Saturday, October 19, 2013

முட்டைகோசும் மகாராஜாக்களும் - பிரபா ஸ்ரீதேவன்

ஆங்கில எழுத்தாளர் லூயிஸ் காரலின் வியக்கவைக்கும் படைப்பான "பார்க்கும் கண்ணாடி வழியாக.. அங்கே ஆலிஸ் எதைப்பார்த்தாள்' என்ற புத்தகத்தில் ஒரு பாடல் வரும்.

"வால்ரஸ் கூறியது

பல விஷயங்களைப் பற்றி பேசும் நேரம் வந்துவிட்டது / காலணிகளைப் பற்றியும் / கப்பல்களைப் பற்றியும் / அச்சு மெழுகு பற்றியும் / முட்டைக்கோசும் மகாராஜாக்கள் பற்றியும் / கடல் ஏன் கொதிக்கிறது என்றும் / பன்றிகளுக்கு இறக்கை இருக்கிறதா என்றும் பேசும் நேரம் வந்துவிட்டது'.

அப்படி என்றால்? எதைப்பற்றி வேண்டுமானாலும் என்று பொருள். இங்கே இப்பொழுது நான் முட்டைக்கோசைப் பற்றியும் மகாராஜாக்களைப் பற்றியும் பேசப் போகிறேன்.

ஆறு வாரங்களாக வீட்டடைப்பு, எலும்பு முறிவு காரணமாக. "வாழ்க்கையில் தடைக்கற்கள் படிக்கல்லப்பா' இது போன்ற தமிழ் படப்பாடல்கள் இந்த சமயத்தில் உதவுகின்றன.

முதல் சில நாள்கள், எப்படி நான் விழலாம் நானொரு முட்டாள் என்று சுய நிந்தனையில் கழிந்தன. கடிகாரத்தின் முட்களை பின்னோக்கி திருப்ப முடியாது என்பது முதல் பாடம். நம் நாட்டில் இலவசங்களை நீட்டியே பலவற்றை சாதிக்கிறார்கள் .இதனால் தானோ என்னவோ உழைப்பின் வெற்றியை சிலையாக வடித்து நாம் கடற்கரையில் நிறுத்தி விட்டோம். இந்த இலவசங்களில் பிரதான இடம் வகிக்கிறது நாம் கேளாமலே நமக்கு வழங்கப்படும் அறிவுரைகள். "கதை எழுது', "கட்டுரை எழுது' "சுயசரிதை எழுது', "உலகப் படங்களை பார்', "ஜாலியான படங்களைப்பார்', "கண்ணை மூடிக்கொண்டு பாட்டு கேள்' "ஆத்ம விசாரம் செய்து உன்னை மேம்படுத்திக்கொள்' போன்ற அறிவுரைகள். நான் ஏன் விழுந்தேன் என்று என்னையே நான் நொந்து கொண்டிருக்கும்பொழுது இவை ஒன்றும் மனதில் ஏறவில்லை. டாக்டர் சொன்னார், "அறுவை சிகிச்சை இல்லாமல் விட்டதே என்று சந்தோஷப்படுங்கள்'. எங்கோ அசரீரியாக டிஎம்எஸ்ஸின் குரல், வரிகள் சற்று மாறி என் காதில் கேட்டது "அவருக்கென்ன சொல்லி விட்டார் அகப்பட்டவள் நானல்லவா?' தொடர்ந்து "கண் போன போக்கிலே கால் போகலாமா' என்றும் பாடினார். சிரிப்பு வந்து விட்டது. இந்த சிரிப்புதான் நம் தோழன். இது இல்லாவிட்டால் நாம் அழுத்தத்தில் தள்ளப்பட்டு விடுவோம்.

வியாதியோ விபத்தோ எதுவும் சொல்லிக்கொண்டு வருவதில்லை. தானே வருகிறது. சுற்றி நூறு பேர் இருந்தாலும் நம் வலியை நாம்தானே பொறுத்துக் கொள்ளவேண்டும்.

