Friday, October 11, 2013

தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி முதல்வர் வெட்டிக் கொலை: 3 மாணவர்கள் கைது


 தூத்துக்குடியில் தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்புடையதாக அதே கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பு கூறுவது:

திருநெல்வேலி - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் தூத்துக்குடி மாவட்டம் கீழவல்லநாட்டில் மலையடிவாரத்தையொட்டி அமைந்துள்ளது இன்பென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி. இதில், கடந்த சில ஆண்டுகளாக முதல்வராகப் பணியாற்றி வந்தவர் எல்.ஆர்.டி. சுரேஷ் (53).

இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை 8.30 மணியளவில் கல்லூரிக்கு காரில் சென்றார். வளாகத்தினுள் காரில் இருந்து இறங்கியபோது அங்கு அரிவாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களுடன் காத்திருந்த 3 மாணவர்கள் அவரை சராமாரி தாக்கினர். அதில் தலை, கழுத்து மற்றும் உடலில் பல இடங்களில் சுரேஷுக்கு பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.

இதனால், நிலைகுலைந்து அவர் சாய்ந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத நிலையில், இந்த காட்சியை பார்த்த கல்லூரி வளாகத்திலிருந்த சக மாணவர்களும், அலுவலர்களும், ஊழியர்களும் பீதியடைந்தனர். சிலர் தைரியமாக அந்த 3 மாணவர்களையும் மடக்கிபிடித்தனர்.

இதற்குள் அங்கிருந்த காரில் சுரேஷை ஏற்றிக்கொண்டு பாளையங்கோட்டையிலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கல்லூரி பேருந்து ஓட்டுநர் நாகராஜன் வந்தார். ஆனால், அதிக ரத்த இழப்பு காரணமாக வழியிலேயே சுரேஷ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கல்லூரி வளாகத்தினுள் பிடிப்பட்ட 3 மாணவர்களும் முறப்பநாடு போலீஸில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எம். துரை விசாரணை நடத்தினார்.

போலீஸாரின் விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட 3 மாணவர்களும் இன்பென்ட் ஜீசஸ் கல்லூரியில் தற்போது பயில்பவர்கள். அவர்களில் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த பிச்சைக்கண்ணு (21) என்ற மாணவர் இறுதியாண்டு ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படித்து வருகிறார். அவரது நண்பர்கள் நாகப்பட்டினத்தை சேர்ந்த பிரபாகரன் (3-ம் ஆண்டு சிவில் மாணவர்), சிவகங்கையை சேர்ந்த டேனிஸ் (பி.டெக். தகவல் தொழில்நுட்பம் இறுதியாண்டு மாணவர்).

இவர்கள் மூவரும் பாளையங்கோட்டையில் ஒரு வீட்டில் தங்கியிருந்து, அங்கிருந்து தினமும் கல்லூரிக்கு சென்றுவருகிறார்கள். கடந்த வாரத்தில் இந்த கல்லூரி மாணவர்கள் தனியார் பேருந்தில் பயணம் செய்யும்போது இருக்கையை பிடிக்க நடைபெற்ற போட்டியால் அவர்களுக்குள் மோதல் வெடித்தது. இந்த மோதல் கல்லூரிக்குள்ளும் எதிரொலித்தது.

கல்லூரி வளாகத்தினுள்ளும் மோதல் ஏற்பட்டதை அடுத்து இந்த விவகாரத்தில் முதல்வர் சுரேஷ் தலையிட்டிருக்கிறார். மாணவர்களிடையே விசாரணை நடத்திய அவர் பிச்சைகண்ணுவை கடந்த திங்கள்கிழமை கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்திருந்தார். இந்த ஆத்திரத்தில் பிச்சைக்கண்ணுவும் அவரது மற்ற இரு நண்பர்களும் கொலை செய்திருக்கிறார்கள் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை அடுத்து கல்லூரி உடனே மூடப்பட்டது. வரும் 17-ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. கல்லூரியை சுற்றிலும் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.                     

தி இந்து, 11-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.