Sunday, August 18, 2013

20 ஆண்டுகள் தேடிய அப்துல் கரீம் துண்டா என்ற அப்துல் குவாட்டூஸ், 70- கைது


நாட்டில் நடந்த, 40க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவனும், மத்திய அரசால் தேடப்பட்டு வரும், 20 பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவனுமான, அப்துல் கரீம் துண்டா என்ற அப்துல் குவாட்டூஸ், 70, நேற்று கைது செய்யப்பட்டான். இந்தியாவுக்குள் நுழைய முயன்றபோது, நேபாள எல்லையில் சிக்கினான்.

கடந்த, 2008ம் ஆண்டில், பாகிஸ்தானிலிருந்து கடல் மார்க்கமாக வந்த பயங்கரவாதிகள், மும்பையில் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில், 160க்கும் மேற்பட்டோர் பலியாயினர்; ஏராளமானவர்கள் காயமடைந்தனர். 

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குப் பின், மத்திய அரசால் தேடப்பட்டு வரும், 20 பயங்கரவாதிகளின் பட்டியல், பாக்., அரசிடம் அளிக்கப்பட்டது.இந்த பட்டியலில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது, ஜெய்ஷ் - இ - முகமது தலைவர், மவுலானா மசூத் ஆசார், 1993ல், மும்பையில் நிகழ்ந்த தொடர்பு குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி, தாவூத் இப்ராகிம் உட்பட, 20 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.இந்தப் பட்டியலில், இடம் பெற்றிருந்த நபர்களில் ஒருவனும், மும்பை, ஐதராபாத், டில்லி, ஜலந்தர் மற்றும் ரோதக் என, நாட்டில், 40க்கும் மேற்பட்ட இடங்களில் நிகழ்ந்த, குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவனும், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் வெடிகுண்டு நிபுணருமான, அப்துல் கரீம் துண்டா, நேற்று முன் தினம், மதியம், 3:00 மணி அளவில், இந்திய - நேபாள எல்லை அருகே கைது செய்யப்பட்டான்.

டில்லியில் மட்டும், இவன் மீது, 1994 முதல், 1998ம் ஆண்டு வரை, 21 வழக்குகள் பதிவாகியுள்ளன. லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பில், பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு, வெடிகுண்டு தயாரிப்பது தொடர்பாக பயிற்சி அளித்தவன்.ஒரு கை ஊனமான இவன், யூரியா, நைட்ரிக் ஆசிட், பொட்டாசியம் குளோரைடு மற்றும் சர்க்கரை போன்ற உள்ளூரில் கிடைக்கும் பொருட்கள் மூலம், வெடி குண்டுகள் தயாரிப்பதிலும், அவற்றை மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் வெடிக்கச் செய்து, அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதிலும் கைதேர்ந்தவன்.நேபாள எல்லை அருகே கைதான துண்டாவிடம், இந்த ஆண்டு ஜனவரியில், அப்துல் குவாட்டூஸ் என்ற பெயரில் பெற்றிருந்த, பாகிஸ்தான் பாஸ்போர்ட் இருந்தது.

உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் மாவட்டம், பிகுவா கிராமத்தைச் சேர்ந்த, துண்டா, 40 வயது வரை, தச்சு வேலை, பழைய பொருட்கள் வியாபாரம், ஜவுளி வியாபாரம் என, பல தொழில்களைச் செய்துள்ளான். இதன்பின், பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளான். துண்டாவின் இளைய சகோதரர் அப்துல் மாலிக் இன்னும், தச்சராகவே உள்ளார்.துண்டா கைது தொடர்பாக, மாறுபட்ட தகவல்களை போலீசார் தெரிவிக்கின்றனர். அதாவது, வளைகுடா நாடு ஒன்றில், துண்டா தங்கியிருந்ததாகவும், அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட போது, கைது செய்யப்பட்டதாக, ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.மற்றொரு தரப்பினரோ, பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து, 10 நாட்களுக்கு முன், துபாய் சென்ற துண்டா, அங்கிருந்து, நேபாள தலைநகர் காத்மாண்டு வந்ததாகவும், பின், இந்திய - நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.கைதான துண்டா, நேற்று காலை, டில்லியில் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டான்; அவனை மூன்று நாள் போலீஸ் காவலில் வைக்க, உத்தரவிடப்பட்டது. டில்லி போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இது தொடர்பாக, டில்லி சிறப்புப் பிரிவு போலீஸ் கமிஷனர் ஸ்ரீவத்சவா கூறியதாவது: கடந்த, 1993ல், மும்பை நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு, 1997 மற்றும் 1998ம் ஆண்டுகளில், டில்லியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள், உ.பி.,யில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு, பானிபட், சோனேபட், லூதியானா மற்றும் ஐதராபாத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் தொடர்பாக தேடப்பட்டு வந்தவன் துண்டா. இதுதவிர வேறு பல இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் தொடர்பாகவும், அவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

துண்டாவின் உத்தரவின் பேரில், டில்லியில், 24, அரியானாவில், ஐந்து,உ.பி.,யில், மூன்று குண்டு வெடிப்புகளை, பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தை சேர்ந்த, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர்.டில்லியில், 2010ல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்த போதும், குண்டு வெடிப்புகளை நிகழ்த்த சதித் திட்டம் தீட்டியிருந்தான். 

ஆனால், சரியான நேரத்தில், இவனது கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்டதால், நிகழவிருந்த மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவ முக்கிய குற்றவாளி, தாவூத் இப்ராகிமுக்கு நெருக்கமான துண்டாவை கைது செய்ய, 1996ம் ஆண்டே, சர்வதேச போலீஸ் மூலம், எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்டது. 

கைதான அவனிடம் விசாரணை நடத்துவதன் மூலம், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின், பல சதித் திட்டங்கள் அம்பலமாகும்.கடந்த, 1998ல், காஜியாபாத்திலிருந்து வங்கதேசம் சென்று, அங்கிருந்து பாகிஸ்தான் சென்றுள்ளான்.இவ்வாறு, ஸ்ரீவத்சவா கூறினார்.

நன்றி :-யாஹூ நியூஸ்

0 comments:

Post a Comment

Kindly post a comment.