Wednesday, December 4, 2013

பணம் வாங்கினால் ஓராண்டு ஜெயில்: எஸ்.எம்.எஸ். மூலம் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

ஓட்டுப்போட
ஏற்காடு இடைத்தேர்தலில் ஓட்டுப்போட பணம் வாங்கினால் ஓராண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும் என்று எஸ்.எம்.எஸ். மூலம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஏற்காடு இடைத்தேர்தலையொட்டி, அனைத்து வாக்காளர்களுக்கும், மாவட்ட தேர்தல் அதிகாரி மூலம் வாக்காளர் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த சீட்டு பெறாத வாக்காளர்கள் தேர்தல் நாள் அன்று (நாளை) வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டரில் பெற்றுக்கொள்ளலாம்.

இதுதவிர, வாக்காளர் பெயர் பட்டியலில் செல்போன் எண்ணை பதிவு செய்த வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அது தொடர்பான விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன், ‘பணம் வாங்காமல் வாக்களியுங்கள். உங்கள் எதிர்காலத்தை விற்காதீர்கள்’ என்ற விழிப்புணர்வு வாசகமும் அனுப்பப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான சுவரொட்டிகள் வாக்குச்சாவடி முன்பும், பொது இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘பணம் பெறாமல் வாக்களிக்க வேண்டும். ஓட்டுகளை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஓராண்டு வரை ஜெயில் தண்டனை கிடைக்கும்’ என்பதை சுட்டிகாட்டும் விதமாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாலைமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.