Saturday, December 7, 2013

இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்


தென் ஆப்பிரிக்காவின் "காந்தி' மண்டேலா

தென் ஆப்பிரிக்க நிறவெறிக் கொள்கைகளுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற நெல்சன் மண்டேலா, இந்திய நாட்டின் தந்தை மகாத்மா காந்தியை தனது "அரசியல் குரு' என போற்றி வந்தார்.

காந்தியின் அஹிம்சை, சத்யாகிரக கொள்கைகளை பின்பற்றி வந்த மண்டேலா தென் ஆப்பிரிக்காவின் காந்தி என்றும் அழைக்கப்பட்டார். நிறவெறிக்கு எதிராக மண்டேலாவும், இந்திய விடுதலைக்காக மகாத்மா காந்தியும் பலமுறை சிறைக்கு சென்று வந்தது இருவரிடம் காணப்படும் ஒற்றுமை.

இதை எடுத்துகாட்டும் வகையில் 27 ஆண்டுகாலம் சிறை வாழ்க்கைக்கு பின்னர் வெளியே வந்ததும் மண்டேலா 1993ஆம் ஆண்டு காந்தியின் சிலையை தென் ஆப்பிரிக்காவில் திறந்து வைத்தார்.

அப்போது, "இந்தியா காந்தியின் பிறப்பு நாடு என்றால், தென்ஆப்பிரிக்கா காந்தியை தத்தெடுத்த நாடு. அவர் இரண்டு நாடுகளின் குடிமகன்' என்று மண்டேலா குறிப்பிட்டார்.

இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா மண்டேலாவுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு இந்தியாவின் உயரிய விருது வழங்கப்படுவது இந்திய வரலாற்றில் முதல் முறையாகும்.

1995ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த நெல்சன் மண்டேலா குஜராத் மாநிலம் ஆமதாபாதில் காந்தி அமைத்த சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார்.

"தென் ஆப்பிரிக்காவின் நிறவெறி போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்களிப்பும் உள்ளது. ஆகையால் இந்தியர்களுக்கு மதிப்பு அளித்து வருகிறோம்.

ஏழைகள் மீது காந்தி வைத்திருந்த அன்பும், எளிமைத்தன்மை, வாழ்வில் அவர் கடைப்பிடித்த நன்னடத்தை நெறிமுறைகள் அளவுக்கு தாம் எப்போதும் அடைய முடியாது' என்று மண்டேலா குறிப்பிட்டார்.

சட்டப்படிப்பை முடித்துவிட்டு தென்ஆப்பிரிக்காவில் வழக்குரைஞராக 1893ஆம் ஆண்டு முதல் 1914ஆம் ஆண்டு வரை காந்தி பணியாற்றிய போது இந்தியர்களுக்கான நாளிதழ் ஒன்றை நடத்தி வந்தார்.

அதில் "எனது கருத்துகளை தென் ஆப்பிரிக்காவில் யாராவது நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள்' என்று ஒருமுறை மகாத்மா காந்தி குறிப்பிட்டிருந்தார். அந்த வரலாற்று குறிப்பை பின்பற்றியதாகவே மண்டேலாவின் வாழ்க்கை குறிப்பும் அமைந்துள்ளது.                                                                                                                                   
நன்றி :- தினமணி , 07 - 12 -2013                                                                                                                  


0 comments:

Post a Comment

Kindly post a comment.