Flash news:

  • உலகம்
  • தமிழகச்செய்திகள்
  • கட்டுரைகள்
  • சிறப்பு செய்திகள்
  • அனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.

Sunday, September 28, 2014

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை; ரூ.100 கோடி அபராதம்: பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. சிறைத் தண்டனையுடன் ரூ.100 கோடி அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளி என பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பகல் 2.25 மணியளவில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா தீர்ப்பை வழங்கினார். சில மணி நேரத்துக்குப் பின்னர், பிற்பகலில் ஜெயலலிதாவுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி வெளியிட்டார்.

மேலும், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதாக, நீதிமன்றம் அறிவித்தது.

பெங்களூர் சிறையில் ஜெயலலிதா அடைப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், ஜெயலலிதா பெங்களூரில் பரப்பன அக்ராஹாரத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமீன் பெற விரும்பினால் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில்தான் அவர் மனு செய்ய முடியும். இப்போது தசரா விடுமுறை நாட்கள் என்பதால் அக்டோபர் 6-ஆம் தேதி முடியும் வரை அவர் காத்திருக்க வேண்டும்.

4 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அரசியல்வாதி ஒருவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களும் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தீர்ப்பு எதிரொலியாக அவரது அரசியல் வாழ்க்கை 10 ஆண்டுகளுக்கு ஆட்டம் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து என்ன?

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பின் எதிரொலியாக எழும் அடிப்படைக் கேள்விகளும், அவற்றுக்கான பதில்களும் இதோ - ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு: அடுத்து என்ன?
இதனிடையே, தீர்ப்பின் எதிரொலியால் தமிழகம் முழுவதும் பதற்றம் நீடித்து வருகிறது. அது குறித்த விரிவான செய்தித் தொகுப்பு - தமிழகத்தில் வன்முறை நீடிப்பதால் பதற்றம்

'முதல்'வர் ஜெயலலிதா

முதல்வர் பதவியில் இருக்கும்போதே ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற நாட்டின் 'முதல்' முதல்வர் என்ற பெயரை எடுத்து சிறப்பு கவனம் பெற்றுள்ளார் ஜெயலலிதா. அதன் விவரம்: ஊழல் தடுப்புச் சட்டம்: இந்திய அரசியல் வரலாற்றில் 'முதல்'வர் ஜெயலலிதா

முதல்வர் பதவியை இழந்தார் ஜெ:

பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் பவானி சிங் 'தி இந்து'விடன் கூறியதாவது: "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்.

அவரது முதல்வர் பதவியையும் இழக்கிறார். தீர்ப்பை அடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. தண்டனை விபரம் மீதான விவாதம் 3 மணிக்கு தொடங்குகிறது. எதிர்தரப்பு சார்பில், ஜெயலலிதாவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிடும்" என்றார். அவருக்கான இசட் பிளஸ் பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

|
ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு முழு பின்னணி:

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 சொத்து குவித்ததாக அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 14-6-1996 அன்று சென்னை மாநகர‌ அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். 27-6-1996 அன்று அவரது புகாரை விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை மாநாகர அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வழக்கை விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம்ம நாயுடு தலைமையில் 15 காவல் ஆய்வாளர்கள் விசாரணை அதிகாரிகளாக‌ நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் முதல்கட்ட விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல், சாட்சிகள் விசாரணை ஆகியவை 2003-ம் ஆண்டு வரை நடைபெற்றது.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் மனுவைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி இவ்வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழில் இருந்த ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், பிறழ் சாட்சிகளின் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு செய்தல் மற்றும் இறுதிவாதம் ஆகியவை கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. 

வழக்கு குறித்த அனைத்து விசாரணைகளும் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நிறைவடைந்ததால், செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா உத்தரவிட்டார்.

இதனிடையே இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் ஜெயலலிதா தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியதால் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காந்தி பவனுக்கு மாற்றப்பட்டது.

எந்தெந்த பிரிவுகளில் வழக்கு:

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீது அவர் முதல்வர் ஆவதற்கு முன்பாக (1-7-1991-க்கு முன்பு) அவருடைய சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 956.53 ஆகும். ஆனால் வழக்கு காலத்திற்கு பிறகு (1-7-1991 முதல் 30-4-1996 வரை) ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 ஆக சொத்து அதிகரித்துள்ளது.

எனவே ஜெயலலிதா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார். மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து குவிக்க உடந்தையாக இருந்துள்ளனர்.

எனவே அவர் மீது ஊழல் தடுப்பு சட்டம் 13(1) ( ஈ) பிரிவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது மற்றும் 13(2) அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்கு உடந்தையாக இருந்தது மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 120(பி) கூட்டு சதி தீட்டியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இரு தரப்பு வாதம்:

ஜெயலலிதாவின் வருமானத்தை விவரித்து அவரது வழக்கறிஞர் பி.குமாரும், அதனை மறுத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கும் சுமார் 100 மணி நேரம் வாதிட்டுள்ளனர்.

இதே போல சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர்கள், 'ஜெயலலிதாவிற்கும் இவ்வழக்கிற்கும் தொடர்பில்லை. திமுகவின் அரசியல் பழிவாங்கும் வழக்கு' என சுமார் 90 மணி நேரம் வாதிட்டுள்ளனர். சுமார் 5 ஆயிரம் பக்கத்துக்கு எழுத்துப்பூர்வ அறிக்கையும் தாக்கல் செய்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் மூன்றாம் தரப்பான அன்பழகன் தனது வாதமாக 445 பக்கங்களில் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களை அடுக்கியிருந்தார்.

நன்றி :-தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.