Wednesday, October 2, 2013

நிலை குலைந்தது அமெரிக்க அரசு ; 8 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை இழப்பு !




அமெரிக்காவில் அரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூட வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒபாமா கேர் என்று பிரபலமாக அழைக்கப்பட்ட ஒபாமாவின் சுகாதார நலத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவிற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குடியரசுக்கட்சியினர் அதிகமுள்ள பிரதிநிதிகள் சபையில் ஒபாமாவின் இத்திட்டத்திற்கான நிதியை நிறுத்திவைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதா நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவும் முடிந்தது. 

இதனையடுத்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, அரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூடுமாறு அறிவித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பணியிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 1995-96 க்கு பிறகு முதன் முறையாக அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ம் தேதி அமெரிக்க நிதியாண்டின் தொடக்கமாகும். இதற்கு முன் எவ்வளவு பொதுக் கடனை வாங்கலாம் எனத் தீர்மானித்து அதற்கான சட்டத்தை நிறைவேற்றி அதிபருக்கு அனுப்ப வேண்டும். 

அடுத்த நிதி ஆண்டுக்கு 17.8 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் = 1 லட்சம் கோடி) டாலர் அளவுக்கு பொதுக்கடன் தொகை உயர்த்தப்பட்டால் மட்டுமே அடுத்த ஆண்டு பட்ஜெட்டை உருவாக்க முடியும். ஆனால், கடன் வாங்கும் அளவை உயர்த்த எதிர்க்கட்சி அனுமதிக்காததால் இழுபறி நிலை நீடிக்கிறது.

உள்நாட்டுப் பாதுகாப்பு உள்ளிட்ட எந்த அவசரகாலப் பணிகளும் பாதிக்கப்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ சேவை, மருத்துவம் உள்ளிட்ட முக்கிய சேவைகள் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது. 8 லட்சம் ஊழியர்களுக்கும் சம்பளம் கிடையாது. 

நிதிச் சிக்கல் தீரும்வரை அவர்கள் பணிக்கும் திரும்ப முடியாது. அனைத்து நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களும் வழக்கம்போலச் செயல்பட்டன.

ஆப்கானிஸ்தான் உள்பட வெளிநாடுகளில் பணிபுரியும் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ஊதியமோ, படிகளோ தடையில்லாமல் வழங்கப்படும். 

அதேவேளையில் வெளிநாட்டவர் அமெரிக்கா வருவதற்கான விசா பெறுவதில் தடங்கல்கள் ஏற்படும்.

ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்களிடையே விரைவில் பேச்சு நடந்து சமரசத் தீர்வு ஏற்படும். ஒருவார காலத்துக்குள் தேக்க நிலை நீங்கிவிடும் என்று அமெரிக்க அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.                                                             

தி இந்து, 02-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.