1940களில் ஒரு நாள்:
ஈரோடு ரயில் நிலையம்.அன்று காலை ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருக்கும் அனைத்து ரயில்களும் உள்ளே நுழைய முடியாமல் அரை பர்லாங் தள்ளியே நிறுத்தப்படுகின்றன.பெரும் கூச்சல்,குழப்பம்.ஏன்..சுமார் பத்தாயிரம் பேர் தண்டவாளத்தில் அமர்திருக்கின்றனர், மூன்று மணி நேரமாக.ஏதேனும் மறியலா? இல்லை, சுதந்திர போராட்ட ஊர்வலமா?. ம்ஹும்….கொச்சி எக்ஸ்ப்ரசில் சென்னைக்கு ஈரோடு வழியாகப் போகும் தியாகராஜ பாகவதரைக் காணத் தான் அத்தனை கூட்டம். அவர் வர மேலும் இரண்டு மணி நேரம் தாமதமாகும் என்றாலும் அதே பொறுமையுடன் உட்காந்திருகின்றனர். அவர் வந்தே பிறகே கூட்டம், அவரை பார்த்து விட்டு கலைந்து செல்கிறது.
1944:
ஹரிதாஸ் படம் மெட்ராஸ் பிராட்வே டாக்கிசில் வெளியாகிறது. 100,200,300 நாட்கள் அல்ல – 1000 நாட்களை – மூன்று தீபாவளியைக் கடந்து படம் ஓடியது. படத்தின் கதாநாயகன் – MTB.
1959:
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பிரகாரம். மன அமைதி வேண்டி ஒரு மொட்டை அடித்த, கண்பார்வை பாதிப்படைந்த ஒருவர் அப்பிரகாரத்தில் அமர்ந்துள்ளர்.கோயிலை விட்டு வெளியே வந்த ஒரு புண்ணியவானுக்கு அன்றைகென்று தர்ம சிந்தனை பெருக்கெடுத்து ஓட, அமர்திருந்த ஆளை பிச்சைக்காரர் என்று நினைத்து காசு போட்டு விட்டுச் செல்கிறார். அமர்ந்திருந்தவர் – தியாகராஜ பாகவதர்.
“ராஜா மாதிரி இருக்கான், ராஜ வாழ்கை” இந்த வாக்கியங்களை ஒரு காகிதத்தில் எழுதி செராக்ஸ் எடுத்தால் வெளியே வரும் பெயர் தியாகராஜா பாகவதாராகத் தான் இருக்கும். கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு 40களில் அவர் புகழ் இருந்துள்ளது (நாடகம் ஒன்றே பொழுதுபோக்காக இருந்த அந்த காலகட்டத்தையும் நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்). ஆனால் 1950களில் அவரது புகழ் சரியத் தொடங்கிது. சிறைச்சாலை சென்று வந்ததும் ஒரு காரணம்.இருக்கும் வரை அள்ளி அள்ளி கொடுத்தவர் கடைசி காலத்தில் மேற்கூறிய நிலையில் தான் இறந்து போனார்.
தியாகராஜா பாகவதர் குறித்து சாரு நிவேதிதா 23 பக்கங்களில் எழுதியுள்ளதை இங்கே எப்படி எழுதுவது என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை.வான்கா-தன் காதை தானே அறுத்துக் கொண்ட நிலையில் தன்னையே self-portrait ஆக வரைந்திருப்பார். அதை எவ்வளவுதான் விளக்கிக் கூற முற்பட்டாலும் அதை ஒருவர் பார்த்து உணர்ந்தால் ஒழிய அந்த தாக்கத்தை புரிந்து கொள்ள முடியாது.அது போலத்தான் இந்த கட்டுரையும். படித்தால் மட்டுமே புரியும்.“இதுவரை எத்தனையோ கட்டுரைகள் எழுதியிருந்தாலும் தியாகராஜா பாகவதர் குறித்த இந்த கட்டுரை மனித வாழ்வு பற்றிய என்னுடைய நம்பிக்கைகளையே மாற்றிப் போட்டுவிட்டது” என்று எழுத்தாளரே கூறும் அளவிற்கான வாழ்க்கை பாகவதருடையது.
