மைக்ரோ சாஃப்ட்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவியேற்று ஒரு சில வாரங்களே ஆகியிருக்கின்றன. தேனிலவுக் காலத்தை எல்லாம் உதறிவிட்டு ஓடிக்கொண்டிருக்கிறார் சத்யா நாதெள்ள.
உங்களுக்கு முன் இந்தப் பதவியை வகித்த ஸ்டீவ் பால்மரிடமிருந்து நீங்கள் கற்ற பாடம் என்ன?
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், வருடாந்திர ஆய்வுக்கூட்டத்தில் அவருடன் கலந்து கொண்டேன். “நான் எப்படிச் செயல்படுகிறேன்?” என்று கேட்டேன். “உங்களுக்குத் தெரியும், எனக்குத் தெரியும், மற்றவர்களுக்கும் தெரியும். உங்களைப் போன்ற உயர் நிலையில் உள்ளவர்கள் எப்படிச் செயல்படுகிறீர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிடும். எனவே, அதை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதே இல்லை” என்றார்.
“எனக்கு முன்னால் இந்தப் பதவியில் இருந்தவர்களுடன் ஒப்பிடும்போது நான் எப்படிச் செயல்படுகிறேன் என்று தெரிந்துகொள்ள வேண்டாமா? ” என்று கேட்டேன்.
“யாருக்கு வேண்டும் இந்த ஒப்பிடல் எல்லாம்; அவர்கள், அவர்களுடைய காலத்தில் அவர்களுக்கு இருந்த வசதிகளுடன், அவர்களுக்கு ஏற்பட்ட சவால்களைச் சமாளித்திருப்பார்கள். அதை வைத்து உங்களை இப்போது எப்படி எடைபோட முடியும்?
உங்களுக்குள்ள இலக்குகளை எப்படி நீங்கள் அடைகிறீர்கள் என்பதுதான் எனக்கு முக்கியம். இதில் மட்டுமே நீங்கள் கவனம் செலுத்த வேண்டும், முன்னால் இருந்தவர் எப்படிச் செயல்பட்டார் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இப்போதுள்ள பிரச்சினை கள், சவால்களைத் தீர்ப்பதில் மட்டுமே நீங்கள் அக்கறை காட்ட வேண்டும். உங்களுடைய கடமையை, முழுத் திறமையுடன், அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுகிறீர்களா என்று நேர்மையாக நீங்களே உங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும்” என்றார்.
பில் கேட்ஸ் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
பில் கேட்ஸ் எதையும் தீவிரமாகப் பகுப்பாய்வு செய்வதில் வல்லவர். அவர் எல்லாத் தகவல்களையும் உள்வாங்கிக்கொண்டு, எப்போதும் தயார் நிலையிலேயே இருப்பார். நாம் எதையாவது கூறத் தொடங்கும்போது முதல் ஐந்து விநாடிகளுக்குள்ளாகவே நாம் சொல்லும் விஷயத்தில் உள்ள தர்க்கரீதியிலான குறையைச் சுட்டிக்காட்டுவார். தொடக்கக் காலத்தில் அவர் என்றாலே எனக்குள் அச்சம் ஏற்படும்.
உண்மையில் அவர் யதார்த்தவாதி. உங்களுடைய கருத்தை அவரிடம் விவாதித்துச் சம்மதிக்க வைக்க முடியும். தொடக்கத்தில் ஓரிரு நிமிஷங்கள் வெகு தீவிரமாக உங்களுடைய கருத்தை ஏற்காததுபோல விவாதித்தாலும் இறுதியில் - நீங்கள் சொல்வதுதான் சரி என்று சொல்வதில் முதலாவதாக இருப்பார்.
பில் கேட்ஸ், ஸ்டீவ் பால்மர் ஆகியோரிடம் உள்ள பொதுவான குணம், முதலில் உங்களுடைய கருத்தில் நீங்கள் எந்த அளவு உறுதியாக இருக்கிறீர்கள் என்று சோதித்துப் பார்ப்பதுதான்.
பில் கேட்ஸ் உங்களுடன் சேர்ந்து என்ன செய்யப்போகிறார் என்று அறிந்துகொள்ள நிறைய பேருக்கு ஆர்வமாக இருக்கிறது?
வெளியில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் இவரும் பில் கேட்ஸும் எப்படி இணைந்து செயல்படுவார்கள் என்ற வியப்பு ஏற்பட்டிருக்கலாம். கடந்த ஒன்பது ஆண்டுகளாகவே நாங்கள் இருவரும் சேர்ந்துதான் பணிபுரிந்துவருகி றோம். எனவே, எனக்கு இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. என்னுடன் சேர்ந்து பணியாற்ற மேலும் நேரம் ஒதுக்கிக்கொள்ளுமாறு அவரிடம் கோரியிருக்கிறேன். சில வேளைகளில் அவர் தனக்கு இருக்கும் பெரிய வேலைகளைத் தள்ளிவைத்துவிட்டு, சரி உங்களுடைய வேலை என்ன என்று கேட்டு, எங்களுடன் பேசி உற்சாகப்படுத்துவார். மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள எல்லோரையும் ஆற்றல் மிக்கவர்களாக மாற்றி, அவர்களுடைய மிகச் சிறந்த திறமைகளை வெளிக்கொண்டுவருவதுதான் அவருடைய தனிச் சிறப்பு. அது அவருக்கு இயற்கையில் ஏற்பட்ட வரம்.
