Monday, August 5, 2013

மதிப்பெண் பெறுவதில் காட்டும் அக்கறையை உயிர்காக்கும் நீச்சல் கற்பதில் ஏன் காட்டுவதில்லை ?

மக்கள் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு இடம் பெயர்வதால் பாரம்பரியமிக்க பல்வேறு கிராமியக் கலைகள் நாளுக்கு நாள் மறைந்து வருகின்றன. பாரம்பரியக் கலைகள் மட்டுமின்றி காலங்காலமாக மக்களிடையே காணப்பட்ட பழக்கவழக்கங்களும் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றன.

அவ்வாறு குறைந்து வரும் கிராமியப் பழக்கவழக்கங்களுள் நீச்சலும் ஒன்றாகிவிட்டது. இதன் விளைவாக, நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்போர் பற்றிய துயரச் செய்திகள், ஊடகங்களில் அன்றாடச் செய்திகளாகிவிட்டன.

சுற்றுலாவாக தூத்துக்குடிக்கு வந்த மாணவர்களில் நான்கு மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவமும், தன் நண்பனின் சகோதரி திருமணத்திற்காக திருநெல்வேலிக்கு வந்த கல்லூரி மாணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவமும் சமீபத்திய துயரச் செய்திகளாகும்.

கிராமப்புறங்களில் ஏரி, குளம், கிணறு போன்ற நீர் நிலைகள் இருப்பதால் கிராமப்புறத்தில் வாழும் சிறுவர் சிறுமியர்க்கு நீச்சல் பழகுவதென்பது இயல்பான ஒன்றாகிவிடுகிறது. ஆனால், நகர்ப்புறத்து சிறுவர் சிறுமியர்க்கு அத்தகைய சூழலும் வாய்ப்பும் இல்லை என்பதால் பெரும்பாலான நகர்ப்புறவாசிகள் நீச்சல் என்பதை அறியாதிருக்கிறார்கள்.

மேலும் நகர்ப்புறங்களில் ஒரு சில நீச்சல் குளங்கள் செயற்கையாக அமைக்கப்பட்டிருப்பினும், அத்தகைய நீச்சல் குளங்களை உபயோகப்படுத்துவதற்கான கட்டணம், நேரத்தை ஒதுக்குவது போன்றவற்றில் சிரமங்கள் இருப்பதால் பெருவாரியான நகர்ப்புற சிறுவர் - சிறுமியர் நீச்சல் குளங்களை நாடிப் போவதில்லை.

கிராமப்புற மக்கள் தங்கள் அன்றாடத் தேவையான குளித்தல், துணி துவைத்தல் போன்றவற்றுக்கு ஏரி, குளம், கிணறு போன்றவற்றையே சார்ந்திருப்பதால் நீச்சல் கற்றுக் கொள்வதென்பது வாழ்க்கையில் அவர்களுக்கு ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது.

ஆனால், நகர்ப்புறங்களில் வாழ்வோருக்கு அத்தகைய கட்டாயம் இல்லாததால், எதேச்சையாக இவர்கள், நீர் நிலைகளை எதிர்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும்போது சில சமயங்களில் உயிரிழக்கும் துயரச் சம்பவங்களுக்கு உள்ளாகின்றனர்.

நீச்சல் பழகிக்கொள்வது ஓர் உயிர் காக்கும் தற்காப்பு ஆயுதம் என்பதோடு, உடலின் ஆரோக்கியத்தைப் பேணவும் உதவுகிறது.

நீரில் நீந்தும்போது, ரத்த ஓட்டம் சீரடைகிறது. கை, கால் மூட்டுகளுககு நல்ல பயிற்சி கிடைப்பதால் மூட்டுவலி என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஜீரண உறுப்புகளின் இயக்கத்தால் அஜீரணக் கோளாறு அகலுகிறது. மூச்சை வெகுவாக உள்ளிழுத்து வெளிவிடுவதால் ஆழ்ந்த சுவாசத்தால் போதுமான ஆக்ஸிஜன் ரத்தத்தில் கலந்து உடல் புத்துணர்வு பெறுகிறது.

இவை அனைத்திற்கும் மேலாக நீச்சலடிக்கையில் ஏற்படும் உணர்வுகளால் மன அழுத்தம் வெகுவாகக் குறைகிறது.

நீச்சல் பழகுவதால் ஏற்படும் இத்தனை நற்பயன்கள் நகர்ப்புற மக்களுக்கும் கிடைத்திடும் வகையில் அரசு ஆங்காங்கே நீச்சல் குளங்களை அமைத்திட முன்வர வேண்டும். இடமும் சூழலும் பொருந்தும்பட்சத்தில் பள்ளிகளில்கூட நீச்சல் குளங்கள் அமைப்பதை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

பள்ளித் தேர்வுகளில் தங்கள் பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதில் அக்கறை காட்டும் பெற்றோர், பிள்ளைகளுக்கு நீச்சல் பழகிடவும் கற்றுத்தர வேண்டும். ஏனெனில், மதிப்பெண்களை போன்று உயிரின் மதிப்பு மதிப்பிட இயலாதது.

 நன்றி :- இரா. சாந்தகுமார், திருநெல்வேலி.,

கருத்துக்களம், தினமணி, 05-08-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.