Wednesday, November 13, 2013

மோடிக்கு போட்டியாக பீகாரில் உலகின் மிகப்பெரிய கோவில்: மாதிரி வடிவத்தை அறிமுகம் செய்தார் நிதிஷ்



குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியும், அவரது அரசியல் எதிரியான பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் உலகளாவிய கட்டுமானங்களை நிர்மாணிப்பதில் போட்டி போடுகின்றனர். சமீபத்தில் குஜராத்தில் உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைப்பதற்கு மோடி அடிக்கல் நாட்டினார்.

இதற்கு போட்டியாக பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து 120 கி.மீ. தொலைவில் விராட் ராமாயண கோவில் கட்டப்படுகிறது. இக்கோவில் மாதிரியை நிதிஷ்குமார் இன்று திறந்து வைத்தார்.

சர்தார் பட்டேல் சிலை விஷயத்தில் மோடி நேரடியாக பணியாற்றுகிறார். ஆனால், பீகார் கோவில் கட்டும் பணியில் நிதிஷ்குமாரோ அவரது கட்சியோ நேரடியாக செயலாற்றவில்லை. 

பீகாரில் ரூ.500 கோடி மதிப்பில் உருவாகும் இந்த ராமர் கோவில், கட்டுமானப் பணி முடிவடையும்போது 400 அடி உயரம் கொண்டதாக இருக்கும். இது, கம்போடியாவின் அங்கோர் வாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய இந்து கோவிலை விட மூன்று மடங்கு பெரியதாக இருக்கும்.

இந்த கோவில் 190 ஏக்கரில் 5 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்படுகிறது. கிருஷ்ணர், சிவன் மற்றும் பல்வேறு கடவுள்களின் சிலைகளுடன் கூடிய 18 வெவ்வேறு கோவில்களும் இங்கு அமைய உள்ளன.

இதற்காக நாடு முழுவதிலும் இருந்து மக்களிடம் நன்கொடை வசூலிக்கப்பட உள்ளது. 5 ஆண்டுகளில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.                         

நன்றி :- மாலைமலர்-13-11-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.