தஞ்சாவூர் விளார் கிராமத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு
முற்றத்தின் சுற்றுச்சுவர் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென
அகற்றப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் புறம்போக்கு நிலத்தில்
கட்டப்பட்டிருப்பதாக கூறி நெடுஞ்சாலைத்துறையினர், காவல்துறையினர் உதவியுடன்
இடித்தனர். பாதுகாப்பு பணியில் 100க் கணக்கான போலீசார்
ஈடுபடுத்தப்பட்டனர்.
பழ. நெடுமாறன் கைது:
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள்,
தஞ்சையில் கைது செய்யப்பட்டதாக தகவல். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின்
சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி
போராட்டத்தில் ஈடுபட்டதால் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் முறையான அனுமதி பெற்றே
அமைக்கப்பட்டது. இதில் எந்த ஒரு சட்ட மீறலும் இல்லை. இந்நிலையில், எவ்வித
முன் அறிவிப்பும் இன்றி நினைவு முற்றம் இடிக்கப்பட்டுள்ளது.
இதனை
எதிர்த்து, நீதிமன்றத்தை அணுகுவோம்.முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின்
சுற்றுசுவர் இடிக்கப்பட்டது குறித்து பிறகட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து
அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான முடிவு எடுக்கப்படும் என பழ.நெடுமாறன்
தெரிவித்திருந்தார்.
சவால்களுக்கு இடையே திறக்கப்பட்ட நினைவு முற்றம்:
தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நவம்பர் 6-ஆம்
தேதியன்று திறக்கப்பட்டது. இலங்கை முள்ளிவாய்க்காலில் 2009-ம் நடைபெற்ற
போரின்போது இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக, தஞ்சாவூர்-
திருச்சி நான்குவழிச் சாலையோரத்தில் உள்ள விளார் கிராமத்தில்
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது.
நினைவு முற்றம் திறப்பு விழா நவம்பர் 8-ல் தொடங்கி மூன்று நாட்கள்
நடைபெறும் எனவும், உலகம் முழுவதிலுமிருந்து தமிழறிஞர்கள், அரசியல்
கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும்
அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், திறப்பு விழா நிகழ்ச்சிக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்ததோடு,
இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களையும் மிரட்டி வந்துள்ளனர். இதையடுத்து, உயர்
நீதிமன்ற மதுரை கிளையில் திறப்பு விழாவுக்கு அனுமதி கோரி செய்த முறையீட்டை
செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிமன்றம், திட்டமிட்ட நாளில் நிகழ்ச்சியை
நடத்த அனுமதியும் பாதுகாப்பும் அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், புதன்கிழமை காலை 11 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்புக்காக
அழைக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், தோழமைக் கட்சித் தலைவர்கள், ஆதரவாளர்கள்
முன்னிலையில் பழ. நெடுமாறன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை
திறந்துவைத்தார்.
தமிழர்களின் ஒப்பற்ற கலைக்கோயில்:
நினைவுமுற்றத்தை திறந்து வைத்துப் பேசிய பழ. நெடுமாறன்: "மூன்றாண்டு
காலமாக, உலகத் தமிழர்களின் உதவியுடன் இந்த முற்றத்தின் வேலைகள் சிறப்பாக
நடந்து வந்தன. இரவு பகலாக பெரும் உழைப்பைச் செலுத்தி இந்த முற்றம்
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் யாருக்கும் எதிரானது அல்ல.
தமிழர்களின் ஒப்பற்ற கலைக்கோயில் இது என தெரிவித்தார்.
உளவு துறை கண்காணிப்பு:
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்படுவதற்கு வெகு நாட்களுக்கு
முன்னர் இருந்தே உளவுத் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அங்கு, தனியாகப்
பீடத்துடன் அமைக்கப்பட்டிருந்த சிற்பம் மூடப்ப ட்ட நிலையிலேயே இருந்தது.
இது பிரபாகரனின் சிலையாக இருக்குமோ என்று உளவுத்துறையினர், விசாரித்தபோதும்
ஏற்பாட்டாளர்கள் அதுகுறித்த விவரத்தை ரகசியமாகவே வைத்திருந்ததாகக்
கூறப்படுகிறது.
Keywords: பிரபாகரன், சார்லஸ் ஆன்டனி, பாலச்சந்திரன் , முள்ளிவாய்க்கால், தஞ்சாவூர், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், இலங்கைத் தமிழர், பழ.நெடுமாறன்
தி இந்து - 13-11-2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.