Thursday, October 3, 2013

திருக்காம்புலியூரில் திருநங்கைகளுக்குப் பசுமைவீடுகளைச் சொந்தமாகிய சுஜாதா !



திருநங்கைகளை தெய்வத்தின் குழந்தைகள் என்பார்கள். ஆனால், அவர்களை இன்னும் இந்தச் சமூகம் வேடிக்கையாகவும் விநோதப் பொருளாகவும்தான் பார்க்கிறது. அத்தனையும் தாண்டி அவர்களிலும் சிலர் சாதிக்கிறார்கள். அதில் ஒருவர் தான் சுஜாதா! 

கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. படித்தது பள்ளிப் படிப்புத்தான். 13 வயதில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்களால் மாரியப்பன் சுஜாதாவாக மாறினார். 15 வயதில் மும்பைக்கு ரயிலேறினார். அங்கே அறுவைச் சிகிச்சை மூலம் தனது பாலினத்தை மாற்றிக் கொண்டவர். ஐந்து வருடங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். இப்போது இவரைச் சுற்றி ஒரு கூட்டமே இருக்கிறது. 

''என்னுடைய நடை உடை பாவனைகளை பாத்துட்டு வீட்டுல கடும் எதிர்ப்பு கிளம்பிருச்சு. என்னைய மனசு மாத்துறதுக்காக தலைக்கு மொட்டை போட்டு வீட்டுக்குள்ள வைச்சிருந்தாங்க. எங்க ஊரு மாரியம்மனுக்கு வைகாசி மாசம் திருவிழா வரும். அப்ப மும்பையில இருந்தெல்லாம் அரவாணிகள் வருவாங்க. அவங்கள பழக்கம் பிடிச்சு மும்பைக்கு கிளம்பிட்டேன். 

மும்பையில ஜாலியான வாழ்க்கை. இங்க வந்தப்புறம்தான் ஏகப்பட்ட சிக்கல்கள். குடியிருக்க வீடு கூட கொடுக்க மறுத்தாங்க. என்னை ஒரு மனித பிறப்பாவே மதிக்கல இந்த சமூகம். மணல் குவாரி வேலை, சமையல் வேலை, நூறு நாள் வேலைன்னு என்ன வேலை கிடைக்குதோ அதுக்கெல்லாம் போனேன். என்னதான் உசுருக்கு உசுரா இருந்தாலும் எங்களைப் போன்றவர்களை யாரும் வீட்டில் வைச்சுக்க மாட்டாங்க.

 இந்த சமுதாயமும் ஏற்றுக் கொள்வதில்லை. வாடகைக்கு வீடு குடுக்கமாட்டாங்க. அதனால், பஸ் ஸ்டாண்டுகள்லயும் ரயில்வே ஸ்டேஷன்கள்லயுமே நாங்க காலம்தள்ள வேண்டியிருக்கு. இதனாலேயே எங்கள்ல பலபேரு தப்பான வழிகளுக்கும் தள்ளப்படுறாங்க. அதனால, என்ன கஷ்டப்பட்டாவது நமக்குன்னு சொந்தமா ஒரு வீட்டை கட்டிடணும்னு நெனச்சிட்டு இருந்தேன்’’ அரவாணிகளின் கஷ்டத்தை வலி தோய்ந்த வார்த்தைகளால் விவரித்த சுஜாதா, தொடர்ந்து பேசினார். 

''நாலு வருஷத்துக்கு முந்தி தமிழ்நாடு அரசாங்கம், திருநங்கைகள் நல வாரியம்னு ஒண்ணு உருவாக்குனாங்க. அதுல நானும் மெம்பரானேன். 

நலவாரியத்துல இருக்கிறவங் களுக்கு இலவச வீட்டுமனைகள் குடுக்கப் போறதா அறிவிச்சதுமே குஷியாகிட்டேன். நமக்கு மட்டும் வீடு கட்டணும்னு நினைச்சோம், நம்ம சமுதாயத்துல பல பேருக்கு வீடுகட்ட இடம் கிடைக்கப் போகுதேன்னு ஒரு சந்தோஷம். ஆர்வத்தோட களத்துல இறங்கி, கரூர் பகுதியில இருந்த திருநங்கைகளை தேடித் தேடிக் கண்டுபிடிச்சு, வாரியத்துல மெம்பராக்குனேன். 

சில பேரு தங்களை திருநங்கைனு சொல்லிக்கவே தயங்குனாங்க. வந்தவங்கள மட்டும் 23 பேரைச் சேர்த்து சங்கத்தை உருவாக்குனோம். நானே தலைவியாக இருக்கணும்கிறது மத்தவங்களோட விருப்பம். தட்டமுடியாம அந்தப் பொறுப்பை ஏத்துக்கிட்டேன். இலவச வீட்டு மனையை வாங்குறதுக்காக ஒரு வருஷமா கலெக்டராபீஸுக்கு நடந்துருக்கேன்
திருக்காம் புலியூர்ல எங்களுக்கும் நரிக்குறவர்களுக்கும் சேர்த்து இடம் ஒதுக்குனாங்க. அரவாணிகள் பக்கத்துல இருந்தா நாங்க செய்யுற மாந்திரீக பூஜைகள் பலிக்காதுன்னு சொல்லி நரிக்குறவர்கள் பிரச்சினை பண்ணுனாங்க.
கடைசியில, மணவாசியில ஆளுக்கு ரெண்டே கால் சென்டுன்னு 28 பேருக்கு மனை குடுத்தாங்க. இங்கேயும் பிரச்னைதான். கலெக்டர் உமாமகேஷ்வரி எங்களுக்காக பேசி பிரச்னையை தீர்த்து வச்சாங்க. 

சொந்த செலவுல அந்த இடத்துல குடிசைகள போட்டுக்கிட்டோம். காத்துக்கும் மழைக்கும் இந்த குடிசைகள் தாங்காது போலிருக்கு. 'எங்களுக்கு நிரந்தரமா ஒரு வீடு கட்டிக் குடுக்க ஏற்பாடு பண்ணுங்க’ன்னு எங்க தொகுதி எம்.எல்.ஏ. காமராஜ் கிட்ட கோரிக்கை வைச்சோம். அவரோட முயற்சியில, பசுமை வீடுகள் திட்டத்துல எங்கள்ல 20 பேருக்கு வீடு கட்டிக் குடுத்துட்டாங்க. 

வீடு, மனைன்னு நாங்க சாதிச்சத பாத்துட்டு, அன்னைக்கி விலகி ஓடுனவங்க எல்லாம் இப்ப, 'எங்களையும் சங்கத்துல சேத்துக்குங்க' ன்னு வர்றாங்க. அவங்களுக்கும் வீட்டு மனை வாங்கிக் குடுத்து வீடுகட்டிக் குடுக்குறதோட பாலியல் தொழிலில் ஈடுபடுற திருநங்கைகளை நல்வழிப்படுத்துறதுதான் என்னோட அடுத்த வேலை’’ அழுத்தம் திருத்தமாக சொன்னார் சுஜாதா

தி இந்து, 03-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.