Tuesday, October 8, 2013

"வீட்டுவேலைத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்வது அவசியம்"



பச்சைமால்

தமிழகத் தொழிலாளர் நல அமைச்சர்

வீட்டுவேலை தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்வது அவசியம் என்று தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பச்சைமால் கூறினார்.
தேசிய வீட்டு வேலை தொழிலாளர்கள் மாநாடு சென்னை பரங்கிமலையில்(அக்.7)திங்கள்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால் பேசியது:

வீட்டுவேலைத்தொழிலாளர் நல வாரியத்தில் இதுவரை 1 லட்சத்து 49 ஆயிரத்து 163 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்து உள்ளனர்.

இந்த வாரியத்தில் 59 ஆயிரத்து 443 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 48 லட்சத்து 98 ஆயிரத்து 270 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகளவில் வீட்டுவேலை தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் அரசால் வழங்கப்படும் அனைத்து பயன்களையும் எளிதில் பெற முடியும்.

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் தேசிய குழந்தை தொழிலாளர் சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 86,834 குழந்தைகள் மீட்கப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அமைப்பு சாரா குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் 640 குழந்தைகள் தங்கும் வசதியுடன் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்றார்.

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் சி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். 

வீட்டு வேலை தொழிலாளர் அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் பிஸ் ஏசியன் வரவேற்றார்.

தேசிய வீட்டு வேலை தொழிலாளர் அமைப்பின் நிறுவனர் ஜான்டேவாஸ், மாநில ஆலோசகர் பி.கிளாரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.                         

தினமணி, 08-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.