Friday, October 11, 2013

செவ்வாய்க் கிரகம் செல்லும் முதல் இந்தியத் தொழில்நுட்ப செயற்கைக்கோள் "மங்கள்யான்'

இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு செவ்வாய்க் கிரகத்துக்கு செலுத்தப்படும் முதல் செயற்கைக்கோளாக "மங்கள்யான்' சிறப்புப் பெற்றுள்ளது என, இஸ்ரோ விஞ்ஞானி எஸ். இங்கர்சால் பெருமிதம் தெரிவித்தார்.

படம் உதவி கனடா ஜெயபாரதன்


திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக விண்வெளி வார நிறைவு விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது:

உலக அளவில் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தும் 6 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இதேபோல, விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களில் இருந்து பூமிக்கு தகவல் பெறும் 4 நாடுகள் பட்டியலிலும் இந்தியா இடம் பிடித்திருப்பது பெருமைக்குரியது. இதன் மூலம் அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. அதுமட்டுமன்றி, தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதிலும், ஏவுகணை, செயற்கைக்கோள் ஆகியவற்றை வடிவமைப்பதிலும் பிற நாடுகளுக்கு முன்னோடியாக உள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மட்டுமன்றி வேளாண்மை, சுற்றுச்சூழல், கடல்சார் அறிவியல், தட்பவெப்பம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தகவல்களைப் பெற செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகிறோம். இதற்கு விண்வெளி முக்கிய பங்கு வகிக்கிறது. 2ஜியை கடந்து 4ஜி தொழில்நுட்பத்துக்கு வந்துவிட்டோம். எதிர்கால சமுதாயத்தினருக்காக பல்வேறு தகவல்களைத் திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம்.

இம் மாதம் 29-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து "மங்கள்யான்' செயற்கைக்கோள் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பப்படுகிறது. பெங்களூரு, ஆமதாபாத்தில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், முழுமையாக இந்தியத் தொழில்நுட்பத்தைப் பின்பற்றியுள்ளது. இது 300 நாள்கள் பயணம் செய்து செவ்வாய்க்கிரகத்தில் உள்ள சூழல், கனிம வளம், உயிரினங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து பூமிக்கு தகவல்கள் அனுப்பும் என்றார்.

விழாவில், விண்வெளி வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த கல்லூரி, பள்ளி மாணவர்-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாவட்ட அறிவியல் மைய அதிகாரி டி. சீதாராம், திருநெல்வேலி நகர சுகாதார அலுவலர் பாலகணேசகுமார், அறிவியல் மைய கல்வி உதவியாளர்கள் பி. மாரிலெனின், என். பொன்னரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.              

தினமணி, 11-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.