Tuesday, October 8, 2013

நோபல் பரிசு ரூ.7.75 கோடி மூவருக்குப் பகிர்ந்தளிப்பு !



நோபல்

இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ அறிவியல் விஞ்ஞானிகள் ஜேம்ஸ் இ. ராத்மேன், ரேண்டி டபிள்யு. ஷேக்மேன், ஜெர்மனைச் சேர்ந்த மருத்துவ அறிவியல் விஞ்ஞானி தாமஸ் சி. சூடாஃப் ஆகிய மூவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. இந்த மூவரும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.  நோபல் பரிசுத் தொகையான ரூ.7.75 கோடியை (சுமார் 1.25 மில்லியன் அமெரிக்க டாலர்) மூவரும் சரிசமமாக பகிர்ந்து கொள்வார்கள் என நடுவர் குழு அறிவித்துள்ளது.

சர்க்கரை நோய், நரம்பியல், நோய்த் தடுப்பு: உடலின் செல்களுக்கு இடையே நடைபெறும் மூலக்கூறு பரிமாற்றத் தன்மையை நுணுக்கமாக ஆராய்ச்சி செய்து நோய்த் தடுப்புக்கு உரிய மருத்துவ வழிமுறையை இந்த நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். உதாரணமாக ரத்த சர்க்கரை அளவு-ஆற்றலைத் தீர்மானிக்கும் இன்சுலின் ஹார்மோன் கணைய செல்களில் உற்பத்தியானவுடன், அது ரத்தத்தில் சென்று கலக்க "நியூரோ-
டிரான்ஸ்மிட்டர்ஸ்' என்ற வேதிவினை பரிமாற்ற நிகழ்வு உடலுக்குள் ஒரு நரம்பு செல்லிலிருந்து மற்றொரு நரம்பு செல்லுக்கு தன்னிச்சையாக நடைபெறுகிறது. இத்தகைய பரிமாற்றத்தின் ஒழுங்குத் தன்மையை இந்த நிபுணர்கள் வெற்றிகரமாக ஆராய்ச்சி செய்து மருத்துவ முடிவுகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

 சர்க்கரை நோய், நரம்பியல் தொடர்பான உடல் நலப் பிரச்னைகள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஆகியவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த நிபுணர்களின் செல் ஆராய்ச்சி இருந்ததால் நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நோபல் பரிசு 1901-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல் சுவீடனைச் சேர்ந்தவர். 1833-ம் ஆண்டில் பிறந்தார். வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் திறமை பெற்றவராகத் திகழ்ந்தார்.

டைனமைட் வெடிப்பொருளை கண்டுபிடித்தவர். பெரிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தினார். தனது கடைசி உயில் மூலம் தனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார்.
அவரது நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வைத்தும் மற்ற பிரிவுகளுக்கான பரிசுகள் ஸ்வீடனிலும் வழங்கப்படுகின்றன.
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்படும் பரிசுத் தொகை தலா ரூ. 7 கோடியே 75 லட்சமாகும்.


ஜேம்ஸ் இ. ராத்மேன் (62)

மருத்துவ நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இவர், அமெரிக்க ஏல் பல்கலைக்கழக செல் உயிரியில் துறையின் தலைவராக உள்ளார். உடலியங்கியல் (ஃபிஸியாலஜி) மற்றும் மருத்துவத்தில் செல் பரிமாற்ற ஆராய்ச்சிக்காக இந்த ஆண்டு நோபல் பரிசுக்கு ராத்மேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே மருத்துவ ஆராய்ச்சிக்காக சர்வதேச விருது உள்பட பல்வேறு பரிசுகளை இவர் பெற்றுள்ளார்.



ரேண்டி டபிள்யு. ஷேக்மேன் (64)

மருத்துவ நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இவர், கலிஃபோர்னியா பல்கலைக்கழக செல் உயிரியல் துறை பேராசிரியர் ஆவார். 1992-ஆம் ஆண்டு தேசிய அறிவியல் அகாதெமியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.  செல் பரிமாற்ற ஆராய்ச்சிக்காக இவருக்கும் நோபல் பரிசு கிடைத்துள்ளது. மருத்துவ ஆராய்ச்சிக்காக 2002-ஆம் ஆண்டு முதல் பல விருதுகளை இவர் ஏற்கெனவே பெற்றுள்ளார்.


தாமஸ் சி. சூடாஃப் (57)


மருத்துவ நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இவரது சொந்த நாடு ஜெர்மனி. எனினும் அமெரிக்க ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உயிரி-வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் செல் பரிமாற்ற ஆராய்ச்சிக்காக இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

நோபல் பரிசிலும் "பொருளாதார சரிவு'

ஸ்டாக்ஹோம், அக்.7: உலக பொருளாதார சரிவு நோபல் பரிசுத் தொகையிலும் எதிரொலித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த மருத்துவ அறிவியல் அறிஞர்கள் ஷின்யா யமானகா, பிரிட்டனைச் சேர்ந்த ஜான் குர்டான் ஆகியோருக்கு செல் தொடர்பான ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது; அவர்களுக்கு ரூ.9.3 கோடி சமமாகப் பிரித்து வழங்கப்பட்டது.

ஆனால், உலக பொருளாதாரச் சரிவு காரணமாக இந்த ஆண்டு நோபல் பரிசுத் தொகை ரூ.7.75 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது 

தினமணி, 08-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.