Sunday, June 29, 2014

தி.க.சி. நினைவாக ஆண்டுதோறும் இலக்கியத் திறனாய்வுப் பயிலரங்கு



இலக்கியத் திறனாய்வாளர் தி.க.சி.யின் நினைவாக ஆண்டுதோறும் மாநில அளவில் இலக்கியத் திறனாய்வுப் பயிலரங்கு நடத்தப்படும் என்றார் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் பொதுச்செயலர் பேராசிரியர் இரா.காமராஜ்.
திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற தி.க.சி.யின் நினைவேந்தல் கூட்டத்தில் இரா.காமராஜ் மேலும் பேசியதாவது:

தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சி போல தனது கருத்துகளை தி.க.சி. வெளிப்படுத்தினார். ஆலமரம் போல விளங்கும் சில இலக்கியவாதிகளுக்கு மத்தியில் வாழைமரம் போல வருங்கால சந்ததிக்கு வழிகாட்டிய இலக்கியவாதி அவர்.

வாழையடி வாழையாக என்பார்கள். வாழை தனது வேர்களில் மேலும் பல வாழைகள் தோன்றுவதற்குக் காரணமாக இருப்பதுபோல, தனது வேர்களிலிருந்து நூற்றுக்கணக்கான இலக்கியவாதிகள் தோன்ற காரணமாக இருந்தவர் தி.க.சி.

ஏனைய இலக்கியவாதிகள் ஆலமரம்போலத் தங்களுக்குக் கீழே புல் பூண்டுகள் முளைக்கவிடாத போது, தி.க.சி. வாழைமரம் போலப் பல எழுத்தாளர்களை உருவாக்கித் தந்தார் என்பதுதான் அவரது தனிச்சிறப்பு.
கடைசிவரை தனது சார்புநிலை, கருத்து நிலையை மாற்றிக்கொள்ளாமல் வாழ்ந்து காட்டியவர். 

மார்க்சியம், தலித்தியம், பெண்ணியம், சுற்றுச்சூழலியம், மனிதநேயம் என பஞ்சசீல கொள்கைகளை தனது எழுத்தில் கொண்டிருந்தவர். மக்களைச் சார்ந்து சிந்தியுங்கள், மக்களைச் சார்ந்து எண்ணங்களை விதையுங்கள் என தி.க.சி வலியுறுத்தி வந்தார்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில், தி.க.சி.யின் நினைவாக இளைஞர்களுக்கு மாநில அளவிலான இலக்கியத் திறனாய்வுப் பயிலரங்கு ஆண்டுதோறும் நடத்தப்படும். 

இந்திய அரசின் சாகித்ய அகாதெமி சார்பில் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் தி.க.சி. குறித்த நூல் விரைவில் வெளியிடப்படும் என்றார் அவர்.

தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.