Wednesday, October 2, 2013

கேரள -தமிழக மாநிலங்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் நவராத்திரி விழா !




நாகர்கோவில் முல்லை பெரியாறு அணை, நெய்யாறு அணை என கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக இருக்கிறது நவராத்திரி விழா. 

குமரி மாவட்டம் தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தபோது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக பத்மநாபபுரம் இருந்தது. பத்மநாபபுரம் அரண்மனையில், ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். காலப்போக்கில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரம் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. 

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவுக்கு, கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி சிலை, சுசீந்திரத்தில் உள்ள முன்னுதித்த நங்கையம்மன் சிலை, வேலிமலை குமாரசுவாமி கோவில் முருகன் சிலை ஆகியவற்றை எடுத்துச் செல்வது வழக்கம். குமரி மாவட்டம், தமிழகத்தோடு இணைந்த பிறகும் இந்த வழக்கம் தொடர்கிறது. 

இதற்காக, புதன்கிழமை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுகின்றன. பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள உப்பரிகை மாளிகையில், திருவிதாங்கூர் மன்னர் பயன்படுத்திய உடைவாள் இருக்கிறது. நவராத்திரி விழாவின்போது இந்த உடைவாள் கைமாறும் நிகழ்ச்சியும் நடைபெறும். 

கேரள அரசின் பிரதிநிதிகள், பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்து, தமிழக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் உடைவாள் எடுத்துக் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு புதன்கிழமை நடைபெறும் உடைவாள் எடுத்துக் கொடுக்கும் நிகழ்ச்சியில், கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கேரள கலாசாரத் துறை அமைச்சர் கே.சி.ஜோசப் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இதையொட்டி, முன்னுதித்த நங்கையம்மன் விக்கிரகம் புறப்பாடு, சுசீந்திரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அம்மனுக்கு காலை முதலே பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பல்லக்கு வாகனத்தில் முன்னுதித்த நங்கையம்மன் எழுந்தருளினார். 

 அப்போது தமிழக மற்றும் கேரள போலீஸார் துப்பாக்கி ஏந்தி, சல்யூட் அடித்து, அம்மனுக்கு அணிவகுப்பு மரியாதை செய்தனர். இரு மாநில போலீஸாரின் இசைக்குழுவினரின் பாண்ட் வாத்தியம் இசைக்க, முன்னுதித்த நங்கை அம்மன் சுசீந்திரம் ரதவீதிகளில் ஊர்வலமாக வந்து, பின்னர் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை மாலை பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவிலை, அம்மன் வந்தடைந்தார்.

புதன்கிழமை காலை 7 மணிக்கு உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு முன்னுதித்த நங்கை அம்மன் மற்றும் முருகன் ஸ்வாமி சிலைகள், பல்லக்கிலும், சரஸ்வதி அம்மன் சிலை யானை மீதும், திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுகிறது. வரும் 4-ம் தேதி திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை சென்றடைகிறது.

சுசீந்திரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

திருவனந்தபுரம் நவராத்தி விழாவுக்கு போலீஸ் மரியாதையுடன் புறப்பட்ட அம்மன். 

இதுதான் பயண விவரம்!

பத்மநாபபுரத்தில் இருந்து புதன்கிழமை கிளம்பும் விக்கிரகங்கள் இரவு குழித்துறையிலும், 3-ம் தேதி இரவு நெய்யாற்றங்கரையிலும் தங்கி, 4-ம் தேதி மாலை திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை சென்றடையும். பத்து நாள் நவராத்திரி விழாக்காலத்தின்போது, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் - திருவனந்தபுரம் செந்திட்டை அம்மன் கோவிலிலும், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் - பூஜைபுரை கோவிலிலும், வேலி மலை முருகனுக்கு - ஆரிய சாலை சிவன் கோவிலிலும் வைத்து பூஜைகள் நடக்கும். வரும் 18-ம் தேதி குமரி மாவட்டத்துக்கு ஸ்வாமி சிலைகள் வந்தடையும்.                                                      

தி இந்து, 02-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.