Wednesday, October 9, 2013

பிரிட்டன், பெல்ஜியம் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு


நோபல்


பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் (84), பெல்ஜியத்தைச் சேர்ந்த ஃபிராங்காய் எங்க்லர்ட் (80) ஆகியோர் இயற்பியல் துறையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிரபஞ்சம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாமல் 16 துகள்கள் உள்ளன. கண்ணுக்குத் தெரியாமல் 17-வதாக மேலும் ஒரு துகள் இருந்தாக வேண்டும் என்று 1964-ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற உள்ள இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் கூறினார். இதனால்தான் "ஹிக்ஸ் போஸான்' அல்லது "கடவுள் துகள்' என்று இது அழைக்கப்படுகிறது.

இந்தத் துகள் இன்றி மனிதர்கள் உள்பட எவரும் வாழ முடியாது. மேலும் இந்தத் துகளுடன் தொடர்பு இருப்பதால்தான், அனைத்துப் பொருள்களுக்கும் எடை கிடைக்கிறது.

கண்ணுக்குத் தெரியாத இந்தத் துகளுக்கான இயற்பியல் கோட்பாட்டை பீட்டர் ஹிக்ஸ், ஃபிராங்காய் எங்க்லர்ட் ஆகியோர் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதற்காக நோபல் பரிசு கிடைத்துள்ளது.

இவர்கள் உருவாக்கிய இந்தக் கோட்பாடு ஸ்விட்சர்லாந்தில் உள்ள "சிஇஆர்என்' பரிசோதனைக்கூடத்தில் கடந்த ஆண்டு நிரூபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான வரும் டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும்.



பீட்டர் ஹிக்ஸ் (84)

பிரிட்டன் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை கௌரவப் பேராசிரியராக ஹிக்ஸ் உள்ளார். இயற்பியல் துறையில் சிறந்த ஆராய்ச்சிக்கான "வோல்ஃப்' பரிசு உள்பட பல விருதுகளை ஏற்கெனவே இவர் பெற்றுள்ளார்.

ஃபிராங்காய் எங்க்லர்ட் (80)

பெல்ஜியத்தில் உள்ள "லைப்ரி டி பிரக்ஸல்ஸ்' பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை கௌரவப் பேராசிரியராக எங்க்லர்ட் உள்ளார். இயற்பியல் துறையில் சிறந்த ஆராய்ச்சிக்கான ஃபிராங்கி பரிசு, "வோல்ஃப்' பரிசு உள்பட பல விருதுகளை ஏற்கெனவே இவர் பெற்றுள்ளார்.                                                     

தினமணி-09-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.