மஞ்சள் ப்ளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டிருந்த அந்தப் பொட்டலத்தினுள் அப்போதுதான் பிறந்திருந்த பெண் குழந்தை ! அறுக்கப்படாத தொப்புள் கொடியுடன்! உடனே அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. குழந்தை இறந்துவிட்டது என்று மருத்துவர் சொன்னதும் அந்த அடுக்கு மாடிக்கட்டடத்தின் 12 மாடிகளுக்கும் போலீஸ் சென்று ஒவ்வொரு வீடாகச் சோதித்தது. ஆறு மணிநேரத்திற்குப்பிறகு 16 வயதேயான ஜீன்ஸ் அணிந்திருந்த ஒரு பெண்ணைக் கைதுசெய்து அழைத்துச்சென்றனர். இது முற்றிலும் விசித்திரமானதும் கொடுமையானதுமான புதுவகைக் குற்றம். பெரும்பாலும் சிங்கப்பூரில் (பதிமவயதுப் பெண்களால்) இலகு ரயில் நிலையம், குப்பைத் தொட்டி, மாடிப்படியின் கீழ், மின்தூக்கி என்று பல்வேறு இடங்களில் நிராகரித்து/புறக்கணித்து விடப்பட்ட சிசுக்களையே இதுவரை சிங்கப்பூரர்கள் செய்திகளின் வாயிலாக அறிந்துவந்துள்ளனர். சில இறந்தவை. அவற்றில் சில உயிரோடு கண்டெடுக்கப்பட்டு பிறகு இறந்தவை. மற்றவை பின்னாளில் தத்துக்கொடுக்கப்பட்டவை.
கீழே விழுந்த பொட்டலத்தை விழும்போது பார்த்த அருகில் இருந்த சூப்பர் மார்கெட் கேஷியர் ஒருவர் பதறியிருக்கிறார். கைதான பெண்ணைப்பற்றி ‘நார்மல்’ என்றே அந்தக் கட்டடத்தில் வசிக்கும் பலர் சொல்லியிருக்கின்றனர். 40 வயதுப் பெண்மணி ஒருவர் எப்போதுமே ஒரு பையனுடன் இரவுவேளைகளில் மாடிப்படிகளின் கீழ் அவளைப்பார்த்ததாகக் கூறினார்.
சுகாதார அமைப்போ வேறு எந்த அமைப்பும் மணமாகாதபெண்களின் பிரசவங்களைக் கணக்கெடுப்பதில்லை. இருப்பினும், 2002ல் தந்தையின் பெயர் தெரியாமலே 501 குழந்தைகள் பிறப்பேட்டில் பதிவாகியிருக்கின்றன. அதில் மூன்றில் ஒரு பங்கு பதின்மவயதுப் பெண்களுக்குப் பிறந்தவை. இதே எண்ணிக்கை 1995ல் அதைவிடக் குறைவாகவே (407) இருந்திருக்கிறது. 1998 ஆம் ஆண்டிலிருந்து சராசரியாக 1500 பதின்மவயதுப் பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளனர்.
வேண்டுமென்றே தன் குழந்தையை மரணத்திற்கு அனுப்பிய இந்தப்பெண் உண்மையில் ‘கொலைகாரி’ தான். என்றாலும்கூட குழந்தையைப் பிரசவித்தபின் மனதளவில்/உடல்ரீதியிலும் முழுவதுமாகக் குணமாகியிருக்கவில்லை அவள் என்ற முக்கிய காரணத்தைச் சட்டம் கவனத்தில் கொள்வதால், இந்தக் குற்றத்தைப் புரிந்துள்ள இந்தப் பதின்மவயதுப் பெண்ணிற்கு ஆயுள் தண்டனையாக 10 வருடச் சிறைவரை கிடைக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
பதின்ம வயதுப் பெண்கள் கருவுரும்போது அவளைப் பிள்ளைபெற ஊக்குவித்து, பிள்ளை பிறந்ததும், அதை தத்துக் கொடுக்க ஏற்பாடு செய்யும் பெற்றோர் இங்கு அதிகம். அவ்வகைப் பெண்கள் பெற்றெடுக்கும் வரை தெலோக் குராவில் இருக்கும் கிரேஸ் ஹோமில் இருக்கிறார்கள். அவ்வாறு பிரசவிக்கவிருந்த 17 வயதுப் பெண் ஒருத்தி. இவள் சிதைந்த குடும்பத்தில் இருந்து வந்தவள். ஆறுமாதமே பழகிய தன் ஆண் நண்பனுடன் உடலுறவுகொண்டு கருவுற்றுவிட்டாள். கைதான அந்தப்பெண்ணின் நிலையைக் கண்டு அரண்டிருக்கிறாள். தனியே இருக்கும் அந்தப் பெண்ணிற்கு என்னசெய்வது என்றே தெரியாததால் தான் அவள் அப்படிச் செய்திருப்பாள், இப்போது குற்றவாளியாகியிருக்கிறாள். இது துரதிருஷ்டமே என்கிறாள். அந்தப்பெண்ணின் மனவுளைச்சலை மிகச்சரியாகப் புரிந்துகொள்ள முடிகிறது இவளால்.
பொதுவாகவே மணமாகுமுன் உடலுறவு கொள்வோரின் எண்ணிக்கை (பெரும்பாலும் பதின்மவயதினர்) தற்போது அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த இரண்டுங்கெட்டான் வயதுப்பெண்கள் தங்களுக்கு ஆதரவாய் யாரும் இல்லையென்ற பாதுகாப்புணர்வில்லாத நிலையில் இவ்வகைக்குற்றங்கள் செய்யத் தலைப்படுகின்றனர். இவர்களின் பிரச்சனைகளுக்கு ஆரம்பகாரணம் இவர்களுக்கு உடலுறவு, கருவுருவாதல், பாதுகாப்பு போன்றவற்றைப் பற்றிய சரியான அறிதல் இல்லை. இவர்களுக்கு ‘விழிப்புணர்வு’ மிகமிக அவசியம் என்பதே உளவியலாளர்களின் பரிந்துரை. பெரும்பாலும் இவ்வகைப்பெண்கள் பிரச்சனையோடு தனித்துவிடப்படுகின்றனர். மணமாகாமல் அடையும் தாய்மை சமூகத்தில் பழிக்கப்படுகிறது என்பதே இவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் மிகப்பெரிய பயம்.
மணமாகாமல் பெற்றெடுக்கும் பெண்கள் தங்களின் குழந்தைகளை விட ஓர் இடம் வேண்டும் என்பது பெரும்பாலோரின் கருத்து. ஆனால், இது நல்ல தீர்வாகாது என்பதே சமூகவியலாளர்களின் கருத்து. இப்படிச்செய்தால், இளையர்கள் பாதுகாப்பில்லாமல் உடலுறவுகொண்டு, குழந்தை பிறந்தால் விட்டுவிட்டுப் போய்விடலாம் என்ற கருத்து பரவ ஆரம்பித்து இத்தகையோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிறார்கள் இவர்கள்.
இப்போது புதிதாக ஒரு சேவை தொடங்கப்படவுள்ளது. அதுதான் குறுஞ்செய்தி சேவை. எஸ் எம் எஸ் சேவை மூலம் இத்தகைய கருவுற்ற பெண்கள் உதவியை நாடலாம். உடனே தொண்டூழியர்கள் (சோஷியல் செர்விஸ் செய்வோர் ) அனுப்பிவைக்கப்படுவார்கள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False
நன்றி – ஜெயந்தி சங்கர் @ , http://www.tamiloviam.com
0 comments:
Post a Comment
Kindly post a comment.