Monday, November 11, 2013

உழைப்பில் நின்ற ஒருவர் -வல்லிக்கண்ணனைப் பற்றி பழ.அதியமான்

12.11.1920 - 09.11.2006
ரா.சு. கிருஷ்ணசாமி என்ற இயற்பெயர் கொண்ட வல்லிக்கண்ணன், தன் 86ஆம் வயதில் சென்னையில் காலமானார்.
இறப்பு, எந்த வயதில் நிகழ்ந்தாலும் தொடர்புடையவர்களுக்கு அது இழப்புதான். நேர்ப் பழக்கத்தை, நேர்க் குரலை ஒரே மூச்சில் துண்டித்துக்கொண்டு போய்விடுகிற இறப்பு... துக்கம் மனத்தின் ஆழத்திலிருந்து பொங்கி வருகிறது.
வல்லிக்கண்ணனின் லௌகீக வாழ்க்கை ஏற்றத் தாழ்வற்ற, வளமற்ற வாழ்க்கை. ஆனால் இலக்கிய வாழ்க்கை அப்படி அல்ல. 'கோயில்களை மூடுங்கள்!', 'அடியுங்கள் சாவு மணி', 'எப்படி உருப்படும்?', 'கொடு கல்தா?'... இதெல்லாம் கோபம் பொங்க, 'கோரநாதன்' என்ற புனைபெயரில் அவர் எழுதிய இளம் வயது நூல்கள். 'நையாண்டி பாரதி' என்ற புனைபெயரும் அவருக்குண்டு. 'கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா?' 'கல்யாணம் இன்பம் கொடுப்பதா? இன்பத்தைக் கெடுப்பதா?' என்ற பட்டிமன்ற பாணி நூல்களும், 'செவ்வானம்', 'விடிவெள்ளி' என்ற தலைப்பில் நூல்களும் அவர் வாழ்க்கையின் நடுப்பாகத்தில் எழுதியவை. சிறுகதை, நாவல், கவிதை எனத் தொடர்ந்தது இவ் விடைக்கால எழுத்து வாழ்க்கை.

பின்னால் இறுதிக் கால வாழ்க்கை திறனாய்வு, சிறுபத்திரிகை, புதுக் கவிதை வரலாறு என்ற நிலையை அடைந்தது. கோபம் பொங்கிய காலம் அவர் துறையூரில் கிராம ஊழியனில் பணிபுரிந்த காலம் (1948 வரை). பின்னர் சென்னைக்கு வந்து, ஹனுமானில் பணியாற்றத் தொடங்கியது முதல் சென்னைக்கும் ராஜவல்லிபுரத்துக்கும் நாடாறு மாதம் காடாறு மாதமாக வாழ்ந்த காலப் பகுதி, (1979 வரை) அவரது இடைக்காலம். அதாவது ஏறக்குறைய 60 வயதுவரை; பிறகு சென்னையிலேயே தங்கிவிட்ட சாகித்திய அகாதெமி விருதுக்குப் பின்னான இறுதிக் காலம்.
கோபம் பொங்கி எழும் எழுத்தாளனாக உருவாகத் தொடங்கி, படைப்பியக்கத்தின் வளர்ச்சியில் நிதானத்துக்கு வந்த படைப்பாளியாக வளர்ந்து இறுதிக் கட்டத்தில் ஒரு விமர்சகனாகியது வல்லிக்கண்ணனின் இலக்கியப் பரிணாமம்.

(கோபம் பொங்கி வழிந்த காலத்தில்) திராவிட இயக்கத்தவரும் (நிதானம் கைக்கு ஏறிய காலத்தில்) சினிமாக்காரர்களும் அவரைத் தம்முள் இழுத்துக்கொள்ள முயன்றதாகவும் அதிலிருந்து தான் தப்பிவிட்டதாகவும் வல்லிக் கண்ணன் நினைத்திருந்தார்.

