Friday, November 15, 2013

அடுத்த அடி என் ஊதியத்தில்தான் விழும்


thamizs selvi 
ஜி.ஜே.தமிழ்ச்செல்வி

மனதில் தோன்றிவிடுகிற இறுக்கம், அதிலிருந்து விடுபடவென​ச்​ செயல்படும் முயற்சி, இரண்டிற்கும்இடையில் ஏற்படும் அந்த நிகழ்வின் பலன்கள் நன்மையாகவும் இருக்கலாம் தீமையாகவும் இருக்கலாம், அது ஒரு நிகழ்வு அது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது அவ்வளவே...


                அந்த இறுக்கம் எங்கிருந்து வருகிறது? எங்கேப் போகப் போகிறது எதுவும் தெரியாது. அது போய்விடும். மீண்டும் ஒரு அசாதாரணமான சந்தர்ப்பத்தில் வந்து நடு நெஞ்​சுக் கூட்டில் உட்கார்ந்து

கொள்ளும்,      அதன் வேர் எண்ணம், அந்த எண்ணம் தரும் பிம்பம், அது தான் இறுக்கத்தின் தங்க முலாம்

​.​ அப்படி ஒரு அசாதாரண சூழலின் போது தான் அவன்வந்தான். அவன் ஒரு இஸ்லாமியன். இஸ்லாமியன்என்று எழுதி விட்ட பிறகே அவனை ஏன் இஸ்லாமியன்என்று வகைப்படுத்துகிறேன் என்றுஎண்ணிக்கொண்டேன்.


     இப்பொழுது நிகழ்ந்துக்கொண்டிருக்கும் வாக்காளர் விரைவு திருந்த பணியின் போது நான் சந்திக்கும்நான்காவது இஸ்லாமியன், முதல் இருவர் சனாவுல்லா மற்றும் பாஷா செயல்களிலும் வார்த்தையிலும் நேர்மை நாணயம் என்று ஒழுக்கம் கடைப்பிடிப்பவர்கள். எனக்காக கொஞ்சம் சிரமப்படுகிறவர்கள், எனக்குண்டான வேலைகளில் பங்கெடுத்து சற்று இலகு தன்மைக்குள் என்னை நிறுத்துபவர்கள். மூன்றாமவர் அகமத் இவர் என் நெருக்கமான நண்பர், ஏனோ எத்தனை முறை சொன்னாலும் பொய் கணக்கு எழுதுபவர், தன்னை திருத்திக்​கொள்ள வேண்டும் என்று ஏன் அவருக்குதோன்றவே இல்லை.


ஒவ்வொரு மனிதரும் அவர்கள் மனக்களத்தில் நிகழும் எண்ணங்களும் வித்தியாசமானவைகள். நான்அவரிடம் சொன்னேன், அகமத் (அவர் ஒரு மாற்று திறனாளி) நீ பொய் கணக்கு எழுத வேண்டிய அவசியம் இல்லை, உனக்குண்டான ஊதியத்தை நான்தந்துவிடுவேன், அவர் மௌனமாக சிரித்தார், அடுத்த முறை கணக்கு கொடுத்த போதும் ஏற்கனவே செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் சேர்த்துக்கொண்டார். இந்த கணக்கும் பொய் தானே என்றால் சிரித்துக்கொண்டே சொல்கிறார்“ இது எப்படி மேடம் பொய்யாகும், எண்ணிக்கை சொல்கிறேன், எண்ணிக்கைக்குரி​ய விண்ணப்பங்கள் இங்கேஇருக்கிறதே” என்றவரை ஒரு அழுத்தப்பார்வை பார்த்ததோடு சரி.


நான் எண்ணியது போல் மாற்றுதிறன் மட்டுமே ஒரு மனிதரை நட்பாக்கிக் கொள்ள தகுதி அல்ல நான்மாற்றுதிறன் கொண்டுள்ளதால், மாற்று​த் ​ திறனாளிகள்மீது கரிசனை ஏற்படுவது இயல்பு என்றாலும்... ​

மாற்று​த்​  திறனாளிகளில் சிலர் சோம்பேறிகள்.அவர்களை எத்தனை உசுப்பினாலும் அந்த இடத்தைவிட்டு வெளிவர அவர்கள் விரும்புவதில்லை. சிலநேரங்களில் பச்சாதாபத்தையும், அதிக​ப்​படியானசலுகைகளையும் எதிர்பார்க்கிறார்கள். (இதில்என்னையும் சேர்த்தே சொல்கிறேன். மற்றகுழந்தைகளைவிட என் தாயார் என்மீது அதிக கவனம்எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இன்றும் அவரோடுசண்டை செய்பவள்தான்  ​நா​ன்) அந்த வகையில் நான்எதையும் கேட்காமல் அவர்கள் என் தேவைகளை செய்துதரவேண்டும் என்றொரு எதிர்பார்ப்பு என்னிடத்தில்எப்போதும் உண்டு. நான் ஊக்கப்படுத்திய 10 பேரில் ஒருநபர் வீதமே அந்த அகச் சூழலில் இருந்து விடுபட்டுஊக்கத்தோடு செயல்படுகிறார்கள். மற்றவர்கள்என்னால் முடியாது, இயலாது, என்று இலவசமாகஎதையாவது பெற்றுக்கொள்ள வகைத் தேடுகிறார்கள்.அதற்கு​க்​  காரணம் என்னவாக இருக்கும் என்று ஆழ்ந்துயோசித்த வேளையில், பால்யத்தில் அவர்களுக்குஏற்பட்ட அனுபவங்கள் அவமானங்கள் ஒதுக்கங்களாகஇருக்கலாம் என்று என்னையே சமாதானப்​படுத்திக்கொண்ட போதும், இந்த சமாதானப்படுத்துதல்எந்த மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை என்றுஎண்ணுகிறேன்.