ஒன்றை மட்டும் உறுதியாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். மருத்துவமனையில் நாம் போய் சேர்ந்துவிட்டால் நம் உடல் மீது நமக்கு ஆளுமை கிடையாது. அது அவர்களுக்கு சொந்தம். புரட்டி, நிமிர்த்தி, தூக்கி, இறக்கி, இன்னும் என்னென்னவோ . இது என்னுடையதில்லை என்ற வேதாந்த வாக்கியம் அப்போது புரியும்.

இது நம் உடல் என்ற எண்ணத்தை ஒதுக்கி விட்டோமானால் கூச்சம், எரிச்சல், எதுவும் இருக்காது. யாருக்கோ செய்யப்படுகிறது என்று நாம் நினைத்துக் கொள்ளவேண்டும். வலியையும் அப்படி ஒதுக்க முடிந்தால் மிகவும் நன்றாக இருக்கும், ஆனால் நாம் யாரும் ஸ்ரீ ரமணர் இல்லையே. எனக்கு தெரியும் எலும்பு சேர்ந்ததும் என் வலி நீங்கி விடும் என்று. ஆனால் வலியே வாழ்க்கைத் துணையாகிப் போனவர்களுக்கு வாழ்க்கைப்பயணம் எனும் ரயில் செல்லும் சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் தெரியும் நம்பிக்கை இருந்தால்.

மோட்டுவளையை மட்டுமே பார்க்க வேண்டும் திரும்பக்கூடாது என்றார். முதலில் அலுப்பாக இருந்தது. ஆனால் அந்த வெளியை பார்த்துக்கொண்டே இருந்தால் நம்மை அலைக்கழிக்கும் எண்ண குரங்குகள் மெல்ல மெல்ல அடங்கும், எல்லாம் ஒருசேர குவிந்து நிற்கும். உலக மகா கலைஞர் மைக்கேல் ஆஞ்செலொ சிஸ்டைன் தேவாலயத்தின் மேற்புறத்தை மல்லாந்து படுத்துக்கொண்டே வரைந்தார் என்பது நம்பிக்கை. இல்லை இல்லை தலையை சாய்த்துக்கொண்டு நின்று கொண்டே வரைந்தார் என்கிறார்கள் சிலர். எதுவாக இருந்தாலும் அவருக்கு அப்போது ஆலயத்தின் மேற்புறமல்லாது வேறொன்றுமே கண்ணில் பட்டிருக்காது. இப்படியே மேலே பார்த்துக்கொண்டேயிருந்தால் எண்ணங்களும் கவனமும் ஒரு சேர அதுவே நினைத்துக்கூட பார்க்க முடியாத உயர்ந்த சித்திரங்களை வரைய அவருக்கு உதவியிருக்கும் என்று எனக்கு தோன்றியது. நம் கவனத்தை சிதற வைக்க எவ்வளவு ஓசைகள், காட்சிகள் வாசங்கள், ஸ்பரிசங்கள். நாம் இவை எல்லாவற்றையும் ஒதுக்கி நம்மை ஒன்றுபடுத்தி நம் தலைக்குயரே இருக்கும் இலக்கை மட்டும் நோக்கி மைக்கேல் ஆஞ்சலோ போல நமக்கு தெரிந்ததை செய்தோமானால்? அவர் நான்கு வருடங்கள் அப்படி தவம் செய்தாராம். நாம் அதில் கொஞ்சம்?

தினமும் காலை பேப்பரை எடுத்தால் "கண்ணீர் விட்டோ வளர்த்தோம்' என்று பாட தூண்டும் செய்திகள். மானுடத்தில் நம்பிக்கை வைப்பது முட்டாள்தனமா என்று தோன்றும். ஆனால் என் உடல் நலக்குறைவை பற்றி அறிந்ததும் எங்கள் தெருக்கோடியில் பழம் விற்பவர் ஓடி வந்து பார்த்தார், என்றோ என்னிடம் வேலை செய்து உதவியவர் பலகாரம் செய்து என்னிடம் கொடுத்து "சாப்பிடுங்கள்' என்றார். மனம் நெகிழ்ந்தது. இன்று உழைத்தால்தான் இன்றைய உணவு கிடைக்கும் என்பவர்களிடம் மானுடம் இன்னும் சாகவில்லை.

