Wednesday, February 26, 2014

கலவரத்தில் இறந்தவரின் மனைவியை வாழ்க்கைத் துணையாக்கிய நல்ல உள்ளம்

பரமக்குடியில் நடந்த நெகிழ்ச்சித் திருமணம்

சில நேரங்களில் துயரமான சம்பவங்கள்கூட இன்னொரு நல்ல தொடக்கத்துக்கு தடம் போட்டுக் கொடுத்துவிடும். பரமக்குடி கலவரத்தில் தனது காதல் கணவனை போலீஸ் துப்பாக்கிக் குண்டுக்கு காவுகொடுத்த காயத்ரிக்கும் அப்படியொரு தொடக்கம் கிடைத்திருக்கிறது.

பரமக்குடியில் 2011-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் நடந்த கலவரத்தின்போது நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாயினர். அதில் ஒருவர் ஜெயபால்.

பரமக்குடியை அடுத்த மீஞ்சூரைச் சேர்ந்தவர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த காயத்ரியை காதலித்து கலப்பு மணம் செய்திருந்தார். ஜெயபால் இறந்தபோது காயத்ரி நிறைமாத கர்ப்பிணி. அடுத்த 18-வது நாள் ஆண் குழந்தைக்கு தாயானார்.

அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் நின்றவருக்கு பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் கிளார்க் வேலை கொடுத்து ஆறுதல் சொன்னது அரசு.

இந்த நிலையில்தான் காயத்ரியை மறுமணம் செய்துகொள்ள முன்வந்திருக்கிறார் இமானுவேல் சேகரன் பேரவையின் பரமக்குடி ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன். ‘‘ஆண்கள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், ஒரு பெண் கண வனை இழந்தாலோ, பிரிந்து வாழ்ந்தாலோ இன்னொரு திருமணம் செய்துகொள்ள இந்த ஆணாதிக்க சமுதாயம் அவ்வளவு எளிதில் விடுவதில்லை. இந்த நிலையை மாற்றவேண்டும். கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் சிந்தனை.

இமானுவேல் சேகரன் நினைவு தினத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது தோழர் ஜெயபால் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானார். அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. அந்த பாதிப்புதான் அவரது துணைவியாருக்கு மறுவாழ்வு கொடுக்கும்படி என்னை உந்தியது’’ என்கிறார் ராஜேந்திரன்.

ராஜேந்திரனின் விருப்பத்தை காயத்ரியிடம் எடுத்துச் சொல்லி சம்மதம் பெற்ற இமானுவேல் சேகரன் பேரவையினர் இருவருக்கும் கடந்த 16-ம் தேதி பரமக்குடியில் திருமணம் செய்துவைத்துள்ளனர்.

புது வாழ்வு பெற்ற காயத்ரி, ஜெயபாலின் நினைவுகளைச் சுமந்தபடி கண்ணீருடன் பேசினார்.. ‘‘அவங்க இறந்த பின்னாடி, என் பிள்ளைதான் எல்லாம்னு இருந்தேன். அதனால, இவங்க விருப்பத்தைச் சொன்னப்ப முதல்ல நான் சம்மதிக்கல. அப்புறம் சொந்தபந்தங்க எல்லாரும், ‘நல்ல பையனா இருக்காப்ல.. எத்தனை நாள்தான் தனியா இருப்ப.. உனக்கும் ஒரு துணை வேண்டாமா?’ன்னாங்க. யோசிச்சுப் பாத்தேன். திருமணத்துக்கு சம்மதிச்சேன்.’’ சொல்லிவிட்டு மீண்டும் கண்கலங்கினார் காயத்ரி. இது ஆறுதலுக்கு ஒரு நிழல் கிடைத்துவிட்டதை அடையாளம் காட்டும் ஆனந்தக் கண்ணீர்.

 நன்றி : குள.சண்முகசுந்தரம் , தி இந்து  



0 comments:

Post a Comment

Kindly post a comment.