Thursday, October 17, 2013

நியூஸிலாந்து: இளம் பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு !




இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை நியூஸிலாந்து பெண் எழுத்தாளர் எலனார் காட்டன் (28) வென்று சாதனை படைத்துள்ளார். புக்கர் பரிசு வரலாற்றில் மிக இளம் வயதில் இந்த விருதை பெறுபவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

ஆங்கில இலக்கியத்தில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் உலகப் புகழ்வாய்ந்த "புக்கர் பரிசு' வழங்கப்பட்டு வருகிறது. 45-வது புக்கர் பரிசு வழங்கும் விழா லண்டன் கில்ட் ஹாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, "தி லூமினரீஸ்' என்ற 832 பக்கங்கள் கொண்ட நீண்ட நாவல் எழுதிய நியூஸிலாந்து பெண் எழுத்தாளர் எலனார் காட்டனுக்கு புக்கர் பரிசும், அதற்கான பரிசுத் தொகையாக சுமார் ரூ.49,55,000 (50,000 பவுண்ட்) வழங்கப்பட்டது. இது அவருடைய 2-வது நூல் ஆகும்.

இந்த நாவலில் 19-ம் நூற்றாண்டில் தங்க வேட்டை தொடர்பாக நிகழ்ந்த கொலையின் மர்மங்கள் குறித்து எழுதியுள்ளார்.

இதுகுறித்து எலனார் காட்டன் கூறுகையில், "அசாதாரணமான மற்றும் மதிப்பு மிகுந்த புக்கர் பரிசை எனக்கு வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தை எனது 25-வது வயதில் எழுதத் தொடங்கினேன்' என்று தெரிவித்தார்.

இந்த ஆண்டு புக்கர் பரிசு பெறுபவரை எழுத்தாளரும், திறனாய்வாளருமான ராபர்ட் மெக்ஃபர்லேன் தேர்ந்தெடுத்தார். அவர் கூறுகையில், "புக்கர் பரிசுக்கான இறுதிப்பட்டியலில் இடம் பெறும் புத்தகங்களை தேர்ந்தெடுப்பது மிக சிரமமாக இருந்தது. அதில் எலனார் காட்டன் எழுதிய "தி லூமினரீஸ்' என்ற நாவல் புதிய வாசிப்புக்கு வழிவகுத்துள்ளதை உணர்ந்து அந்த புத்தகத்தை தேர்வு செய்துள்ளோம்' என்றார்.

அமெரிக்க வாழ் இந்தியருக்கு பறிபோன வாய்ப்பு: முன்னதாக, கடந்த மாதம் புக்கர் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதிப்பட்டியலில் 6 பேர் இடம்பெற்றிருந்தனர். அதில், அமெரிக்க வாழ் இந்திய பெண் எழுத்தாளர் ஜும்பா லாஹரியும் ஒருவர். அவர் எழுதிய "தி லோலேண்ட்' என்ற நாவல் இறுதிப்பட்டியலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் புக்கர் பரிசுக்கு தேர்வு செய்யப்படவில்லை. இவர் ஏற்கனவே "புலிட்சர் பரிசு' வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைச் சேர்ந்த சல்மான் ருஷ்டி, அனிதா தேசாய், அருந்ததி ராய், அரவிந்த் அடிகா ஆகியோர் ஏற்கெனவே புக்கர் பரிசு வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி- 17-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.