Wednesday, November 13, 2013

சத்தீஸ்கர் முதல்கட்டத் தேர்தல்: வன்முறையை மீறி 70% வாக்குப்பதிவு


     சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு திங்கள்கிழமை  நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலின்போது  தந்தேவாடாவில் உள்ள ஒரு சாவடியில் வாக்களிக்க ன் வரிசையில் காத்திருக்கும் மக்கள்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் நக்சலைட்டுகளின் வன்முறையை மீறி 70 சதவீத வாக்குகள் பதிவாகின.

மொத்தம் 90 உறுப்பினர் பலம் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறுகிறது.  நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள பஸ்தர் மற்றும் ராஜ்நந்த்கான் பகுதிகளில் அடங்கும் 18 தொகுதிகளில் திங்கள்கிழமை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலைப் புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்ததையும் பொருட்படுத்தாமல், பல்வேறு இடங்களிலும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

பலத்த பாதுகாப்புக்கு இடையில் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடியும் தருவாயில் பி.டி.ஐ. செய்தியாளரிடம் பேசிய மாநில இணைத் தேர்தல் அதிகாரி டி.டி.சிங், ""இதுவரை, 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன'' என்று தெரிவித்தார்.

பஸ்தர் பகுதியில் உள்ள 12 தொகுதிகளில் மாலை 3 மணிக்கும், ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் மாலை 5 மணிக்கும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

சிஆர்பிஎஃப் வீரர் பலி: தந்தேவாடா மாவட்டத்தில் உள்ள கதேகல்யாண் பகுதியில் வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் ஒரு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது நக்சலைட்டுகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் பி.ஜோசப் என்ற வீரர் கொல்லப்பட்டார்.

தொடர் வன்முறை: காங்கேர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். தெற்கு சத்தீஸ்கரில் உள்ள தந்தேவாடா மற்றும் பீஜப்பூர் மாவட்டங்களில் சில வாக்குச்சாவடிகளுக்கு அருகில் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையில் மோதல் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துர்காபூர் பகுதியில் வாக்குச்சாவடிக்கு சென்று கொண்டிருந்த தேர்தல் அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திய நக்சலைட்டுகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை பறித்துச் சென்றனர்.

வெடிகுண்டுகள் பறிமுதல்: பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள முர்கினார் பகுதியில் ஒரு குழாய் வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது. தந்தேவாடா மாவட்டத்தில் உள்ள மங்னார் பகுதியில் 2 வெடிகுண்டுகளும், குவாகொண்டா பகுதியில் 8 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. நாராயண்பூர் மாவட்டத்தின் ஓர்ச்சா பகுதியில் டிபன் பாக்ஸ் குண்டுகளை போலீஸார் கண்டறிந்து செயலிழக்கச் செய்தனர்.

143 பேர் போட்டி: மாநிலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் 143 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் முதல்வர் ரமண் சிங் மற்றும் அவரது அமைச்சர்கள் 3 பேர் ஆகியோரும் அடங்குவர். இரண்டாம் கட்டத் தேர்தல், 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 8ஆம் தேதி நடைபெறுகிறது.   - தினமணி-12-11-2013                                                                                



0 comments:

Post a Comment

Kindly post a comment.