M.T.B – ரஜினி என்றால் , பி.யூ.சின்னப்பா – கமல். அவர் – எம்.ஜி.யார் என்றால் , இவர் – சிவாஜி. இத்தகைய பிரிவுக்கு முன்னோடிகளே இவர்கள்தாம். பாடகராக மட்டுமின்றி குஸ்தி, சிலம்பம், குத்துச்சண்டை, குதிரையேற்றம் என்று நிஜமான சகலகலாவல்லவராகவே சின்னப்பா இருந்துள்ளார். ரொம்ப பெரிய குசும்பர் என்று இவரைப் பற்றி படிக்கும் போதே தெரிகிறது. MTBக்கும் சின்னப்பாவிர்க்கும் இடையே பாடும் முறையில் இருக்கும் வேறுபாடுகள், சின்னப்பாவின் தனித்துவமான பாடும் குணாதிசயங்கள் என்று எழுத்தாளர் சுருங்கச் சொல்லியே அருமையாக விளங்க வைக்கிறார் (எனக்குதான் ஒண்ணும் புரியல). சின்னப்பா குறித்த கட்டுரையில் கடைசியாக வரும் வாக்கியங்கள் இவை
“பி.யூ சின்னப்பாவின் புதுக்கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது சமாதி எந்த கதியில் இருக்கிறதென்றே தெரியவில்லை. திருச்சியில் தியாகராஜா பாகவதரின் சமாதி கழுதை,நாய்,பன்றி போன்ற விலங்குகளும் மனிதர்களும் மலம் கழிக்க பயன்படுத்தப்பட்டுவருகிறது”. இந்த இரண்டு பேர் குறித்து கட்டுரையை படித்து முடியுங்கள். அப்பொழுதுதான் மேற்கூறிய வாக்கியங்களின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.
கே.பி.சுந்தராம்பாள் பற்றி சுட்ட பழம் – சுடாத பழம் அளவிற்கே முன்பு எனக்கு தெரிந்திருந்தது. பின்பு நந்தனார் படத்தில் சுந்தராம்பாள் நடித்த போது அக்காலத்தில் அது எத்தகையா சாதிய ரீதியிலான விமர்சனங்களை சந்தித்தது என்று படித்திருக்கிறேன். ஆனால், கிட்டப்பா மேல் இவர் வைத்திருந்த காதல் @ பக்தி @ பித்து குறித்து இக்கட்டுரைகளின் மூலமே தெரிந்து கொண்டேன். இதில் என்ன ஒரு கொடுமையென்றால் கடைசி வரை கிட்டப்பா கசுந்தராம்பாள் தன் மீது வைத்திருந்த அளப்பரிய காதலை புரிந்து கொள்ளவில்லை அல்லது புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. இருவருரது வாழ்க்கையுமே ஒரு தேர்ந்த திரைக்கதை போலவே இருக்கிறது. தன்னோடு ஏழு ஆண்டுகள் உயிருடன் இருந்த கணவனுக்காக – அந்த ஏழு ஆண்டுகளிலும் மூன்றுஆண்டுகள் மட்டுமே சேர்ந்திருந்தனர் – மீதி 47 ஆண்டுகளும் ஒரு துறவியயைப் போன்றே வாழ்ந்துள்ளார். அவரது நினைவாகவும் அவரது தீராக்காதலின் நினைவாகவுமே இப்புத்தகத்திற்க்கு “தீராக்காதலி” என்று பெயரிட்டுள்ளார் சாரு. நெகிழ வைக்கும் கதை சுந்தராம்பாளினுடையது.