புதிய பொறுப்பில் உங்களுடைய நிர்வாக அணுகுமுறை எப்படியிருக்கும்?
நிறுவனத்தின் வெவ்வேறு பிரிவுகளில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் குழுவினால் கிடைக்கக்கூடிய பலன்களை, எந்த அளவுக்கு அதிகபட்சம் உயர்த்த முடியும் என்பதில்தான் இப்போது கவனம் செலுத்துகிறேன். அவர் களின் தலைமைப் பொறுப்புகளை வலுப்படுத்தவும் வளர்த்தெடுக்கவும் நான் என்ன செய்யப்போகிறேன் என்பதுதான் முக்கியம். இந்த நிறுவனத்தின் உயர் பதவி யில் உள்ள பலருடன் நான் ஒரு காலத்தில் இணைந்து வேலை செய்திருக்கிறேன். அனைவரையும் இணைத்து, அவரவர் வேலைகளில் பற்றுதலோடு ஈடுபடுத்தி, அதில் வெளிப்படும் ஆற்றலை அனைவரையும் உணர வைப்பதே என் பணி. தனித்தனியாக ஒவ்வொருவரையும் வைத்து நான் அவர்களை எடைபோடுவதில்லை. அசாதாரணமான திறமைகள் இல்லாமல் அவர்களால் இங்கே வந்திருக்க முடியாது. நான் எங்களை ஒரு அணியாகத்தான் மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். நாம் முறையாக ஒருவருக்கொருவர் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறோமா, ஒருவர் மற்றொரு வருடைய திறமைகளை நிறுவனத்தின் நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறோமா என்பதுதான் முக்கியம்.
மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் ஒன்றே என்ற ஐக்கிய உணர்வை ஏற்படுத்துவதுதான் லட்சியம் என்று உங்களுடைய நிறுவனம் கூறியிருக்கிறது, அதை எப்படிச் சாதிக்கப்போகிறீர்கள்?
எங்களுடைய தலைமை அணியின் நோக்கம் என்ன என்பதுகுறித்து நீண்ட விவாதங்களை நடத்தியிருக்கிறோம். முதல் கூட்டத்திலேயே அதுகுறித்துப் பேசியிருக்கிறோம். எங்களுடைய நிறுவனத்தின் செயல்பாட்டில் தெளிவு, சீர்மை, தீவிரமான ஈடுபாடு ஆகியவற்றைக் கொண்டுவரும் கட்டமைப்பை ஏற்கெனவே உருவாக்கியிருக்கிறோம். ஏற்கெனவே நாங்கள் வகுத்த வெற்றிகரமான உத்தியின் அடிப்படையிலேயே அந்தந்தச் சூழல்களுக்கு ஏற்பச் செயல்பட்டுவந்திருக்கிறோம். இப்போது புதிய உத்தியை வகுக்க வேண்டும். 1,30,000 பேருடைய அறிவுத்திறனை எப்படிப் பயன்படுத்தப்போகிறோம்? அமைப்புரீதியான எந்தக் கட்டமைப்பும் இப்போது அர்த்தமற்றதாகிவிட்டது. ஏனென்றால், தொழில்ரீதியாக வரக்கூடிய போட்டிகளும் புதிய கண்டுபிடிப்புகளும் இந்த எல்லைகள், கட்டமைப்புகளை எல்லாம் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.
உங்களுடைய புதிய பொறுப்பை எப்படி அணுகுவது என்ற இறுதித் திட்டம் ஏதாவது தயாராக இருக்கிறதா?
இந்தத் துறையில் நீண்டகாலம் என்பது, உங்களை நீங்களே புதிதாக அறிந்துகொள்வது அல்லது எதிர்காலத்துக்கு என்ன என்று புதிதாகக் கண்டுபிடிப்பது. எங்களைப் பொறுத்த வரை 39 ஆண்டுகளாக வெற்றிபெற்றுவருவதால் புதிதாகக் கண்டுபிடிப்பதுதான் லட்சியமாக இருக்க முடியும். நாங்கள் மிகப் பெரிய வெற்றிகளைக் குவித்திருந்தாலும் எங்களுடைய எதிர்காலம் என்பது கடந்த கால வெற்றிகளை மட்டுமே பொறுத்ததல்ல. எதிர்காலத்துக்கு எங்களை இட்டுச்செல்லக்கூடிய வகையில் புதிதாக எதையாவது கண்டுபிடிப்போமா என்பதில்தான் வெற்றி இருக்கிறது. மனித நாகரிகமானாலும் குடும்பங்களானாலும் நிறுவனங்களானாலும் தோன்றுவதும் சரிவதும் இயற்கை. மனித ஆயுளைவிட நிறுவனங்களின் ஆயுள் குறைவு. வெகுசில நிறுவனங்கள்தான் 100 ஆண்டுகளைக் கடந்தும் செயல்படுகின்றன. எங்களுடைய நிறுவனத்தை நூற்றாண்டு நிறுவனமாக மாற்றுவதுதான் எங்களுடைய லட்சியம்.
© நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி.
நன்றி : தி இந்து
0 comments:
Post a Comment
Kindly post a comment.