Sunday, June 29, 2014

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: குற்றாலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்



குற்றாலத்தில் செயல்பட்டு வந்த 2 டாஸ்மாக் மதுக் கடைகள் வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டன.

குற்றால அருவிகளைப் பாதுகாக்கும்பொருட்டு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பல்வேறு நிபந்தனைகளைப் பிறப்பித்து அண்மையில் உத்தரவிட்டது. இதனடிப்படையில் குற்றாலம் அருவிகளில் எண்ணெய், சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்க அனுமதி கிடையாது.

மேலும், பேரருவிப் பகுதியில் துணிகளைத் துவைக்கவும், ஆயில் மாலிஷ் கூடங்கள் போன்றவை செயல்படவும் போலீஸார் தடை விதித்தனர். மேலும், மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அருவிப் பகுதியில் மதுக் கடைகள் இயங்கக் கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.



அதனடிப்படையில், குற்றாலம் பேருந்துநிலையம் பகுதியிலும், லட்சுமிபுரம் தெருவிலும் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக் கடைகள் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிமுதல் மூடப்பட்டன.

பக்கத்து ஊரில் திறக்கவும் எதிர்ப்பு: குற்றாலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையடுத்து, குற்றாலம் அருகேயுள்ள காசிமேஜர்புரத்திலிருந்து குற்றாலம் ராமலாயம் செல்லும் சாலையில் சனிக்கிழமை புதிய கடை திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காசிமேஜர்புரம் மற்றும் குற்றாலம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகாலைமுதல் புதிய கடை முன் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அந்தச் சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



சம்பவ இடத்துக்கு டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். அந்த இடத்தில் புதிய கடை செயல்படாது என அறிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.