எம்.ஆர்.ராதா – எம்.ஜி.ஆர்:
எம்.ஆர்.ராதா குறித்து நான் கொஞ்சம் படித்திருந்ததனால் (மணா எழுதிய புத்தகம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது௦) இதிலுள்ள விஷயங்கள் சிலபல, பரிச்சயமானவைகளே. ஆனாலும் படிக்க சுவாரசியமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் குறித்து நம் அனைவருக்கும் அவர் திரைப்படங்களில் நடித்து ஒரு சக்தியாக வளர்ந்த பின்னர் உள்ள கதை ஓரளவிற்கு தெரிந்திருக்கும்.ஆனால் அவரது சிறுவயது – இளமைக்காலம் உங்களுக்கு தெரியுமா…எனக்கு தெரியாது. எம்.ஜி.ஆர். பிறந்தது ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்திலேயே.ஆனாலும் சிறுவயதில் தந்தையின் மறைவிற்குப் பிறகு வறுமையில் வாடக் காரணம்–அக்காலத்தில் கேரளாவில் புழக்கத்தில் இருந்த “மருமக்கள் தாயம்” என்ற பழக்கம். மருமக்கள் தாயம் – அப்படியென்றால்?.புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காலம் என்பது கழங்கு போற் சுழன்று
மேலது கீழாய் கீழது மேலாய் மாறிடும் தோற்றம்
– மனோன்மணீயம்
இதே போன்று ஜென்னிலும் வட்டம் முன்னிறுத்தப்பட்ட கோட்பாடு – Circle of Zen – உண்டு. திபெத்திய புத்த மதத்திலும் சக்கரங்கள் குறித்த தத்துவம் உண்டு. வெர்னெர் ஹெர்சாக்கின் Wheel of Time பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்(நானும் அதன் மூலமே தெரிந்து கொண்டேன்). இந்த கீழது மேலாய் – மேலது கீழாய் எல்லாருக்கும் பொருந்தும்.எனக்கு-உங்களுக்கு – பாகவதருக்கு – எம்.ஜி.ஆருக்கு – கருணாநிதிக்கு – ஜெயலலிதாவிற்கு. எப்ப – எப்படி என்று தெரியாமல் இருப்பதுதானே இதிலுள்ள சுவாரசியம்.
என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில் இது போன்ற ஆளுமைகளைப் பற்றி கட்டுரை எழுதுவதென்பது சிரமம்.அதை விட – சுவாரசியமாகவும், அதே சமயம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் எழுதுவதென்பதுதான் உண்மையிலேயே மிகக் கடினம். சில வகை கட்டுரைகள் தினத்தந்தியில் அரசு தேர்விற்கு தயாராகும் ஆட்களுக்கு உதவும் வகையில் இருக்கும். “தியாகராஜா பாகவதர் அவர்கள் 1910 ஆம் ஆண்டு – இந்த நாள் – இந்த கிழமை – இந்த இடம் – இந்த ஆஸ்பத்திரி. தந்தை, தாயார்,தாத்தா,பாட்டி இவர்கள் பெயர். பிறக்கும்போது அவருக்கு அவருக்கு வயது – ஒரு நாள்” இந்த ரீதியிலேயே இருக்கும். மேலும் சில கட்டுரையாளர்கள் – இசை போன்ற விஷயங்களை குறித்து எழுதும் போது கூட(விஜயகாந்த் ஹஸ்கி குரலில் பேசுவது போல) புள்ளிவிவரக் குறிப்புகளாகவே இருக்கும் (இங்கு யாராவது ஒரு இசை விமர்சகர் ஞாபகம் வந்தால் எந்த விதத்திலும் அதற்கு நான் பொறுப்பில்லை). ஆனால் ஒரு சிறந்த இசை ரசிகர் சிறந்த எழுத்தாளராகவும் இருக்கும் போது இசை குறித்தும் – பாடகர்கள் குறித்தும் – இசை அமைப்பாளர்கள் குறித்தும் எழுதும் போது – அதன் வீச்சே தனி. ஏனென்றால் சாரு அவர்களே, இந்தப் புத்தகத்தில் மட்டுமல்ல நிறைய கட்டுரைகளில் கூட எழுதுவதை விட இசையே மிகப் பிடித்தமான ஒன்றாக குறிப்பிடுகிறார்.என் சிற்றறிவிற்கு தெரிந்த வரையில் தமிழ்நாட்டில் நான் படித்த – தெரிந்து வைத்திருக்கக் கூடிய ஒரு எழுத்தாளரும் Cradle of Filth குறித்தோ Eminem குறித்தோ – சாரு அவர்களைத் தவிர்த்து – எழுதி நான் படித்ததில்லை. நான்சி அஜ்ரமை நிறைய பேர் இப்பொழுது ரசிக்க சாருவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது என் அனுமானம். அவர் கலகம் – காதல் – இசை போன்று இசை வகைகள் குறித்தும் இன்னபிற நுணுக்கங்கள் குறித்தும் எழுதியிருந்தாலும் இது போன்ற ஆளுமைகள் குறித்து – ஜிம் மோரிசன் குறித்தோ, ஜிம்மி ஹென்றிக்ஸ் குறித்தோ – ஏன் அந்த 27 Club குறித்து கூட இதுபோன்ற கட்டுரைகளாக எழுதினால் ரொம்பவே மகிழ்ச்சி. ஆனாலும் எனக்கு சில சமயம் அவரது எழுத்து ரொம்பவும் பிடிக்காமலும் இருந்திருக்கிறது. இருந்தாலும் அவரைத் தவிர Freddie Mercury போன்ற ஆளுமையைக் குறித்து எழுத இங்கு – இசை விமர்சகர்கள் இருக்கலாம் – எழுத்தாளர்கள் இல்லை. ஏனென்றால் இசை போன்ற உணர்ச்சிபூர்வமான விஷயத்தை எழுத்தாளர்களாலேயே அதன் முழு பரிணாமத்தையும் வெளிப்படுத்த முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.
