Thursday, October 17, 2013

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சென்னை ஏரிகள்! -ம.தமிழன், அம்பத்தூர்

கழிவு நீர் கலக்கும் கொரட்டூர் ஏரி

வாகனங்கள் கழுவப் பயன்படுத்தப்படும் புழல் ஏரி நீர்

சென்னையில் உள்ள மிகப் பெரிய ஏரிகளான அம்பத்தூர், புழல் மற்றும் கொரட்டூர் ஏரிகள், வீட்டு மனைகளாகப் பிரிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

சென்னை மாவட்டத்தின் வடமேற்கின் எல்லையாகவும், திருவள்ளூர் மாவட்டத்தின் நுழைவுவாயிலாகவும் இருப்பது அம்பத்தூர். 47 கிராமங்களை உள்ளடக்கிய அம்பத்தூர் தாலுக்காவின் மொத்த பரப்பு 23.382 ஹெக்டேர்.

அம்பத்தூரின் ஒரு பக்கம், 4960 ஏக்கர் பரப்பளவு கொண்ட புழல் ஏரியும், 292 ஏக்கர் பரப்பளவு கொண்ட அம்பத்தூர், அயப்பாக்கம் ஏரியும், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொரட்டூர் ஏரி என தனது எல்லைகளைத் தண்ணீரால் வகுத்துக் கொண்டு இதன் நடுவே தீபகற்பமாய் காட்சித் தருகிறது அம்பத்தூர்.

இதில் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொரட்டூர் ஏரியிலிருந்து, ஒருசொட்டுத் தண்ணீரை கூட சென்னை குடிநீர் வாரியம் பயன்படுத்தவில்லை.

இதனால் ஏரியைச் சுற்றி ஆக்கிரமிப்பு தொடங்கியது. இப்போது பெரும்பகுதியைச் சமூகவிரோதிகள் வீட்டுமனைகளாகப் பிரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த மனைப் பகுதிகளுக்கு, அரசும் தன் பங்குக்கு சாலைகளை போட்டு, தெருவிளக்குகளை எரியவிட்டு, மின் இணைப்பும் கொடுத்துள்ளது. எஞ்சிய பகுதியில் திட்டமிட்டுக் கழிவுநீரைக் கலந்து மாசுபடுத்தி வருகிறது.

இதுபோலவே அம்பத்தூர், அயப்பாக்கம் ஏரிகளும் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவை ஏற்று அம்பத்தூர் ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். வீடிழந்தவர்களுக்கு ஆவடி பகுதியில் மாற்றிடமும் கொடுத்தனர். ÷இப்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகள் மீண்டும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. அயப்பாக்கம் ஏரியைச் சுற்றி தண்ணீரைத் திருடி, லாரிகள் மூலம் எடுத்துச் சென்று சென்னையில் உள்ள வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

ஆனால் பொதுப்பணித் துறையோ கையைக் கட்டி, வாயைப் பொத்தி வேடிக்கை பார்க்கிறது.

சென்னை மாநகருக்குத் தண்ணீர் வழங்கும் மிகப்பெரிய அளவிலான புழல் ஏரி, செங்குன்றத்தில் தொடங்கி, புழல், சூரப்பேடு, அம்பத்தூர், திருமுல்லைவாயல், பொத்தூர் என 32 சதுர கிலோ மீட்டர் (4960 ஏக்கர்) கொண்டது.

இதில் செங்குன்றம் பகுதியில் மட்டும் இயற்கையாக அமைந்த, கரை உள்ளது. எஞ்சிய பகுதியில் எந்த பாதுகாப்புமின்றி ஏரி உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் இந்தப் பகுதிகளில் உள்ள மற்ற ஏரிக்கு கரையில்லை.

இதனால் பெரிய அளவில் புழல் ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சூரப்பேடு பகுதியில் ஆடு, மாடு, லாரிகள் கழுவுவதற்கு ஏரி நீரைப் பயன்படுத்துகின்றனர்.

3300 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கி வைக்கும் அளவுக்கு இருந்த ஏரி, இன்று சுருங்கி குட்டையாக மாறி வருகிறது.

உறக்கத்தில் உள்ள பொதுப் பணித் துறை இப்போதாவது விழித்துக் கொண்டு ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, தூர்வாரி, கரைகளை உயர்த்தி, முதல்வரின் கனவுத் திட்டமான மழைநீர் சேகரிப்பைச் செயல்படுத்தினால், நாம் கிருஷ்ணா நீருக்காக அண்டை மாநிலத்தில் கையேந்த வேண்டிய அவசியமில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.                                                             
தினமணி, 17-10-2013                                        


0 comments:

Post a Comment

Kindly post a comment.