முதல்கட்டமான 'துறையூர்' காலத்திலேயே 30 வயதிற்குள் ஏறக்குறைய 25 நூல்கள் வெளிவந்துவிட்டன. 26ஆம் வயதிலும் 28ஆம் வயதிலும் மட்டும் ஐந்து நூல்கள் (1946, 1948) வெளியாயின. இடைக்கால, சென்னை இராஜவல்லிபுரம் (60 வயதிற்குள்) வாழ்வில் மேலும் 20 நூல்கள் பதிப்பைக் கண்டிருக்கின்றன. மீதி 30 நூல்கள் அவரது இறுதி, சென்னை வாழ்வில் வந்தவை. 1991இல் மட்டும் ஏழு நூல்கள். மொத்தம் 75 நூல்களை, தன் 86 வயதுக் காலத்தில் அவர் எழுதியுள்ளார். இதில் இரண்டு நூல்கள் தன் வாழ்க்கை வரலாற்று நூல்கள். இரண்டு பாகம் அல்ல, இரண்டு நூல்கள். அவரது வாழ்க்கை வரலாற்றை மு. பரமசிவம் எழுதியதும் அ.நா. பாலகிருஷ்ணன் தொகுத்ததும் வேறு. எந்த நவீனத் தமிழ் எழுத்தாளருக்கும் இப்படி நூல்கள் வந்தனவா என்று தெரியவில்லை. ஆனாலும், வல்லிக் கண்ணனின் கனவுத் திட்டத்தில் இன்னும் எழுத வேண்டிய இரண்டு நாவல்கள் பாக்கி இருந்ததாகத் தெரிகிறது.

பி.எஸ். செட்டியாரின் சினிமா உலகம் (கோவை), சக்திதாசன் பொறுப்பில் வந்த நவசக்தி (சென்னை), அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் நடத்திய கிராம ஊழியன் (துறையூர்), பிறகு ஹனுமான் (சென்னை) ஆகிய சிறுபத்திரிகைகளிலும் அவர் பொறுப்பேற்று இயங்கியிருக்கிறார். தினமணியில் (11.11.2006) வந்த இரங்கல் குறிப்பில் காந்தியில் பணியாற்றியதாக வந்த தகவல் தவறு. காந்தி (1933) வந்தபோது வல்லிக்கண்ணனின் வயது 13.
தனது இளமைக் கால வாழ்க்கையில் இலக்கிய நடவடிக்கை எல்லாவற்றிலும் பங்கு பெற்றவராகவே வல்லிக் கண்ணன் இருந்திருக்கக்கூடும். 

 பாரதி பாடல் பொதுவுடமைக்காகப் போராடிய 'பாரதி விடுதலைக் கழக'த்தில் (1948) வ.ரா. முதலியவர்களோடு இணைந்து போராடியிருக்கிறார். 60 ஆண்டுக் காலம் (40கள் முதல்) சிறுபத்திரிகைகளுடனும் சிறுபத்திரிகை எழுத்தாளர்களுடனும் தொடர்பில் இருந்தார். சிறு பத்திரிகைகளின் வரலாற்றை அவற்றின் உள் விவகாரங்களோடு அறிந்தவர் அவர். வாசகர்கள், வளரும் எழுத்தாளர்கள் ஆகியோருக்குத் தொடர்ந்து கடிதம் எழுதும் வழக்கத்தைக் கைக்கொண்டவர். கடும் உழைப்பைச் செலுத்தக்கூடியவர். தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர். 

இலக்கியச் சர்ச்சைகளில் மௌனம் காப்பவர். அதிர்ந்து பேசாதவர். புதுமைப்பித்தனின் மேதமையை உணர்ந்து, அவருக்கு 'ஏகலைவ'னாகத் தன் நூல் ஒன்றை (குஞ்சாலாடு, 1946) அர்ப்பணித்தவர். "அப்படியானால் கட்டை விரலைக் கேட்க வேண்டியதுதான்" என்று புதுமைப்பித்தன் இதைக் கிண்டலாக எதிர்கொண்டிருக்கிறார். புதுமைப்பித்தன் விரும்பவில்லை என்றபோதும் வல்லிக்கண்ணன் அதிரவில்லை.

