Monday, August 19, 2013

கோயம்பேடு மார்க்கெட்டில் ஆபத்தான மின்வயர்கள் ! மனிதர்கள் மரணிக்க வேண்டுமா ?




திறந்தவெளியில் செல்லும் சேதமடைந்த மின் கேபிள்கள். (நடுவில்) பராமரிப்பின்றி திறந்து கிடக்கும் மின்பகிர்மானப் பெட்டி. (வலது) 
கடந்த வாரம் தீப்பிடித்து எரிந்த மின் பகிர்மானப் பெட்டி.
 
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில்  மின்சார கேபிள்கள் சேதமடைந்துள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நிகழ அதிக வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் பிரதான சந்தையாக விளங்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
தமிழகம் உள்பட வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து நாளொன்றுக்கு 5000 டன் காய்கறிகளும், 500 டன் பழ வகைகளும் மார்க்கெட்டுக்கு வருகின்றன.

சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் இந்த மார்க்கெட்டுக்கு தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காய்கறிகள், பழங்கள் வாங்க வருகின்றனர்.

பராமரிப்பு இல்லை: கோடிக்கணக்கில் வியாபாரம் நிகழும் கோயம்பேடு மார்க்கெட் முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனவும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கோயம்பேடு வியாபாரிகள் கூறியதாவது:
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சுமார் 92 காய்கறி மார்க்கெட்டுகள் உள்ளன.

அவற்றில் பெரும்பாலான இடங்களுக்கு கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்துதான் காய்கறிகள், பழங்கள் செல்கின்றன.

ஆனால் இங்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லை.

ஆபத்தான மின் வயர்கள்: கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பிரதான கேபிள்கள் மார்க்கெட்டின் பல இடங்களில் செல்கின்றன.

ஆனால் அந்த கேபிள்கள் பாதுகாப்பானதாக இல்லை. பூமிக்கடியில் புதைக்கப்படாமல், திறந்த வெளியில் மின் கேபிள்கள் செல்கின்றன.
மார்க்கெட் வளாகத்துக்குள் செல்லும் பெரும்பாலான மின்சார கேபிள்கள் 70 சதவீதத்துக்கு மேல் சேதமடைந்துள்ளன. இதனால் கடந்த வாரத்தில் 2 முறை ஜங்சன் பாக்ஸ் தீப்பிடித்து எரிந்தது.

உயிரிழப்பு ஏற்படும்: மழை தொடர்ந்து பெய்து வருவதால் மின் கேபிள்கள் மேலும் சேதமடைந்து மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

பாதுகாப்பில்லாத மின் கேபிளை மிதித்த எருமை மாடு மின்சாரம் பாய்ந்து அண்மையில் இறந்தது.

பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் மார்க்கெட் தொழிலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த கேபிள்களை மாற்றி, பாதுகாப்பான மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் வழி வகை செய்ய வேண்டும் என்றனர்.             

நன்றி :- தினமணி, 19 - 08 -2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.