Thursday, October 3, 2013

பெருநகர பெட்ரோல் நிலையங்களில் 5 கிலோ எல்.பி.ஜி. சிலிண்டர்கள் விற்பனை !




நாட்டின் பெரு நகரங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களில் 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள், "நிறுவனத்துக்குச் சொந்தமான - நிறுவனத்தால் நடத்தப்படும்' (சி.ஓ.சி.ஓ.) பெட்ரோல் நிலையங்களில் கிடைக்கும். இது நாட்டில் மொத்தமுள்ள 47,000 பெட்ரோல் நிலையங்களில் 3 சதவிகிதம் மட்டுமே. இது சந்தை விலைக்கு விற்கப்படும். தற்போது மானிய விலையாக 14.2 கிலோ எடை சிலிண்டர் ரூ.410-க்கு விநியோகிக்கப்படுகிறது. சந்தை விலையானது அதைவிட இரு மடங்குக்கு மேல் அதிகமாகும்.

5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனையை அக். 5 ஆம் தேதி பெங்களூரில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் எம்.வீரப்ப மொய்லி துவக்கி வைக்கிறார். தில்லி, மும்பை, கோல்கத்தா, சென்னை, பெங்களூரு ஆகிய பெரு நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட (சி.ஓ.சி.ஓ.) பெட்ரோல் நிலையங்களில் மட்டுமே இவை விற்பனை செய்யப்படும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை நாடு முழுவதும் மொத்தம் 1,440 சி.ஓ.சி.ஓ. பெட்ரோல் நிலையங்களைக் கொண்டுள்ளன.

மேலும், தற்போது 5 பெருநகரங்களில் மட்டுமே 5 கிலோ எல்.பி.ஜி. விற்பனை அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், இதற்கான விற்பனை நிலையங்கள் சில டஜன்கள் மட்டுமே இருக்கும்.

மேலும், வாடிக்கையாளருக்கு உதவும் வகையில், விநியோகஸ்தரை மாற்றிக் கொள்ளும் வசதியையும் பெட்ரோலிய அமைச்சகம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதுவரை அத்தகைய வசதி இல்லை.

இந் நிலையில், வாடிக்கையாளர் தற்போதுள்ள விநியோகஸ்தரின் சேவை திருப்தியில்லை எனில், அப் பகுதியில் உள்ள மற்றொரு விநியோகஸ்தர் நிறுவனத்துக்கு (எந்த எண்ணெய் நிறுவனமாக இருந்தாலும் சரி) தங்களது கணக்கை மாற்றிக் கொள்ளலாம். இந்தப் புதிய திட்டமானது முதலில் 30 நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும்

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.விநியோகஸ்தரை மாற்றிக் கொள்ளும் வசதியானது தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                                                                                                            

தினமணி, 03-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.