பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்டு உயிர் பிழைத்த மலாலாவின் (16) சுயசரிதை, புத்தகமாக வெளிவரவிருக்கிறது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவிருக்கும் இந்தப் புத்தகத்துக்கு, "மலாலா: கல்விக்காகப் போராடியதற்காக தலிபான்களால் சுடப்பட்ட பெண்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் புத்தகத்தின் ஒரு சில பகுதிகளை, ஞாயிற்றுக்கிழமை வெளியான "சன்டே டைம்ஸ்' கட்டுரையாக வெளியிட்டுள்ளது.
""சம்பவம் நடந்த அன்று, சக மாணவிகளுடன் நான் சென்றுகொண்டிருந்த வாகனத்தை, தாடி வைத்த இளைஞர் ஒருவர் கையசைத்து நிறுத்தினார். டிரைவருடன் அவர் பேசிக்கொண்டிருந்தபோது இன்னொரு இளைஞர் எங்களை நோக்கி வந்தார்.
தொப்பி அணிந்திருந்த அந்த இளைஞர், கைக்குட்டையால் முகத்தை மூடியிருந்தார். பார்ப்பதற்கு கல்லூரி மாணவர் போல் இருந்தார்.
எங்களைப் பார்த்து, "உங்களில் யார் மலாலா?' என்று கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை என்றாலும் பல பெண்கள் என்னை திரும்பிப் பார்த்ததை அவர் கவனித்துவிட்டார்.
உடனடியாக கைத்துப்பாக்கியை வெளியே எடுத்த அவர், என்னை நோக்கி சுடத்தொடங்கினார். முதல் குண்டு என் கண்ணில் பாய்ந்தது. மொத்தம் மூன்றுமுறை என்னை நோக்கி அவர் சுட்டதாக தோழிகள் பிறகு தெரிவித்தார்கள்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பது எதுவுமே நினைவில்லை.
பிரிட்டன் பர்மிங்ஹாம் மருத்துவமனையில் சுயநினைவு திரும்பிய போதுதான் நான் உயிர் பிழைத்ததே தெரிந்தது. எனக்கு மறுஜென்மம் கொடுத்த கடவுளுக்கு நன்றி கூறினேன்'' என்று மலாலா தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளதாக அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி, 07-10-2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.