எண்ணிக்கையில் 75 நூல்களை எழுதியிருந்தாலும் 'பாரதிதாசனின் உவமை நயம்' (1946), 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' (1977), 'சரஸ்வதி காலம்' (1986), 'பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை' (1981) ஆகியவை வல்லிக்கண்ணனின் வலிமை மிக்க அடையாளங்கள்.
சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், கட்டுரை என்று தமிழ் இலக்கியத்தின் எல்லா வகைமைகளிலும் முயன்று பார்த்திருக்கிறார். ந. பிச்சமூர்த்தியை அடியொற்றி 1940களிலேயே புதுக் கவிதை எழுதினார். கட்டுரை அவர் கைக்கு வந்து நின்றது.

ஆசிரியராகச் சில சிறுபத்திரிகைகளில் இருந்து பார்த்திருக்கிறார். சூட்டிகை அவரை ஏமாற்றியிருக்கக்கூடும். திருமணம் என்ற பந்தத்தை ஏற்காததன் மூலம் குடும்பம் என்னும் கவலை தரும் பிரச்சினையிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைத்தார். ஆனால் தனக்கு முன் இறந்த அண்ணனின் பெரிய குடும்பத்தைத் தன் கடைசிக் காலத்தில் அவர் காப்பாற்ற வேண்டிவந்தது.

பேசுவதுபோலவே எழுத வேண்டும் என்று பாரதியார் வலியுறுத்திக்கொண்டே இருந்தார். அதை வல்லிக் கண்ணன் நேர் எதிர்த் திசையில் செயல்படுத்தினார். வல்லிக்கண்ணன் எழுதுவதுபோலவே பேசுவார். இலக்கிய நடை, வாக்கிய முடிப்பு, ஒருமை, பன்மை மயக்கமற்ற எழுத்து முறையே அவரது பேச்சு முறை. உணர்ச்சியை மறந்தும் கலந்துவிடாத வைராக்கியம் வல்லிக்கண்ணனுக்கு உண்டு. சமூகத்தில் ஏற்றத் தாழ்வைக் கண்டிக்கும் நாம், பேச்சில் மட்டும் அதை ஏன் எதிர்பார்க்க வேண்டும்?

ஒல்லிக்கண்ணன் என்று எழுத்தாள நண்பர்கள் தம் தனிப் பேச்சில் குறிப்பிடும்படி, தோல் மூடிய, எலும்புகள் தெரியும் ஒல்லியான தேகம் அவருடையது. ஆனால், இலக்கியச் சில்லான் என்று கரிசல் பூமணி வர்ணிக்கும் படியான சுறுசுறுப்பான உசுப்பிராணி அவர். ஒற்றைச் சுற்று வேட்டி, அரைக் கைச் சட்டை, சராசரி உயரம், எளிமையும் அடக்கமுமான தோற்றம். ஊடகங்கள் உருவாக்கிக் காப்பாற்றும் எழுத்தாளன், அதுவும் ஏழைத் தமிழ் எழுத்தாளன் பிம்பத்திற்குப் பொருந்தும் உருவம் வல்லிக்கண்ணனுக்கு. கொண்டாடுவது மேலாக இருந்து கீழ் இருப்பவரைப் போஷிப்பது போன்ற மனோபாவம் கொண்ட சில மனிதர்களுக்கும் புரவலர்களுக்கும் அவரைப் பிற்காலத்தில் பிடித்துப் போனதற்கு இதுகூடக் காரணமாக இருக்கலாம். 

சில ஆய்வு நூல்களில் 'சரஸ்வதி காலம்', 'புதுக்கவிதை...' நூல் மேற்கோள்கள் சில என் கண்ணில்பட்டிருக்கின்றன. அதை விலக்கிவிட்டுப் பார்த்தால் தியாகம், அர்ப்பணிப்பு போன்ற சிலாகிப்புகளாகவே அவரைப் பற்றிய பேச்சுகள் கடந்த இருபது ஆண்டுகளாக என் காதில் விழுந்திருக்கின்றன. அவரது படைப்புகள் பற்றிய பேச்சுகளாக அவை இல்லை. அவரைப் பாராட்டியவர்களின் பட்டியலில் பெரும் இடத்தை அடைத்துக்கொள்பவர்கள், அவருடைய எழுத்தின் ஒரு வரியைக்கூடப் படிக்காதவர்களாகவே இருப்பார்கள்.