நம் பாரதத்தாயின் குழந்தைகளில் பெரும்பான்மையினர் இவர்கள்தானே. அவள் மனதை தளர விடவேண்டாம், சிரித்துக்கொண்டு இருக்கலாம். வெளிநாடு சென்று திரும்பும்பொழுது விமானத்தின் ஜன்னல் வழியாக நம்மண் தெரிந்ததும் "வந்துவிட்டேன்' "வந்துவிட்டேன்' என்று மனம் கூறும், யாரோ நமக்கு காத்திருப்பது போல. அவள் நமக்கு சொந்தம் நாம் அவளுக்கு சொந்தம் இது மறுக்கமுடியாத உண்மைதானே. எந்த ஒரு வேலை செய்தாலும் இதை அவள் பெருமைப்படுவது போல செய்வேன் என்று நாம் ஒவ்வொருவரும் உறுதி பூண்டால்!

இப்படியும் இருக்கிறார்கள் மனிதர்கள் இவர்கள் தலையங்க நாயகர்களாக ஏனோ வருவதில்லை. ஆனால் அண்மையில் சம்பத் என்ற ஒரு ஓட்டுனர் தனக்கு நெஞ்சு வலி வந்ததும் ஒரு கையால் பேருந்தை ஓட்டி சாலையோரம் நிறுத்தி பயணிகளை பத்திரமாக இருக்க வைத்து உயிர் விட்டிருக்கிறார். என்ன ஒரு கடமை உணர்ச்சி!

இந்த செய்தி ஒரு தினசரியில் முதல் பக்கத்தில் வந்தது. இனி ஒரு விதி செய்வோம். ஒவ்வொரு தினசரியும் முதல் பக்கத்தில் இது போன்ற நல்ல செய்தி ஒன்றையாவது கட்டம் கட்டி வெளியிட வேண்டும். தனிமையில் யோசிப்பதில் உள்ள நன்மை இதுதான். வானமே எல்லை. நம் அறையில் இருந்தபடியே பன்முகப் பூக்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனமாக சமூகத்தை மாற்றி மகிழலாம்.

டாக்டர் என்னிடம் ஆறிலிருந்து எட்டு வாரங்களுக்குள் நடக்க முடியும் என்றார். சரி என்று நாள்காட்டியில் பார்த்து வைத்துக் கொண்டேன். அந்த சமயத்தில் தினமும் வந்து உடல் பயிற்சி செய்ய உதவுபவரிடம் மகிழ்ச்சியுடன் இந்த செய்தியை பகிர்ந்துக்கொண்டேன். அவர் சிரித்துக்கொண்டே என்னிடம் சொன்னார் "மேடம், எலும்புக்கு வாரக்கணக்குத் தெரியாது. அதனால் ஆறு எட்டு என்று ரொம்ப நம்பி பின்னால் வருத்தப்படாதீர்கள். எல்லாம் தானாக நடக்கும். உங்கள் வலியிருக்கிறது பாருங்கள் அதுதான் உங்களுக்கு உண்மையான குரு. அது சொல்லும் என்றைக்கு நடக்கலாம் என்று "வேதம் புதிது' படத்தில் ஒரு காட்சியில் சத்யராஜிடம் ஒரு சிறுவன் கேட்கும் கேள்வி பளார் பளார் என்று அறைவது போல அமையும்.

இந்த வார்த்தைகளும் அப்படித்தான்; நெத்தியடி என்கிறார்களே அதுபோல. எவ்வளவு கனம் நிறைந்த சொற்கள்? எதிர்பார்ப்பின் மறுபக்கம் ஏமாற்றம். நாமேதான் நமக்கு பாடம் சொல்லிக்கொள்ள வேண்டும். நமக்குள்ளேயே தான் நம் ஆசிரியர்கள் உள்ளார்கள். 

கட்டுரையாளர்: உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு).

தினமணி - 18 - 10 -2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.