Thursday, October 10, 2013

நகர்ப்புற நிலங்களுக்கு கணினி வழிபட்டா: நிலஅளவர்களுக்கு அலுவலகத்துடன் குடியிருப்பு-.




நகர்புற நிலங்களுக்கு கணினி வழிபட்டா: நிலஅளவர்களுக்கு அலுவலகத்துடன் குடியிருப்பு- ஜெயலலிதா உத்தரவு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசின் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், கட்டுக்கோப்பான சமுதாய முன்னேற்றம் மற்றும் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதிலும், இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போது, மக்களை நாடிச் சென்று உதவிக்கரம் நீட்டுவதிலும், பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு நிலைகளில் மக்களுடன் இணைந்து செயல்படுவதிலும் வருவாய்த் துறை முக்கியப் பங்காற்றுவதுடன், நிருவாகத்தின் முதுகெலும்பாக தொடர்ந்து விளங்கி வருகிறது.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வருவாய்த் துறையின் சேவை மக்களை விரைந்து அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், புதிய மாவட்டங்களை உருவாக்குதல், புதிய வட்டாட்சியர் அலுவலகங்களை உருவாக்குதல், ஒவ்வொரு கிராமத்திற்கும் தனியாக கிராம நிருவாக அலுவலர்களை நியமித்தல் போன்ற எண்ணற்ற மக்கள் நலம் பயக்கும் நடவடிக் கைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலானஅரசு எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் 1,136 குறுவட்டங்கள் உள்ளன; 1,094 குறுவட்ட நில அளவர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நிலத்தினை அளவு செய்தல், உட்பிரிவு செய்தல், தேவையான ஆவணங்களில் திருத்தம் செய்தல், ஆவணங்களை பராமரித்தல் போன்ற பணிகளை குறுவட்ட நில அளவர்கள் செய்து வருகின்றனர். இவர்களது பணிகள் அனைத்தும் பொதுமக்கள் தொடர் புடையவை. அன்றாடம் இவர்களிடம் நிலம் சம்பந்தமான தங்களது குறைகளை களைவதற்காக பொதுமக்கள் அணுகி வருகின்றனர்.

எனவே பொதுமக்கள் குறுவட்ட அளவர்களை எளிதாக தொடர்பு கொள்வதற்கு அலுவலகத்துடன் குடியிருப்பு கட்டுவதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார். முதற்கட்டமாக 1,136 குறுவட்டங்களில் 100 குறுவட்டங்களில் உள்ள குறுவட்ட நில அளவர்களின் பயன்பாட்டிற்காக அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்ட முதல்- அமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். இதற்காக 12 கோடியே 71 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.   

கிராமப்புற நில ஆவணங்கள் மட்டுமே இதுவரை கணினிமயமாக்கப் பட்டுள்ளது.  நகரங்களில் உள்ள பகுதிகளில் நில ஆவணங்கள் கணினிமய மாக்கம் செய்யும் பணிகள் தேசிய தகவல் மையம் தயாரித்து வழங்கியுள்ள மென்பொருளைக் கொண்டு நடைபெற்று வருகிறது.

நகர்ப்புற நில ஆவண படிவத்தில் உள்ள தகவல்களை கணினியில் உள்ளீடு செய்ய ஏற்ற வகையில் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.   எனவே நகர்ப்புற நில ஆவணங்களை கணினிபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட கோட்டை- தண்டையார் பேட்டை, எழும்பூர்-நுங்கம்பாக்கம் மற்றும் மயிலாப்பூர்- திருவல்லிக்கேணி வட்டங்களுக்குட்பட்ட ஒரு லட்சம் நகர நில அளவை எண்களுக்கான ஆவணங்கள் கணினிகளில் உள்ளீடு செய்து, நில உடமைதாரர்களுக்கு இந்த ஆண்டு முதல் கணினி வழியாக பட்டா வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த பணிகளை நிறைவு செய்வதற்காக 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் வருவாய்த் துறையின் பணிகள் எளிதாக்கப்பட்டு, நில ஆவணங்கள் சம்பந்தமான மக்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற வழிவகை ஏற்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.                                        

மாலை மலர்-10-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.