Tuesday, November 12, 2013

மூட்டைப் பூச்சித் தெய்வங்கள் – நாம் – முழுக்குப் போட வேண்டுமடா – சித்தர் வழியில் செங்கைப் பொதுவன்

பொதுவன் 
01. கடவுள் என்பது நம்பிக்கை

கடவுள் உண்டா இல்லையா – அதைக் கண்டார் காணார் யாருளர்?
உடலும் மனமும் உள்ளவர் – அவர் – உள்ளே நடப்பவர் எவரவர்?
கடவுள் என்றால் நம்பிக்கை – செய்யும் – கடமை ஒன்றே தெம்புக் கை
அடையும் வழியை நாம் தேட – தமை – அவரே தேடி வருகின்றார்.

02. அவரே வருகின்றார்

படையல்சோறு தருகின்றோம் – அவர் – பார்க்கவில்லை நமக்களித்தார்
தடையில் தரகு தந்தாலும் – வரும் – சாவில் அவரை நினைத்தாலும்
தடையில்லாமல் வருகின்றார் – பலர் – சாற்றுகின்றார் கண்டதிலை
வடையில் ஓடும் நூல்போல – அவர் – வந்தவாறு தெரியலையே.

03. அவரே போகிறார்

ஆவின் பாலில் நெய்போல – நீர் – அலையில் தோன்றும் நுரைபோல
நாவில் ஊறும் சுவைபோல – முளை – நாற்றுக்குள்ளே விதை போல
நோவில்மட்டும் முளைக்கின்றார் – பின் – நொடியில் மறப்போம் போகின்றார்
தேவன் திருமால் சிவன்ர்ன்றால் – பிற – தெய்வப் பெயர்கள் பொய்யாமோ?

04. எத்தனை தெய்வங்கள் ?

வணக்கம் போட்டால் குலதெய்வம் – நமை – மாட்டிவிட்டால் குறுந்தெய்வம்
இணக்கம் தந்தால் பெருந்தெய்வம் – ஏச – வைத்தால் சிறு தெய்வம்
பிணக்குப் போட்டால் பேய்த்தெய்வம்  வாய் பேசாதிருந்தால் கொடுந்தெய்வம்
அணைக்கச் செய்தால் அருந்தெய்வம்நமை–ஆட்டிப்படைக்கும்தெய்வங்கள்.

05. உனக்கொன்று, எனக்கொன்று 

ஊட்டும் தெய்வம் உனக்கென்றால் – அட – உதைக்கும் தெய்வம் பிறர்க்காமோ
கூட்டும் தெய்வம் உனக்கென்றால் – உயிர் கொல்லும் தெய்வம் பிறர்க்காமோ
வேட்டை யாடி மனிதனையே – - நிதம் வேள்வி செய்தால் என்ன அது
மூட்டைப் பூச்சித் தெய்வங்கள் – நாம் – முழுக்குப் போட வேண்டுமடா

 (நாளொன்றுக்கு 5 பாடல்கள் வீதம் தொடர்ந்து வரும். மொத்தம் 120 பாடல்கள்)

குறிப்பு :- அஞ்செழுத்து “நமசிவாய”, “நாராயண” இவை ஐந்து எழுத்துக்கள். பிற கடவுள் பெயர்கள் எல்லாமே நம்மை அஞ்ச வைக்கும் எழுத்துக்கள். எனவே, “அஞ்செழுத்து” வினைத்தொகை.

கடைந்த வெண்ணெய் மோரில் கலவாத வாறுபோல்
உடைந்தமியேன் உனைக் காண்பதெக்காலம் ?  -பட்டினத்தார் மெய்ஞானப் புலம்பல்

தொடர்பிற்கு :-
செங்கைப் பொதுவன், புலவர், முனைவர், M.A.M.Ed.Ph.D.
வீடு 22, தெரு 13, தில்லை கங்கா நகர், சென்னை – 600 061 

நன்றி :-” தெய்வ அலை தெய்வீக அலை” நூல் கிடைக்குமிடம் : 044/2253 0954 . 044 /2253 3667

0 comments:

Post a Comment

Kindly post a comment.