைய மாநில மக்களின் நலனுக்காக அமல்படுத்துகிறோம். தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகினால் நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்''என்றார்.


நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.