இந்த புத்தகத்தின் தாக்கம் எந்த அளவிற்கு இருந்தது என்றால் பாகவதரின் பாடல்களை தேடிப் பிடித்து கேட்க ஆரம்பித்து விட்டேன் (இங்கே சொடுக்கி நீங்களும் கேட்டு மகிழுங்கள்). எனக்கு என்ன வருத்தம் என்றால் 1950களின் Blues Legend – Muddy Watersயை தெரிந்து வைத்திருந்த அளவிற்கு ( அதுவே சொற்பம், அத காட்டிலும் இது இன்னும் சொற்பம் ). மேலும் இந்த இசைக் கலைஞர்கள் குறித்து தேடித் பார்த்தல் – இதில் சாரு அவர்கள் கூறியுள்ளதைப் போல–மிக மிக சொற்பமான அளவிற்கே ஆவணங்களும், மிக முக்கியமாக பாடல்களும் உள்ளன.அவரும் கூட மிகுந்த சிரமங்களுக்கு இடையே தான் இந்தத் தகவல்களைத் திரட்டியுள்ளார்.இதுவே வெளிநாட்டில் என்றால் இந்த நிலை இருந்திருக்குமா. 1930களில் பதியப்பட்ட ப்ளுஸ் பாடல் முதற்கொண்டு அத்தனனையும் பத்திரப்படுத்தியுள்ளனர். நானும் கூட பழைய திரைப்படம் குறித்து எழுதியுள்ளேன் – அது ஜெர்மன். இதுவரை ஒரு பழைய தமிழ்படம் குறித்துக் கூட எழுதியதில்லை. நிறைய படங்கள் எனக்கு பிடித்திருந்தாலும் கூட.இனி சில பழைய படங்கள் குறித்தும் அவ்வப்போது எழுத உத்தேசித்துள்ளேன்.. நண்பர்கள் நமது பழையபடங்கள் குறித்தும் – அதன் ஆளுமைகள் குறித்தும் – அக்காலகட்டதில் திரைப்பட சூழல் எவ்வாறு இருந்து என்பது குறித்தும் தெரிந்து கொள்ள(அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் கருத்து)கீழ்க்கண்ட நூல்களை படிக்கலாம் என்று நினைக்கிறேன்.வேறு நூல்கள் குறித்தும் தாராளமாக நீங்களும் சொல்லலாம்.
- ஆரம்ப கால தமிழ் சினிமா (31-41) பாகம்-1 அறந்தை நாராயணன்
- ஆரம்ப கால தமிழ் சினிமா (42-51) பாகம்-2 அறந்தை நாராயணன்
- ஆரம்ப கால தமிழ் சினிமா (52-56) பாகம்-3 அறந்தை நாராயணன்
- பயாஸ்கோப் – அசோகமித்ரன்
- எம் தமிழர் செய்த படம் – தியடோர் பாஸ்கரன்
- சித்திரம் பேசுதடி – தொகுப்பாசிரியர்: தியடோர் பாஸ்கரன் – காலச்சுவடு
- நன்றி :-http://kolandha.com/
0 comments:
Post a Comment
Kindly post a comment.