மேற்கண்ட பத்தியின் ஐந்து வரிகளை தட்டச்சு செய்வதற்கு முன்பாக அந்த மனிதர் வந்தார்

​.​ வாக்காளர் மாற்று அடையாள அட்டைக்கானவிண்ணப்பத்தையும், ஒரு புதிய விண்ணப்பத்தையும்தந்தவர், கட்டணத்தொகை கேட்டதும், அய்யோ சாமிநான் கால் இல்லாதவன் மா என்று இரைஞ்சியதுபரிதாபத்தை தோற்றுவித்தாலும், அந்த இரைஞ்சுதல்இலவசத்தைப் பெற்றுக் கொள்வதற்கான நடிப்பே தவிரஉண்மை அல்ல, அவரால் அந்த கட்டணத் தொகையைகட்ட முடியும். பண விடயத்தில் சில மனிதர்கள்நேர்மையற்றவர்களே என்ற போதும், எந்த ஒன்றைபெற்றுக்​கொள்ளவும் மாற்று திறன் தகுதியா ? என்றால்இல்லை என்பதே பதில்.


இந்த நான்காவதாக நான் சந்தித்த இஸ்லாமியர் படிவம் ஆறை இணையத்தில் விண்ணப்பித்து விட்டு அதற்கான சான்றுகளை அளிக்க அலுவலகம் வந்திருந்தார்.

 நான் அதை அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது...! அந்த உரையாடலை கூடுமானவரை அப்படியே இங்கு பதிவிடுகிறேன்.

 “சார் ஆன்லைன் அப்ளிக்கேஷனுக்கு எவிடன்ஸ் தர வந்திருக்காங்க“

 “என்ன“

 “ஆன் லைன் அப்ளிக்கேஷனுக்கு எவிடன்ஸ்“

 “அவர் கவனம் அந்த நபரின்பால் திரும்ப, “

 “இன்னா ஊருயா நீ, ஏன் ஆபிஸ்ல அப்ளிகேஷன் தரமாட்டியா?“

 “இல்ல சார் திருப்பூர்ல இருந்தால“

 “திருச்சங்கோடுல இருக்கவனுக்கு இங்க இன்னாத்துக்கு ஒட்டர் ஐடி,“

 “திருப்புர்ல சார்“

 “போய் எத்தன வருஷமாவுது“

 “மூனுமாசம் சார்“

 “சரி சரி அப்ளிகேஷன் வாங்கிக்கமா“

இந்த விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டால் மட்டும் அவருக்கு ஓட்டர் ஐடி போட்டுவிட என்னால் முடியுமா?

 நான் ஒரு சுயநலவாதியாய் இருக்கவேண்டும், அப்போது இந்த இறுக்கம் வராது எங்கேனும் தூரத்தேசப் பிரயாணம் மேற்கொள்ளும் என்று எண்ணுகிறேன்.

 இந்த சம்பாஷணையில் அந்த அதிகாரியின் முக பாவனைகளோடு, வார்த்தைகளையும் சேர்த்தே பார்த்தால், அந்த இஸ்லாமிய நபர் அடைந்த அவமானம் உணர்வு தாக்கலால் ஏற்பட்ட வலி என்னவென்பது புரியும்.

“ஆன்லைன்ல பண்ண ஐம்பது ரூபா மேடம் வேஸ்டாப் போச்சு எதுக்கு அரசாங்கம் இதை அறிவிக்கனும்“

 அவர் வேதனை எனக்குப் புரிந்த்து. பெரும்பாலான அரசாங்க அலுவலகங்களின் பயனாளிகள் அமர இருக்கை கிடையாது. அதிகாரிகள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் போலவும் பயனாளிகள் தீண்டத்தகாதவர்கள் போலவும் ஒரு மனநிலை எங்கிருந்து வந்துவிடுகிறது?

 இத்தனை எழுதுகிற எனக்குள்ளும் சம்பவ இடத்திலேயே எதிர்க்க துணிவில்லாத போது நானும் செத்த பிணமும் ஒன்று தான். சிரித்துக் கொண்டேஎதிர்ப்பைத் தெரிவிக்கும் வித்தையை கற்று​த்​ தரும் குருயாரேனும் இருந்தால் என்னைத்தொடர்புக்கொள்ளுங்கள்.


என் எதிர்ப்பு அங்கு எழும்புமானால் அடுத்த அடி என் ஊதியத்தில் தான் விழும் என்பது திண்ணம்.

 நட்புடன்

ஜி.ஜே.தமிழ்ச்செல்வி0 comments:

Post a Comment

Kindly post a comment.