Monday, August 5, 2013

வருகிறது ,போஸ்ட் பேங்க் ஆப் இந்தியா : அஞ்சல்துறைக்கு 1,300 கோடி நிதி உதவி !

வங்கிச் சேவையில் களமிறங்க இந்திய அஞ்சல் துறைக்கு மத்திய அரசு ரூ.1,300 கோடி மூலதன உதவி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டு இறுதிக்குள் தேர்வு

புதிதாக வங்கிகள் தொடங்க டாட்டா, பிர்லா, அனில் அம்பானி குழும நிறுவனங்கள் உள்பட 26 நிறுவனங்கள் பாரத ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பித்து இருந்தன. இவற்றுள் இந்திய அஞ்சல் துறையும் ஒன்றாகும். இவற்றுள் தகுதி வாய்ந்த நிறுவனங்களை இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் ரிசர்வ் வங்கி தேர்வு செய்ய உள்ளது.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி புதிதாக தொடங்கப்படும் வங்கியின் அளிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.500 கோடியாக இருக்க வேண்டும். இந்த நிதிக்காகவும், இதர செலவினத்திற்காகவும் ரூ.1,300 கோடி நிதி உதவி அளிக்கும்படி நிதி அமைச்சகத்திடம் இந்திய அஞ்சல் துறை சென்ற மாதம் கோரி இருந்தது. இது குறித்து இம்மாத இறுதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அலுவலகங்கள்

இந்திய அஞ்சல் துறை தனது அலுவலகங்களை வங்கிச் சேவைக்காக பயன்படுத்தும். இத்துறைக்கு நாடு முழுவதுமாக 1.54 லட்சம் அலுவலகங்கள் உள்ளன.

இவற்றுள் 1.39 லட்சம் அலுவலகங்கள் கிராமங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிச் சேவையில் களமிறங்க விரும்பும் பொதுத் துறை மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் தமது கிளைகளில் 25 சதவீதத்தை வங்கி வசதி இல்லாத கிராமப்புறங்களில் தொடங்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் நிபந்தனையாகும்.

முதலில் 50 கிளைகள்

இந்திய அஞ்சல் துறை முதல் ஆண்டில் 50 கிளைகளிலும், ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 150 கிளைகளிலும் வங்கிச் சேவை அளிக்கத் திட்டமிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைத்ததும் இந்திய அஞ்சல் துறை போஸ்ட் பேங்க் ஆஃப் இந்தியா என்ற பெயரில் வங்கிச் சேவையில் ஈடுபடும் என கூறப்படுகிறது.                                                                                                                               

நன்றி :- தினத்தந்தி, 05 - 08 - 2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.