Sunday, November 17, 2013

"நீதி வேண்டும்': கேமரூனிடம் தமிழர்கள் குமுறல்


     யாழ்ப்பாணம் சபாபதி பிள்ளை மறுவாழ்வு முகாமில் தனது குமுறல்களை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனிடம் கூறும் பெண்.
இலங்கைப் போரின் போது காணாமல் போன தமிழர்களைக் கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யாழ்ப்பாணத்தைப் பார்வையிட்ட பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனிடம் இலங்கைத் தமிழர்கள் கண்ணீருடன் வலியுறுத்தினர்.

இலங்கைப் போரில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி வரும் கேமரூன், வடக்கு மாகாணத்தின் முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழக் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.

காமன்வெல்த் மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்றுவிட்டு உடனடியாக, போர் நடைபெற்ற வடக்கு மாகாணத்துக்கு டேவிட் கேமரூன் வெள்ளிக்கிழமை சென்றார். யாழ்ப்பாணத்தில் அவரை தமிழ்ப் பெண்கள் வரவேற்றனர்.

அப்போது, போரின் போதும், அதற்குப் பிறகும் காணாமல் போன தங்கள் உறவினர்களின் புகைப்படங்களையும், அவர்களைக் கண்டுபிடிக்க கோரி கைகளில் வைத்திருந்த மனுக்களையும் கேமரூனிடம் கண்ணீர் மல்க பெண்கள் அளித்தனர்.

பின்னர் சபாபதி பிள்ளை மறுவாழ்வு முகாமுக்கு சென்ற கேமரூன், அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை பார்வையிட்டு அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை உணர்ச்சிப் பூர்வமாக தமிழர்கள் எடுத்துரைத்தனர். தாங்கள் சந்தித்த அநீதிகளுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும் டேவிட் கேமரூனிடம் கேட்டுக்கொண்டனர்.

இலங்கைப் படையினரால் தாக்குதலுக்கு உள்ளாள "உதயன்' பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்று கேமரூன் பார்வையிட்டார்.

"நேரில் பார்வையிட்ட பின்னர் தான் தமிழர்கள் சந்திக்கும் கொடுமைகளின் பாதிப்பு தெரிகிறது' என்று டேவிட் கேமரூன் கூறினார். 1948ஆம் ஆண்டுக்கு பிறகு வடக்கு மாகாணத்துக்கு செல்லும் முதல் வெளிநாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் ஆவார்.

1948ஆம் ஆண்டுக்கு முன்பு இலங்கையில் நடைபெற்ற பிரிட்டிஷ் ஆட்சியின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு ஆதரவான அமைப்பினர் வடக்கு மாகாணத்தில் போராட்டம் நடத்தினர்.                                                                                        
தினமணி, 16-11-2013                                                      

0 comments:

Post a Comment

Kindly post a comment.