Sunday, May 18, 2014

இனிதான் வேலை இருக்கிறது தோழர்களே!




இடதுசாரிகளின் வீழ்ச்சிதான் இந்தத் தேர்தலில் அதிகம் கவலை அளிக்கும் விஷயம். 2004-ல் 63 இடங்களைப் பெற்ற இடதுசாரிகள் 2009-ல் 24-ஆகச் சுருங்கினர். இப்போது அந்த எண்ணிக்கை 12-ஆகக் குறைந் துள்ளது. இந்த முறை மேற்கு வங்கத்தில் தனித்து நின்ற பா.ஜ.க.

இரண்டு இடங்களைப் பெற்றிருப்பது அக்கட்சிக்குக் கொண்டாட்டத்துக்குரிய விஷயம் என்றால் இடது சாரிகள் இரண்டு இடங்கள் மட்டுமே பெற்றிருப்பது அதிர்ச்சிக்குரியது.

கம்யூனிஸ்டுகள் பெருவாரி யான மக்களின் மனதைக் கவர முடியாமல் போனதற்கு இந்திய மண்ணுக்கேற்ப அவர்கள் மார்க்சியச் சித்தாந்தத்தைப் பிரயோகிக்காதது முக்கிய மான ஒரு காரணம் என்றால் மக்கள் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளில் சாதி, மதம், இனம், மொழி, தனிமனித வழிபாடு போன்ற உணர்வுகளுக்கு அளித்த முக்கியத்துவத்தில் ஒரு பகுதியைக் கூட வர்க்க உணர்வுக்கு அளிக்கவில்லை.

ஆனால், இன்று தாங்கள் ஏற்கெனவே வலுவாகக் காலூன்றியிருக்கும் பகுதிகளில் இடதுசாரிகள் சந்தித்திருக்கும் பெரும் பின்னடைவை இந்தக் காரணம் கொண்டு விளக்க முடியாது.

34 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இருந்தும், பொருளாதார நிபுணர்களை நிதியமைச்சர்களாகப் பெற்றிருந்தும் மேற்கு வங்கம் உயராமல் போனது ஏன்? இதற்கான பொறுப்பை இடதுசாரிகள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இந்நிலையை மாற்ற இடதுசாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் பெரும் தோல்விக்கு வழிவகுத்தன. சிங்கூர் மற்றும் நந்திகிராம் முயற்சிகள் மக்களை இடதுசாரிகளுக்கு எதிராகத் திரட்ட உதவின.

இன்று திரிணமூல் கட்சி பெற்றிருக்கும் பெரும் வெற்றியின் அடித்தளம் இதுவே. ஆனால், சிங்கூர் மற்றும் நந்திகிராம் மட்டுமே இன்றைய தோல்விக்கான காரணம் என்று புரிந்துகொண்டால் அது தவறு. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வர்ஜாவர்ஜமின்றி, அனைத்து மாநிலக் கட்சிகளுடனும் கூட்டுசேர்ந்தது இவர்கள் ஒரு மாற்று சக்தி என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்துவதற்குப் பாதகமாக முடிந்து விட்டது.

ஊழலைப் பொறுத்த வரை காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் வித்தியாசம் இல்லை என்று கூறிவிட்டு ஊழல் என்ற குட்டையில் ஊறித் திளைத்திருக்கும் லாலு, முலாயம், ஜெயலலிதா, கருணாநிதி போன்றோருடன் தொடர்ந்து கூட்டு வைத்தது இவர்கள் மாற்று சக்தி என மக்கள் நம்ப முடியாது செய்துவிட்டது. பெரும்பான்மை மதவாதத்தைக் கடுமை யாகச் சாடிய இடதுசாரிகள் சிறுபான்மை மதவாதத்தை மென்மையாக அணுகியது இந்துத்துவா சக்திகளுக்கே சாதகமாக முடிந்தது.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் போது பின்பற்றும் அதே ஈவிரக்கமற்ற அணுகுமுறையை, தங்கள் தலைவர்கள் விஷயத்திலும் காட்டு வோம் என்பதை நிரூபிக்கக் கிடைத்த ஓரிரு வாய்ப்புகளை இடதுசாரிகள் தவறவிட்டனர்.

ஊடகங்கள் மோடிக்கு அளிப்பதைப் போன்ற ஒரு ஆதரவை இடதுசாரிகள் ஒருபோதும் பெற முடியாது. இவை தங்கள் தொண்டர் பலத்தை மட்டுமே நம்பியிருப்பவை. மாநிலக் கட்சிகளுடன் மாறிமாறிக் கூட்டுவைத்ததன் விளை வாக எங்குமே இடதுசாரிகளின் தொண்டர் பலம் அதிகரிக்கவேயில்லை. மாறாக, பிஹார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இழப்பையே அதிகம் சந்தித் திருக்கிறார்கள்.

ஆக, தங்களது இருப்பை தேசிய அரசியலில் மீண்டும் முக்கியத்துவம் கொண்டதாக ஆக்குவதற்கான இடதுசாரி களின் திட்டம் நீண்ட கால அடிப்படையி லானதாக மட்டுமே இருக்க முடியும். அடுத்த சில ஆண்டுகளில் மம்தா பானர்ஜியின் மோசமான ஆட்சியின் காரணமாக மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கிறது.

ஆனால், அது போதுமானதல்ல. மதச்சார்பின்மையாக இருந்தாலும் சரி, பொருளாதாரக் கொள்கைகளாக இருந்தாலும் சரி, மக்களின் சிந்தனைப் போக்கில் மாற்றத்தைக் கொண்டுவர இடதுசாரிகள் பாடுபடுவது மட்டுமே அவர்கள் முன்னிருக்கும் ஒரே வழி. மிகக் கடினமான வழிதான். குறுக்கு வழிகள் ஏதுமில்லை. தேர்தல்கள் இடதுசாரி அரசியலின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், இப்போதோ அது மைய இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்நிலை மாற வேண்டும்.

க.திருநாவுக்கரசு, சமூக-இலக்கிய விமர்சகர், kthiru1968@gmail.com 

தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.