Wednesday, October 9, 2013

பவானிசாகர் அருகே பழங்கால நாணயங்கள் பறிமுதல்


சத்தியமங்கலம் அருகே மண் கலயத்தில் கிடைத்த பழங்கால நாணயங்களை வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் தயிர்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (35). இவரது
தோட்டத்தில் தடுப்புச் சுவர் கட்டுவதற்காக ஞாயிற்றுக்கிழமை இயந்திரம் மூலமாக குழிதோண்டும் பணி நடைபெற்றது. அங்கு, மண்ணிலிருந்து கல்லைப் பிரித்தெடுக்கும் பணியில் அதே ஊரைச் சேர்ந்த 6 பெண்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, உடைந்த நிலையில் சிறு மண் கலயத்தில் பொன்னிற நாணயங்கள் இருந்ததைப் பார்த்த 6 பேரும் அதை ரகசியமாகப் பங்கிட்டு எடுத்துச் சென்றுள்ளனர். இதனிடையே, நாணயங்களைப் பங்கிடுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இது குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தெரியவந்தது.

இதையடுத்து பரமேஸ்வரியிடம் இருந்து 75 நாணயங்கள், பாப்பாத்தியிடம் 14, பொன்மணியிடம் 43, பண்ணாரியிடம் 18, சித்ராவிடம் 65, பொன்னம்மாளிடம் 17 என மொத்தமாக 262 தங்க நாணயங்கள் வருவாய்த்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட நாணயங்களில் நாமம் மற்றும் பல்வேறு உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால் நாயக்கர் காலத்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவை தங்கம் அல்லது செம்பு போன்ற உலோகமா என்பதும் ஆய்வுக்குப் பின்னர் தெரியவரும் என சத்தி வட்டாட்சியர் முத்துராமலிங்கம் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் காசுகள் கோபி துணை ஆட்சியர் சந்திரசேகர் சக்மூரியிடம் ஒப்படைக்கப்பட்டன.                                                                                

தினமணி-09-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.