Sunday, October 6, 2013

உலக சாதனைக்காக ஆலமர வடிவில் அமர்ந்த 4202 மாணவர்கள்


உலக சாதனை முயற்சியாக திருச்சியில் ஆலமர வடிவில் கல்லூரி மாணவர்கள் 4202 பேர் அமர்ந்தனர். இதைத் தொடர்ந்து அனைவரும் தங்கள் கல்லூரி வளாகத்தில் ஆளுக்கொரு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
 திருச்சி மாத்தூரிலுள்ள பாவேந்தர் பாரதிதாசன் கல்விக் குழுமம் சார்பில் உலக சாதனை முயற்சியாக சனிக்கிழமை காலை கல்லூரி மாணவர்கள் 4202 பேர் ஆலமரம்போல விளையாட்டுத் திடலில் அமர்ந்தனர். இவர்களில் 1800 பேர் மாணவிகள்.

 மரத்தின் நிறத்துக்கேற்ப மாணவ, மாணவிகள் உடையணிந்திருந்தனர். இந்த வளாகத்தில் செயல்பட்டு வரும் இரு பொறியியல் கல்லூரிகள், ஒரு கலை அறிவியல் கல்லூரி, ஒரு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றின் மாணவ, மாணவிகள் முழுவதும் இந்த சாதனை முயற்சியில் பங்கேற்றனர்.
 சாதனை முயற்சியின் நிறைவில் அத்தனைப் பேருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, அவையனைத்தும் கல்விக் குழும வளாகத்திலேயே நட்டு வைக்கப்பட்டன.

 லிம்கா நிறுவனத்தின் விளம்பரப் பிரிவு மேலாளர் வி.வி. மூர்த்தி, அசிஸ்ட் உலக சாதனை அமைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் இந்தச் சாதனை முயற்சியை நேரில் பார்வையிட்டு சான்றிதழ்களை வழங்கினர். கின்னஸ் உலக சாதனைக்கு இந்த நிகழ்வின் பதிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் ஆலோசகர் பொன்ராஜ், கிரீன் கலாம் திட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல்கனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். கல்விக் குழுமத் தலைவர் ஏ.எம். ராமன் தலைமை வகித்தார். நிர்வாக அறங்காவலர் டாக்டர் எம்ஆர். அருண், கல்வி இயக்குநர் டாக்டர் உமா அருண் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.                                                                                                                             

தினமணி, 06-10-2013                                                                                                                  





0 comments:

Post a Comment

Kindly post a comment.