இந்தியாவின் முதல் அஞ்சலக சேமிப்பு வங்கி ஏ.டி.எம். மையம் சென்னை தியாகராய நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தினை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 1000 ஏ.டி.எம்.மையங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அஞ்சல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடக்க விழாவில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியது:
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அஞ்சல் துறை மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 1 லட்சத்து 55 ஆயிரம் அஞ்சல் நிலையங்களை தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துடன்
நவீனமயமாக்க ரூ.4 ஆயிரத்து 909 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் அஞ்சல் நிலையங்களை நவீனமயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கடிதப் போக்குவரத்து குறைந்துள்ள நிலையில் அஞ்சல் நிலையங்கள் தற்போது தேவையா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அஞ்சல் துறை மூலம் வழங்கப்பட்டு வரும் பிற சேவைகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
நாட்டிலேயே முதல் முறையாக தியாகராய நகரில் அஞ்சலக ஏ.டி.எம். மையம் தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மையம் 6 மாதங்கள் வரை சோதனை முறையில் செயல்படும். அதன் பிறகு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களும் இந்த ஏ.டி.எம். மையத்தை உபயோகிக்கலாம் என்றார் அவர்.
இந்திய அஞ்சல் துறை செயலர் பத்மினி செய்தியாளர்களிடம் கூறியது:
நாட்டில் உள்ள 60 அஞ்சல் நிலையங்கள், தற்போது அஞ்சலக வங்கி சேவைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 64 லட்சம் சேமிப்புக் கணக்குகள் மற்றும் ரூ.11 ஆயிரத்து 840 கோடி பணம் இதுவரை வங்கி சேவைக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 17 தலைமை அஞ்சலகங்கள் உள்பட 20 அஞ்சல் நிலையங்கள் வங்கிகளாக மாற்றப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டு இறுதிக்குள் 1000 ஏ.டி.எம். மையங்களும், அடுத்த ஆண்டுக்குள் கூடுதலாக 1800 ஏ.டி.எம். மையங்களும் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.
வங்கிகளைக் காட்டிலும் அதிக இடங்களில் அஞ்சலகங்கள் இருப்பதால் நாட்டின் அனைத்து இடங்களிலும் அஞ்சலக வங்கி சேவையைத் தொடங்க முடியும். 26 ஆயிரத்து 840 அஞ்சல் நிலையங்களை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் வங்கி சேவை மையங்களாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தினமணி
0 comments:
Post a Comment
Kindly post a comment.