தீவிர இலக்கியத்துக்கு அர்ப்பணித்துக்கொண்ட சரஸ்வதி, தீபம் போன்ற இதழ்களின் வரலாற்றை எழுதிய ஒருவர், எழுத்துவின் ஆளுமைகளைக் கொண்டாடும் ஒருவர், 'ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்' என்று வா.மு. சேதுராமன் போன்ற, இவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட, ஆளுமைகளையும் கொண்டாடுவது எப்படிச் சாத்தியமாகிறது என்று கேட்கப் போவதில்லை. 

இத்தகைய 'சமரச சன்மார்க்க' வாழ்வைத் தமிழ்நாட்டில் அல்லாமல் வேறு எங்கு போய் நிகழ்த்துவது? தூய இலக்கியவாதிகளும் இடதுசாரி இயக்கத்தவரும் ஒருசேரக் கொண்டாடும் ஒருவராக வல்லிக்கண்ணனால் இருக்க முடிந்தது. இது தமிழ்ச் சமூகத்தில் வியப்பானதல்ல.

நடப்பு நூற்றாண்டின் நடுத்தர வர்க்க நவீனத் தமிழ் வாழ்க்கையை ஒரு பிரமச்சாரி எழுத்தாளராக வாழ்ந்து அதை இலக்கியத்தில் பதிவுசெய்தவராக வல்லிக்கண்ணனைக் கருதலாம். வாழ்க்கையை 'நீர் வழிப்படூஉம் புணை' போல அதன் ஓட்டத்தில் வாழ்ந்தவர் என்று சொல்ல முடியாது. ஏதோ பிடிவாதம் ஒன்று அவரை ஆட்கொண்டு வழிநடத்தியிருக்கிறது. சினிமா மறுப்பு, திராவிட இயக்க எதிர்நிலை, பெண் வெறுப்பு, பெருங்கூட்ட ஒவ்வாமை என்று பல எதிர்மறைகள் அவரது ஆளுமைக்குள் இயங்கியதாகத் தோன்றுகிறது. 

இந்த நூற்றாண்டுத் தமிழ் மனிதர், சமூக மனிதர், அதுவும் எழுத்தாளர், பெரியார் எழுத்துகளைத் தான் படித்ததில்லை என்று சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது? அவரது திசைகளைத் திருப்பியிருக்கக் கூடிய பல சந்தர்ப்பங்களைக் கொள்கை, பயம், லௌகீக சிரமம் போன்ற காரணங்களுக்காகத் திரஸ்கரித்திருக்கிறார். அதில் ஒன்று வயிற்றுக்குச் சோறு தரும் அரசுப் பணி. இப்படித்தான் அவர் வாழ்ந்தார். வகைவகையான வாழ்மாதிரிகளுள் இது ஒரு மாதிரி. இன்னொரு மாதிரி.

வரகவிகள், 'வர நூலாசிரியர்'கள் மறுக்காமல் முன்னுரை தரும் ஒரு முன்னுரைத் திலகத்தை இழந்துவிட்டார்கள். இலக்கியக் கூட்டங்கள் தமக்குத் தலைமை வகிக்கும் ஒருவரை இழந்துவிட்டன. தியாகம், அர்ப்பணிப்பு என்று பேசுபவர்கள், பொருத்தமான வாழும் உதாரணம் ஒன்றை இழந்துவிட்டார்கள். நவீனத் தமிழ் உலகம் உழைப்பில் நின்ற ஒருவரை இழந்துவிட்டது.
 http://www.kalachuvadu.com/issue-84/anjali02.asp
Google Ads.....

Google

  

0 comments:

Post a Comment

Kindly post a comment.